Friday, February 10, 2012

* கோயில் சுவர்களில் வெள்ளை, காவி பட்டை இருப்பதன் நோக்கம் என்ன

** கோயில் சுவர்களில் வெள்ளை, காவி பட்டை இருப்பதன் நோக்கம் என்ன?

வெண்மை தூய்மையின் சின்னம். காவி தியாகத்தின் அடையாளம். கல்வி கற்பவன் தூய உள்ளத்தோடு ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக சரஸ்வதி வெண் தாமரையிலு<ம், செம்மையான(நேர்மை) வழியில் பொருள் தேட வேண்டும் என்பதற்காக திருமகள் செந்தாமரையிலும் இருப்பதையும் பார்க்கலாம். பக்திக்கு தூய்மையும், நேர்மையும் அவசியம் என்பதே பட்டை அடிப்பதின் நோக்கம். இப்பண்புகளை நம்மிடம் வளரச் செய்யும் இடமாக கோயில்கள் திகழ்கின்றன.

*பூஜையறையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்?

இரு தீபங்கள் ஏற்ற வேண்டும். ஒன்று பிரதான விளக்கு . அதை தெய்வமாக வணங்க வேண்டும். மற்றொன்று துணை விளக்கு. பத்தி, சூடம் ஏற்ற துணை விளக்கையே பயன்படுத்த வேண்டும்.

* குரு,சனி, ராகு-கேது பெயர்ச்சி பெறுவது போல் மற்ற கிரகங்களும் தானே பெயர்கின்றன. இதை ஏன் கிரகப்பெயர்ச்சியாக குறிப்பிடுவதில்லை?

குரு, சனி, ராகு- கேது ஆகியவை வருஷ கிரகங்கள். மற்றவை மாத கிரகங்கள். குறிப்பாக, சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாளே இருக்கும். இவற்றின், கிரகப்பெயர்ச்சி பலன்கள் ஓரிரு மாதங்களே நீடிக்கும். இவற்றின் பெயர்ச்சிகளை பஞ்சாங்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். வாரபலன், மாதபலன்களை இந்தப் பெயர்ச்சியால் தெரிந்து கொள்ளலாம்.

* பயபக்தியுடன் வழிபடவேண்டும் என்று சொல்கிறார்களே. இறைவனிடம் பயப்படுவது சரியா? விளக்கம் தேவை.

நமக்கு மேலான ஒரு சக்தி இருக்கிறது என்ற நிலையில் மனிதன் பயம் கொள்கிறான். ஆனால், இந்த பயம் நீடிப்பதில்லை. கனிந்து பக்தியாக மாறுகிறது. காய் நிலையில் பயம். பழுத்த நிலையில் அன்பால் பக்தனின் மனம் கனிந்து விடுகிறது. இதையே அன்பே சிவம் என்று குறிப்பிடுவர்.

* காசிக்கு அவசியம் சென்று வரவேண்டுமா?

காசியாத்திரையை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையாவது செய்ய வேண்டும். பெற்றோர் இருந்தால் அவர்களையும் அழைத்துச் செல்வது முக்கியம். கங்கையில் நீராடுவதால் நம் முன்வினைப் பாவம் நீங்கும்.

* சித்தர்களின் பாடல்களை கோயில் வழிபாட்டில் பாடலாமா?

தாராளமாகப் பாடலாம். நாயன்மார்களில் ஒருவரான திருமூலர் சித்தர்களில் ஒருவர் தானே. இவர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக பன்னிருதிருமுறையில் இடம்பெற்றுள்ளது. 

1 comment:

  1. இன்றைய தேதியில் கங்கையில் நீராடினால் புற்று நோய் தான் வரும் என்று ஆய்வு சொல்கிறது

    ReplyDelete