Wednesday, March 14, 2012

குருபெயர்ச்சி தக்ஷிணாமூர்த்திக்கா?

குருபெயர்ச்சி தக்ஷிணாமூர்த்திக்கா?
குரு என்ற சொல்லுக்கு அறியாமையை-இருளைப்போக்கி ஞானத்தை,ஒளியை தருபவர் என்று பொருள்.இச்சொல்லால் நாம் இரண்டு தெய்வங்களை குறிப்பிடுகிறோம்.
1.தக்ஷிணாமூர்ண்தி
2.வியாழ பகவான் எனும் பிரகஸ்பதி


1.தக்ஷிணாமூர்த்தி:
தக்ஷிணம் என்றால் தெற்கு.தெற்கு நோக்கி வீற்றிருப்பதால் இவரை தக்ஷிணாமூர்த்தி என்றழைக்கிறோம்.சிவாலயத்தில் கருவறையின்
வெளிப்புறத்தில்,கோஷ்டத்தில் கோஷ்ட மூர்த்தியாக இவர் அமர்ந்துள்ளார்.(வினாயகர்,லிங்கோத்பவர்,பிரம்மா,துர்க்கை ஆகியோர் மற்ற

கோஷ்ட மூர்த்திகள்.<சில கோயில்களில் அமர்ந்த வினாயகருக்கு பதிலாக நர்த்தன வினாயகரும்.லிங்கோத்பவர் உள்ள இடத்தில் மஹாவிஷ்ணுவும் இருப்பர்)


தக்ஷிணாமூர்த்தி யார்?:
தக்ஷிணாமூர்த்தி கோஷ்ட மூர்த்தியே தவிர அவருக்கு ஆகம முறைப்படி தனிச் சன்னதி இல்லை.சிவபெருமானுக்குறிய 64 திருமேனிகளுள் 25 திருமேனிகள் "மாஹேஸ்வர மூர்த்தங்கள்"எனப்படும்.அம் மாஹேஸ்வர மூர்த்தங்களுள் தக்ஷிணாமூர்த்தியும் ஒருவர்.எனவே தக்ஷிணாமூர்த்தி,சிவபெருமானின் ஒரு சொரூபமே ஆவார்.இவர் மேலான ஞானத்தை அருளும் ஞான குரு.

நன்கு கற்று வல்லவர்களான சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத்குமாரர் என்னும் நான்கு மகரிஷிகளுக்கும் கல்லால மரத்தின் கீழிருந்து மௌனமாகச் சின்முத்திரை காட்டி உபதேசம் செய்து ஞானத் தெளிவை தந்தவர்.


தக்ஷிணாமூர்த்தியின் வடிவம்:

இவர் கல்லால மரத்தின் கீழிரிந்து இடக்காலை மடித்து,வலக்காலை தொங்கவிட்டு,அக்காலின் கீழ் முயலகன் எனும் அசுரன் இருக்க,நான்கு கரங்களுடன்-மேற்கரங்கள் இரண்டில் ஜபமாலை மற்றும் மழுவும் இருக்க.கீழ்க்கரங்கள் இரண்டில் வலக்கரம் சின்முத்திரை காட்ட,இடக்கரத்தில் சுவடி ஏந்தி காட்சிதருகிறார்.ஈச்வரனுடைய மூவகை வடிவங்களுள் தக்ஷிணாமூர்த்தி வடிவம் யோகவடிவம் ஆகும்.இவரிடம் உபதேசம் பெற்ற நான்கு மகரிஷிகளும் இவருடைய திருவடிக்கீழ்,வரிசையாகவோ,பக்கத்துக்கு இருவராகவோ கைகூப்பி அமர்ந்திருப்பர்.இவர் உபதேசித்தது மௌனமாக இருந்து சின்முத்திரை காட்டி ஞானத்தெளிவை தந்ததாகும்.தக்ஷிணாமூர்த்திக்கு 1.சின்முத்திரை,2.ஞான முத்திரை ஆகிய இரண்டும் உண்டு.
இவருக்கு ஆலமர் செல்வர்,தென்முகக் கடவுள்,தென்னவன் என்னும் பெயர்களும் உண்டு.இவர் சிவனின் சொரூபமேயாவார்.இவர் நால்வருக்கும் உபதேசம் செய்தமையால் இவரை உபதேச குரு என்கிறோம்.இவரை குரு மூர்த்தம் என்றும் அழைப்பர்.இவர் இடம்பெயர்வதில்லை.எனவே இடப்பெயற்ச்சி என்பது இவருக்கு கிடையாது.இவருக்கு மஞ்சள் துணியோ,கொண்டைகடலை மாலையோ,முல்லை மலரோ அணிவிக்கவேண்டாம்.சிவபெருமானுக்கு உரிய பூஜை பொருட்களே இவருக்கும்.


2.வியாழ பகவான்(பிரகஸ்பதி):
இவர் தேவர்களுக்குக் குருவாக விளங்குபவர்.ஆங்கீரச மகரிஷிக்கும் சிரத்தா தேவிக்கும் புதல்வராகப் பிறந்தவர்.காசியில் சிவபெருமானை வழிபட்டு,தேவர்களுக்கு குருவாக ஆகும் பதவியை பெற்றவர்.

இவரை வியாழ பகவான் என்றும் அழைக்கிறோம்.நவகிரகங்களுள் "குரு" என்றழைக்கப்படும் இவர்,நவகிரக மண்டலத்தில் ஐந்தாவதாகச் சூரியனுக்கு வடக்கில் விளங்குபவர்.இவர் சுபகிரகம்.நல்ல பலன்களைக் கொடுப்பவர்.குருபலன் கூடினால்தான் திருமணம் முதலிய சுபச் செயல்கள் நடைபெறும் என்கிறது ஜோதிடம்.
1867ல் வெளியிடப்பட்டுள்ள பழைய ஜோதிட நூல் ஒன்றில் உள்ள நவகிரகங்களின் பட்டியலில் வியாழ பகவானுக்கு 18 பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன.அவை
1.அந்தணன்,
2.அமைச்சன்
3.அரசன்
4.ஆசான்
5.ஆண்டளப்பான்
6.குரு
7.சிகிண்டிசன்
8.சீவன்
9.சுரகுரு
10.தாராபதி
11.தெய்வமந்திரி
12.நற்கோள்
13.பிரகஸ்பதி
14.பீதகன்
15.பொன்னன்
16.மறையோன்
17.வேதன்
18. வேந்தன்
இவற்றிலிருந்து வியாழ பகவான்,பிரகஸ்பதி,குரு,...என்பவரெல்லாம் ஒருவரே என்பது தெரிகிறது.இவருடைய சக்தி-தாரா,நிறம்-பொன்னிறம்,வாகனம்-யானை(அன்னமும்,குதிரையும் கூட வாகனமாகச் சொல்வர்).நான்கு கரங்களில் ஜபமாலை,யோகதண்டம்,கமண்டலம்,வரதம் கொண்டவர்.

நவகிரக ஸ்தலங்கள்:
நவகிரகங்களுக்குறிய வழிபாட்டு தலங்கள்,பல புராணங்களில் பலவாராகச் சொல்லப்பட்டபோதிலும்,பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலங்கள் பின்வருமாறு.
1.சூரியன்-சூரியனார்கோயில்
2.சந்திரன்-திருப்பதி
3.செவ்வாய்-பழனி
4.புதன்-மதுரை
5.வியாழன்-திருச்செந்தூர்
6.சுக்கிரன்-ஸ்ரீரங்கம்
7.சனி-திருநள்ளார்
8.ராகு}
9.கேது}காளஹஸ்தி

இக்காலத்தில் இம்முறை மாறிவிட்டது.இன்று நாம் செல்லும் யாத்திரை பின்வருமாறு,

1.சூரியன்-சூரியனார்கோயில்
2.சந்திரன்-திங்களூர்
3.செவ்வாய்-வைத்தீஸ்வரன் கோயில்
4.புதன்-திருவெண்காடு
5.வியாழன்-ஆலங்குடி
6.சுக்கிரன்-கஞ்சனூர்
7.சனி-திருநள்ளார்
8.ராகு-திருநாகேஸ்வரம்
9.கேது-கீழ்ப்பெரும்பள்ளம்

சூரியன்,சனி நீங்களாக மற்ற கிரகங்களுக்குறிய தலங்கள் மாறியுள்ளன.இவற்றுள் வைத்தீஸ்வரன் கோயில்,திருவெண்காடு,ஆலங்குடி,கஞ்சனூர்,திருநாகேஸ்வரம் முதலியவை பாடல்பெற்ற சிவத்தலங்கள்.ஆனால் இவை இன்று நவகிரக ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.இது கால வேறுபாட்டால் நேர்ந்த விளைவு.கோயில் விளம்பரங்கள் அவற்றை நவகிரக கோயில்களாகவே மாற்றியுள்ளன.
இக்கோயில்களில் நவகிரகச் சன்னிதிகள் பழமையாக அமைந்துள்ளபோதிலும்.அந்தந்த கிரகத்துக்குரிய சந்நிதிகள் தனியாக அமைந்தும் பிற்காலத்தில் அமைக்கப்பட்டும் உள்ளன.கோஷ்ட மூர்த்தியாகிய தக்ஷிணாமூர்த்தி,தனிச்சன்னிதியாக மாற்றப்பட்டுள்ளது!



இன்று நவகிரக யாத்திரையில் குரு வுக்காக மக்கள் ஆலங்குடி செல்கின்றனர்.ஆலங்குடி பாடல் பெற்ற சிவஸ்தலம்.இது தக்ஷிணாமூர்த்தி விசேஷ ஸ்தலம்.இங்கு தக்ஷிணாமூர்த்திக்கு உற்சவத்திருமேனியும் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.பாடல் பெற்ற இச்சிவஸ்தலம் இன்று குருஸ்தலம் என்று மாற்றப்பட்டு,நவகிரக ஸ்தலமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது வேதனைக்குறியது.மக்கள் நவகிரக யாத்திரையில் நவகிரக குரு ஸ்தலமாக நினைத்து ஆலங்குடி சென்று நவகிரக குருவுக்கு செய்யும் அர்ச்சனை,பரிகாரம்,பூஜை,வழிபாடுகளை இங்குள்ள தக்ஷிணாமூர்த்திக்கு செய்கின்றனர்.அக்கோஷ்டம் இன்று தனிச்சன்னிதியாகவே மாறியுள்ளது.இது சரியா?

குருவுக்குள் குழப்பம் :
ஞானம் அருள் வள்ளலாம் தக்ஷிணாமூர்த்தி நம்மால் சிவமாகவே வணங்கத்தக்கவர்.ஆனால் கிரக நிலையில் உள்ள குரு,தக்ஷிணாமூர்த்தியை விட பல படி தாழ்ந்தவர்.இந்த வியாழ குரு ஈச்வர நியதியை தொழிற்படுத்தவல்ல ஒரு கிரகமே ஆவார்.இந்த உண்மை அறியாமல்,அவரினும் தாழ்ந்தவராகிய நவகிரக குருவுக்கு செய்யவேண்டிய பரிகார,வழிபாட்டை உயர்ந்த ஞான குருவாகிய,சிவ அம்சமாக விளங்கக்கூடிய தக்ஷிணாமூர்த்திக்கு செய்யக்கூடாது.எனவே நவகிரக குருவுக்கு செய்யவேண்டிய பூஜைகளை தக்ஷிணாமூர்த்திக்கு செய்யாதீர்கள்.எனவே ஆலங்குடி செல்லுங்கள்.அங்கு குரு கிரகத்திற்கு உரிய பரிகார அர்ச்சனையை அக்கோயிலில் நவகிரக சன்னிதியில் உள்ள குரு வுக்கு செய்யுங்கள்.இதுவே முறை.அங்குள்ள தக்ஷிணாமூர்த்தியை தக்ஷிணாமூர்த்தியாகவே வழிபடுங்கள் நவகிரக குருவாக அல்ல.

குருபெயர்ச்சி:
நவகிரகங்களுள் ஒன்றாக வியாழ பகவான்(குரு)இருப்பதால் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு இடம் பெயர்வது என்பதும்,அவ்வாறு இடம் பெயரும்போது சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடங்களையும் தருவது இயல்பு.குரு பகவான் இடம்பெயர்வதை குருப்பெயர்ச்சி என்கிறோம்.

எனவே குருப்பெயர்ச்சியும் அதையொட்டி செய்யப்படும் விசேஷ வழிபாடுகளும் நவகிரக குருவுக்கே உரியன.

ஈச்வர வடிவமாக விளங்குகின்ற/வழிபடப்பெறுகின்ற உபதேச/ஞான குருவாகிய தக்ஷிணாமூர்த்திக்கும் இந்த குருப்பெயர்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.அதாவது இடம்பெயர்தல் என்பது கிரகங்களுக்கு உரியதே அன்றி சிவ அம்சமாக விளங்கக்கூடிய தக்ஷிணாமூர்த்திக்கு இல்லை.
எனவே குருபெயர்ச்சி காலங்களில் செய்யப்படும் விசேஷ வழிபாடுகளை அந்தந்த சிவாலயங்களில் நவகிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கே செய்யவேண்டும்.அதைவிடுத்து தக்ஷிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம்,கொண்ட கடலை மாலை,முல்லை மலர் இவைகளே அணிவிக்கக்கூடாது.இவை அனைத்தும் நவகிரகத்தில் உள்ள குருவுக்கே செய்யவேண்டும்

No comments:

Post a Comment