Thursday, February 9, 2012

அனுமன் பற்றிய செய்திகள்


அனுமனின் குரு 

அனுமனுக்கு குருவாக இருந்து கல்வி கற்றுக்கொடுத்தவர் சூரிய பகவான். அவருக்கு நன்றி கடன் பட்டிருந்த அனுமன், ""தங்களுக்கு குருதட்சணையாக என்ன தர வேண்டும்? என கேட்டார். சூரியன், தன் மகன் சுக்ரீவனுக்கு மந்திரியாக இருந்து அவனை வழிநடத்திச் செல்லும்படி கூறினார். அதன்படியே ஆஞ்சநேயர் சுக்ரீவனுடன் இருந்து, சூரியனுக்கு தன் நன்றியை செலுத்தினார்.

சிரமம் நீக்கும் சுந்தரகாண்டம்

இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம். அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது. ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன்; மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம். "ராமா' என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன். "ராமா' என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம். ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன். அனுமன் மற்றும் சுந்தரகாண்டம் ஆகிய ரத்தினங்களின் மதிப்பை அறிந்தவர்கள் அதை நழுவ விட மாட்டார்கள். தினமும் அனுமனை வணங்கி, சுந்தரகாண்டத்தின் ஒரு ஸர்க்கத்தைப் படியுங்கள். வாழ்வில் சிரமம் அணுகாது.

அனுமன் பெயர்க்காரணம்

 ஒருமுறை குழந்தை அனுமன் வானில் சூரியன் உதயமாவதைப் பார்த்து அதை பழமென நினைத்து பறிக்கச் சென்றான். அந்நேரத்தில் ராகுவும் அதை பிடிக்க வந்தான். குழந்தையின் வேகம் கண்ட ராகு பயந்து போய் இந்திரனைச் சரணடைந்தான். அவன் அனுமனை அடித்து கீழே தள்ளினான். அந்த அடியில் அனுமனின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தோள்பட்டை எலும்பை "ஹனு' என்பர். எனவே அவர் "ஹனுமான்' ஆனார். தமிழில் "அனுமன்' என்கிறோம்.



ராமனுக்கு நிகரான புகழ் ஆஞ்சநேயரும் உள்ளனர்.
தசரத மகாராஜாவுக்கு குழந்தைகள் இல்லை. புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, பாயாசம் பெற்று தன் தேவியருக்கு கொடுத்தார். ராம சகோதரர்கள் பிறந்தனர். இதன் ஒரு பகுதியை, வாயுபகவான், அஞ்சனையிடம் கொடுத்தார். அவளும் கர்ப்பவதியாகி ஆஞ்சநேயரைப் பெற்றெடுத்தாள். எனவே, சம வலிமையுள்ளவர்களாக ராமனும், ஆஞ்சநேயரும் உள்ளனர். இதனால் ராமனின் அளவுக்கு, ஆஞ்சநேயருக்கும் புகழ் ஏற்பட்டது என்று மராட்டிய மாவீரர் சிவாஜியின் குரு ராமதாசர் ஒரு கதையில் கூறியுள்ளார். சத்குரு தியாகப்பிரம்மம் தனது கீர்த்தனையில், அனுமனை ருத்ரனின் அம்சம் என்கிறார். அதாவது சிவாம்சம் பொருந்தியவர் அனுமன்.


ராமதூதர் அனுமனுக்கு என்ன மாலை அணிவிக்கப் போகிறீர்கள்!
ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம். அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். "இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான். எலுமிச்சம்பழம் ராஜாக்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், சம்ஹார தொழில் செய்யும் காவல் தெய்வங்களுக்கும் மிகவும் பிடித்தமானது. நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துவர். வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர். வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீங்கும்.


 நாம் உலகை எந்த நோக்கில் பார்க்கிறோமோ அதன்படி தான் நமக்கு அது தெரியும்'


ராமதாசர், ராமாயணம் எழுதிக் கொண்டிருந்த போது தனது சீடர்களுக்கு, அதைப் படித்துக் காட்டுவார். அப்போது யாரும் அறியாமல் அனுமன் அங்கு வந்து அமருவார். ஓரு முறை அசோகவனத்தில் வெள்ளை மலர்களை அனுமன் பார்த்ததாக ராமதாசர் சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அனுமன், ""நான் வெள்ளை மலர்களை பார்க்கவில்லை, சிவப்பு மலர்களை தான் பார்த்தேன்'' என்றார்.
ராமதாசர் அதை மறுத்தார். ""பார்த்த நானே சொல்லும் போது திருத்திக் கொள்ள வேண்டியது தானே'' என அனுமான் வாதிட, வழக்கு ராமனிடம் சென்றது. அவர், ""ஆஞ்சநேயா! நீ பார்த்து வெள்ளை மலர்களைத் தான்'' என தீர்ப்பளித்தார். அதற்கான விளக்கத்தையும் அவர் சொன்னார். ""அசோகவனத்தில் நீ இருந்த போது, உனது கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன. அதனால் அந்த மலர்களும் சிவப்பாக தோன்றின. நாம் உலகை எந்த நோக்கில் பார்க்கிறோமோ அதன்படி தான் நமக்கு அது தெரியும்' என்றார்.


அனுமன் ஜெயந்தி
அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன்ஜெயந்தியன்று ஸ்ரீ ராமஜெயம் சொல்வதுடன், ராமனின் புகழ் பரப்பும் பாடல்களை பாட வேண்டும். ஹனுமான் சாலீசா சொல்லலாம். அனுமனுக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் சாத்தி வழிபடலாம்.


அனுமனுக்கு ஏன் குரங்கு முகம்

உலக நன்மைக்காக அனைவராலும் கேலி செய்யப்படும் குரங்கின் முக வடிவை விரும்பி ஏற்றுக் கொண்டவர் அனுமன். தன்னிலும் தாழ்ந்தவர்களை ஆதரித்து, பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை இந்த வடிவம் வலியுறுத்துகிறது. அவரிடம் தன்னைப் பற்றிய நினைப்பதென்பது சிறிது கூட இல்லை. உலக ஜீவன்கள் எல்லாரிலும் உயர்ந்தவர், தெய்வமகன், புத்திமான். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர், புண்பட்ட உள்ளங்களுக்கு மருந்து தடவும் மாருதி. நல்லவர்களைக் காப்பாற்றும் சமய சஞ்சீவி.

சஞ்சீவி மலை
 இலங்கையில் ராவணனுடன் போர் செய்த போது லட்சுமணன் மூர்ச்சையானான். அவனை எழுப்ப ஒரு மூலிகையைப் பறித்து வரும் படி அனுமனை அனுப்பினார் ராமன். எந்த மூலிகை எனத்தெரியாததால் ஒரு மலையையே பெயர்த்துக் கொண்டு வானவெளியில் பறந்து வந்தார் அனுமன்.

துவங்குவது ஆனைமுகனிடம் முடிவது அனுமனிடம்!


விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். "ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.

ஆஞ்சநேயரை நான்கு வகையாக சிலை வடிப்பதுண்டு


ஆஞ்சநேயரை நான்கு வகையாக சிலை வடிப்பதுண்டு. இரண்டு கரங்களையும் இணைத்து கூப்பி தலைமேல் வைத்து வணங்கும் நிலையில் உள்ளவர் "பக்த அனுமான்'. கூப்பிய கையை மார்புக்கு நேராக வைத்திருந்தால், "அபயஹஸ்த அனுமான்'. ஓரு கையில் கதையும் மற்றொரு கையில் சஞ்சீவி மலையும் கொண்டிருந்தால் "வீர அனுமான்'. ராமனை தன்தோள் மேல் சுமந்தபடி ஐந்து முகங்கள் கொண்டிருந்தால் "பஞ்சமுக ஆஞ்சநேயர்'. பத்துகைகளுடன் விளங்கும் ஆஞ்சநேயர் "தசபுஜ ஆஞ்சநேயர்'.

அனுமன் ஜெயந்தி விரதம்


அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார். "வியாகரணம்' என்றால் "இலக்கணம்'. அனுமனின் குருவை நமது குருவாக மதித்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். துளசிதாசர் எழுதிய அனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். இதை சொல்ல இயலாதவர்கள் இதன் பொருளை வாசிக்கலாம். மாலையில் 1008 முறைக்கு குறையாமல் "ஸ்ரீராம ஜெயம்' சொல்ல வேண்டும். அவரது கோயிலுக்குச் சென்று வெண்ணெய், வெற்றிலை, வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகம் நோட்டு தானம், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இரவில் தூங்கும் முன் "ஸ்ரீராம ஜெயம்' என 108 முறை சொல்ல வேண்டும். உடல்நிலை ஆரோக்கியமானவர் கள் சாப்பிடாமல் இருக்கலாம். மற்றவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.

 வெண்ணெய் சாத்துவது ஏன்?

ராமசேவைக்காக தன் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட்ட காயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறைய குளிர்ந்த பொருள் பூசுவது இயல்பு தானே! அதனால் தான், அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் வழக்கம் ஏற்பட்டது. உலகியல் ரீதியாக இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டாலும், ஆன்மிகக் கருத்து வேறு மாதிரியானது. வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.  வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.


பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு என்ன படைப்பது
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அனுமன் முகம் கிழக்கு நோக்கி இருக்கும். இந்த முகத்திற்கு வாழைப்பழமும், கொண்டைக்கடலையும், தெற்கு நோக்கிய நரசிம்ம முகத்திற்கு பானகமும், நீர்மோரும், மேற்கு நோக்கிய கருட முகத்திற்கு தேன் படைக்க வேண்டும். வடக்கு பார்த்த வராக முகத்திற்கு சர்க்கரைப்பொங்கல், வடையும் படைக்க வேண்டும். மேல் நோக்கிய ஹயக்ரீவ முகத்துக்கு படையல் அவசியமில்லை.

பக்திக்கு தேவை மனம்

ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்.
""மாணவர்களே! அனுமன் இலங்கைக்குச் செல்ல கடலைத் தாண்ட வேண்டியிருந்தது. இவரால் இது முடியுமா என மற்ற குரங்குகள் சந்தேகப்பட்டன. அவர் என்ன செய்தார் தெரியுமா? ஆழ்ந்து கண்களை மூடி ஸ்ரீ ராமனைத் தவிர மற்றெல்லாவற்றையும் மறந்துவிட்டு, ""ஜெய் ஸ்ரீ ராம்' என்றார். ராமநாம மகிமையால், பெரிய உருவமெடுத்து இலங்கை போய் சேர்ந்தார்,'' என்றார். இதைக் கேட்ட ஒரு சிறுவன் மாலையில் வீடு திரும்பும் போது வழியில் குறுக்கிட்ட கால்வாயைத் தாண்ட நினைத்தான். ஆசிரியர் சொன்னபடியே, "ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்லியபடியே கால்வாயைத் தாண்டினான். கண்விழித்து பார்த்தால், தண்ணீருக்குள் கிடந்தான். மறுநாள் ஆசிரியரிடம் நடந்தைச் சொன்னான்.
""மாணவனே! பயந்தபடியே கால்வாயைத் தாண்டியிருப்பாய். ராமனின் நாமத்தை மனதார பயபக்தியுடன் சொல்லியிருக்க வேண்டும். அனுமன் அந்த மந்திரத்தைச் சொல்லும் போது அவருடைய ராம பக்தியை மதிப்பிட அளவுகோலே இல்லாமல் இருந்தது,'' என்றார்.
பக்திக்கு தேவை ஈடுபாடுள்ள மனம். அதை அனுமனிடம் கேட்டுப் பெறுவோம்.

 எதுவும் கேட்காத இதய தெய்வம்!


அனுமன் ஜெயந்தியன்று, அவரைத் தரிசிக்க வெண்ணெய் வாங்க முடியவில்லை, வெற்றிலை வாங்க முடியவில்லை, வடைமாலை அணிவிக்க முடியவில்லை என்ற வருத்தமெல்லாம் வேண்டாம். பணமிருந்தால் இதை செய்யலாம். முடியாத பட்சத்தில், அவருக்குப் பிடித்தமான "ஸ்ரீராம ஜெயம்' சொல்லி வணங்கினாலே போதும். அவரது அருள் கிடைக்கும். எதையும் எதிர்பாராத இதயதெய்வம் அவர்.
ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். சீதையை மீட்டு வருவதற்காக அவர் ராமனிடம் எந்தவித பிரதிபலனையும் கருதவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டு வந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரிய செயல்களை அவர் செய்தார்.
தன் அறிவைப் பற்றியோ, தொண்டைப்பற்றியோ பிறரிடம் தற்பெருமையாக சொன்னதே இல்லை. ""நான் ராமனின் சாதாரண தூதன், அவர் பணியை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன். எனக்கு ராமனின் கிருபையால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யம் போது நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன்,'' என்று சொன்னார்.
ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக மூடிசூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ ராமனிடம் எதுவும் கேட்கவில்லை.
இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன்,"" உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர்,'' என்றார்.
""நீ எப்படி கடலைத் தாண்டினாய்?'' என ராமன் கேட்டார். அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, "எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால்'' என்றார்.
தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.


நான் நன்றி சொல்வேன் என் சீடனுக்கு!
அனுமனின் தலைவனான ராமனிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நன்றி மறவாமை. எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும், கஷ்டப்பட்ட காலத்தில் நமக்கு உதவி செய்தவர்களை மறக்கக்கூடாது. பகவான் மகாவிஷ்ணு ராமனாக அவதாரம் செய்தபோது, சீதையை மீட்பதற்கு அவரது சீடரான அனுமன் உறுதுணையாக இருந்தார். அவருக்கு நன்றிக்கடன்பட்டவராக இருந்த மகாவிஷ்ணு, அனுமன் தன்னிடம் கொண்டிருந்த அன்பிற்கு அடையாளமாக, ""இந்த உலகம் உள்ளவரை உன் புகழும் பூமியில் நிலைத்திருக்கும். உனக்கு எவ்வளவு கொடுத்தாலும் நான் உனக்கு என்றும் கடனாளியாகத்தான் இருப்பேன்,'' என்றார். அனுமனை வணங்கினால் மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அனுமனை பற்றிய பல செய்திகள்


ராமா, ராமா
அனைத்து கிரக தோஷங்களுக்கும் அனுமனை வழிபடுகிறோம். அவருக்கு ராம நாமம் பிடிக்கும். ராமா, ராமா என்று தினமும் சொல்லுங்கள், அனுமத் ஜெயந்தியன்று ஸ்ரீராம ஜெயத்தை நாவினிக்க சொல்லுங்கள். அவரருள் உடன் கிட்டும்.

எந்தக்கிழமையில் என்ன செய்வது?
திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம்.

அனுமனும் ராமனும்
அனுமன் பிறர் நலமே தன்னலம் என நினைத்தவர். சுயநலமில்லாமல் ராமனுக்கு சேவை செய்தவர். அப்படிப்பட்டவர்களுக்கு கடவுளின் அருகில் இடம் பதிவு செய்யப்படும் என்பதை உணர்த்தவே, ராமன் அனுமனை தன்னருகில் அமரச் செய்துள்ளார்.

சங்கு சக்கர ஆஞ்சநேயர்
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில், சுவாமி சந்நிதி எதிரே ஆஞ்சநேயர் சங்கு சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாறுபட்ட கோலமாகும்.

ராம பாராயண ஆஞ்சநேயர்
ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயில் அருகேஉள்ள நந்தவனத்தில் ராமநாமம் பாராயணம் செய்யும் கோலத்தில் அனுமன் வீற்றிருக்கிறார். அருகே ராமர், பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார்.

அனுமனை வணங்குவதன் பலன்
அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.

கிருஷ்ணனுக்கும் பிரியமானவர்
அனுமன் ராமனுக்கு மட்டுமல்ல! ராமாவதாரத்தை அடுத்து வந்த கிருஷ்ணாவதாரத்தில், அர்ஜுனனின் கொடியில் இருந்தவர் அவர். அவரது முன்னிலையிலேயே, கிருஷ்ணன் கீதையைப் போதித்தார்.

கண் கொடுக்கும் ஆஞ்சநேயர்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேரடியின் கீழ் கண்கொடுக்கும் ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். வெண்பாப்புலி வேலுசாமி பிள்ளை என்பவர் ஆஞ்சநேய புராணம் என்ற துதிபாடி இழந்தபார்வையை மீண்டும் பெற்றார்.

பெருமாள் அருகில் அனுமன்
ராமர் அருகில் மட்டுமில்லாமல், தேனி அருகிலுள்ள சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் மூலஸ்தானத்தில், பெருமாள் அருகிலும் அனுமனைத் தரிசிக்கலாம்.

கீதைக்கு உரை எழுதியவர்
கீதைக்கு பலர் உரை எழுதியுள்ளனர். "பைசாசம்' என்ற மொழியில், ஆஞ்சநேயர் கீதைக்கு பாஷ்யம் (விளக்கவுரை) எழுதியதாகச் சொல்வர்.

இலக்கண பட்டதாரி
சிறந்த கல்விமானான அனுமனை, "நவ வ்யாகரண வேத்தா' என்பர். அதாவது, அவர் ஒன்பது வகையான இலக்கணத்தையும் படித்தவர். புத்தி, சக்தி இரண்டும் அவரிடம் இருந்தது.

ஒரே சிலையில் மூன்று வடிவம்
உ.பி. கான்பூரிலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள பங்கிஆஞ்சநேயர் கோயிலில், காலையில்அனுமன் குழந்தை வடிவிலும், மதியம் இளைஞனாகவும், மாலையில் வீர புருஷராகவும் காட்சி தருகிறார்.

வீரமங்கள ஆஞ்சநேயர்
நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பொரவச்சேரி ராமபத்ர பெருமாள் கோயிலில் வீரமங்கள ஆஞ்சநேயர், வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை வடக்கு நோக்கி மடித்து வைத்த நிலையில் தரிசனம் தருகிறார்.

துஷ்ட நிக்ரஹ அனுமான்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை செல்லும் வழியில் உள்ள சிறு குன்றில் துஷ்ட நிக்ரஹ அனுமான் அருள்பாலிக்கிறார். வலது கைபக்தர்களின் துன்பங்களைஅறைந்து விரட்டுவது போல வடிக்கப்பட்டுள்ளது.

ஊருக்கு ஒரு பெயர்
அனுமனை கர்நாடகத்தில் ஹனுமந்தையா, ஆந்திராவில் ஆஞ்சநேயலு, மகாராஷ்டிராவில் மாருதி, சில வட மாநிலங்களில் மகாவீர் என்று அழைக்கின்றனர்.

கெடாத வடைமாலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள வீர அழகர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அணிவிக்கும் வடைமாலை நீண்டநாள் கெடுவதில்லை.

வாயைப் பொத்திய ஆஞ்சநேயர்
ராமனின் முன்பு தலையை குனிந்து, வாய் பொத்தி, மிகுந்த மரியாதையுடன் உள்ள அனுமன் சிலை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ராமசாமி கோயிலில் உள்ளது.

ராமநாம மகிமை
ராம நாமம் சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவார்கள். அனுமன் ஓயாமல் ராமநாமம் சொன்னதால் தான், கடலைத் தாண்ட முடிந்தது. முடியாததையும் முடித்து வைப்பது ராமநாமம்.






2 comments:

  1. ஆஞ்சநேயரின் மகிமையை தெரிவித்ததற்கு நன்றி

    ReplyDelete
  2. RAMA NAAMAM VALKA, ANUMAN PUGAL VALKA,
    JAI SRI RAM
    JAI SEETHARAM

    ReplyDelete