Saturday, March 10, 2012

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்


ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 1836-ல் பிறந்தவர். அவரது 177-ஆவது அவதார நன்னாள் இவ்வாண்டு 23-2-2012-.

நமது ஆன்மிக இந்தியாவில் சாதுக்களுக் கும் தபஸ்விகளுக்கும் குறைவே இல்லை. ஆனால் எல்லாருடைய பெயர்களையும் யாவரும் அறிவதில்லை; பிரபலமாவதும் இல்லை. பொதுவாக ஞானிகள் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். என்றாலும் சீடர் களாலும் அன்பர்களாலும் அவர்கள் வெளியுலகுக்குத் தெரிய வருகின்றனர்.

காஞ்சி மகா பெரியவரும் பால் பிரண்டனும் சொல்லாமலிருந்தால், ரமண மகரிஷியை உலகம் பரவலாக அறிந்திருக்காது. பரமஹம்ச யோகாநந்தர் இல்லாவிட்டால் மகா அவதார் பாபாவைப் பற்றி அறிய நேர்ந்திருக்காது. அதுபோல சுவாமி விவேகானந்தர் இல்லாவிடில் ராமகிருஷ்ண ரைப் பற்றியும் வெளியுலகுக்கு பரவலாகத் தெரிந்திருக்காது.

இன்று உலகெங்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆன்மார்த்தமாக வணங்கும் ஆன்மிக குருவாக விளங்கிக் கொண்டிருக் கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அவ்வளவு பேருக்கும் அருவ நிலையில் நின்று அருள்புரியும் பேராற்றல் யாருக்கு இருக்கும்? இறை அவதாரத்துக்கே இருக்கும். ராமகிருஷ்ணரும் ஒரு அவதாரமே.

ராமகிருஷ்ணரின் தந்தை க்ஷீ திராம் சத்தியசீலர். ஒரு பொய் கூற மறுத்ததால், தன் எஜமானரால் ஊரைவிட்டு வெளியேற்றப் பட்டவர். ஒருமுறை அவர் தனது முன்னோர் களுக்கு சிரார்த்த கர்மங்கள் செய்ய கயையில் உள்ள விஷ்ணுபாதம் தலத்துக்குச் சென்றிருந்தார். அன்று இரவு அவர் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, "உமது பக்திக்கு மகிழ்ந்தோம்; உமக்கு மகனாக அவதாரம் செய்வோம்' என்று கூறினாராம். அவரோ, "சுவாமி, நான் பரம ஏழை. என்னால் உங்களை சிறப்பாகப் பராமரிக்க இயலாதே...' என்று கூற, "நீ பக்தியுடன் அளிக்கும் எளிய உணவே போதும்' என்று சொல்லி மறைந் தாராம். கண்விழித்தெழுந்த க்ஷீ திராம் கனவில் கண்டதை எண்ணி பிரம்மித்தார். திருமாலின் பெருங்கருணையை நினைத்து உள்ளம் பூரித்தார். அந்த மனநிறைவோடு தான் வசித்த கமார்புகூர் வந்து சேர்ந்தார்.

அங்கு அவர் மனைவி கூறிய செய்தி அவரை மேலும் ஆச்சரியப்படுத்தியது.

அதாவது- அவ்வூரிலுள்ள சிவாலயத்துக்கு அவள் வழிபடச் சென்றபோது, சிவலிங்கத் திலிருந்து ஒரு பேரொளி தோன்றி அவளுக் குள் புகுந்ததாகவும்; அவள் நெடுநேரம் அங்கேயே மூர்ச்சித்துக் கிடந்ததாகவும்; பின்னர் கண்விழித்தபோது தான் கருவுற்றி ருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் கூறினாள். நெகிழ்ந்த க்ஷீ திராம், "இந்த ஆன்மிக ரகசியத்தை யாரிடமும் கூற வேண்டாம்' என்றார். அவ்வாறு இறையருளால் அவதரித்தவரே ராமகிருஷ்ணர்.

சைதன்ய மகாப்பிரபுவும் இவ்வாறு அவதரித்தவர்தான். ராமகிருஷ்ணரே தான் சைதன்யரின் மறு அவதாரம் என்று கூறினார். சைதன்யர்போல பலருக்கு காட்சி யும் கொடுத்தாராம். சைதன்யர் ஒரு காஷ்ட சந்நியாசி; இருதாரம் மணந்தவர்; படித்த மேதை. ராமகிருஷ்ணரோ கல்வி பயிலாதவர். ஆனால் அவர் பேசியது எல்லாமே வேதாந்தம், உபநிடதம். ராஜாஜி அவர்கள் ராமகிருஷ்ணரின் வாக்குகளை "ஸ்ரீராமகிருஷ்ண உபநிடதம்' என்று கூறியிருக்கிறார்.

ராமகிருஷ்ணரின் அண்ணன் ராம்குமார் தட்சினேஸ்வர காளி கோவிலில் பூசாரியாக பணி செய்து வந்தார். அருகே சிவன், ராதாகிருஷ்ணர் சந்நிதிகளும் உண்டு. இளம் வயது ராமகிருஷ்ணருக்கு கல்வியில் நாட்டமில்லாததால், அண்ணனுக்கு உதவியாக காளி கோவிலுக்குச் சென்றார். ராதாகிருஷ்ணர் சந்நிதியில், சுவாமியின் பாதங்களுக்கு அருகே பாகவதமும், வால்மீகி ராமாயணமும் வைக்கப்பட்டிருக்கும். பாகவதம் கண்ணனின் லீலைகளை விரிவாகக் கூறும் நூல். அங்கு அமர்ந்து ராமகிருஷ்ணர் தியானம் செய்யத் தொடங்கி னார். அவரது பக்தி ஈடுபாட்டின் காரண மாக அந்த ராதாகிருஷ்ணன் பாகவதத்தில் புகுந்தார்; பாகவதம் ராமகிருஷ்ணருக்குள் புகுந்தது. அவர் கூறினார்: "பகவான், பாகவதம், பாகவதன் யாவும் ஒன்றே!' எத்தகைய அத்வைத தத்துவம்!

ராமகிருஷ்ணர் காளி தேவிக்கு பூஜை செய்ய நியமிக்கப்பட்டார். அந்த அன்னையை தியானித்து வணங்கிய ராமகிருஷ்ணர், அவளது தரிசனத்தை வேண்டினார். ஆனால் தரிசனம் கிட்டாமல் நாட்கள் கடந்தன. ஒருநாள் அவரது பக்தி மிகவும் முற்றியது. பவதாரிணி அன்னையின் தரிசனம் காணாமல் இந்த உயிர் எதற்கு என்று தீர்மானித்த அவர், அன்னையின் கரத்திலிருந்த வாளையே எடுத்து தன் தலையை வெட்டப்போக, அன்னை அவருக்கு பிரத்தியட்சமாகக் காட்சி தந்தருளினாள்.

ராமகிருஷ்ணரைப் போன்ற உச்சநிலை பக்தர்களைக் காண்பது அரிது. அன்னைக்கு பூஜை, நிவேதனம் செய்யும் சமயம் பாவ சமாதி நிலை ஏற்பட்டுவிட்டால், தனக்கே பூஜையும் நிவேதனமும் செய்துகொள்வாராம்.

ஒருமுறை அவர் அன்னைக்குப் பூஜை செய்து கொண்டிருக்கும்போது, அரசி ராஸ்மணி தேவி வந்தாளாம். அவளது மனம் முழுமையாக அன்னையிடம் ஈடுபடவில்லை. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அதுபற்றிய கவலை அவள் மனதை ஆக்ரமித்திருந்தது. இதையுணர்ந்த ராமகிருஷ்ணர், "அன்னையின் சந்நிதியில் வேறு நினைவா?' என்று அரசியின் கன்னத் தில் அறைந்தாராம். பார்த்த அனைவரும் என்ன ஆகுமோ என்று அஞ்சி நிற்க, அரசியோ, "தவறு என்மீதுதான்' என்றாளாம்.

பைரவிப் பிராம்மணி என்றொரு யோகினி. அவள் ராமகிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண தட்சிணேஸ் வரத்துக்கு வந்தாள். ராமகிருஷ்ணரின் நடை, பாவனை, முக லட்சணங்களைப் பார்த்ததுமே அவர் ஒரு அவதார புருஷர் என்பதைக் கண்டு கொண்டாள். முதிர்ந்த ஞானிகள் கொண்ட சபையைக் கூட்டி, அவரை பரிசீலனை செய்யச் சொல்லி, அவர் ஒரு அவதார புருஷர் என்று உணர்த்தினாள். சாக்த வழிபாட்டை ராமகிருஷ்ணருக்கு தீவிரமாக போதித்தவள் இந்த யோகினியே. ராமகிருஷ்ணர் எந்த குருவையும் தேடிச் சென்றதில்லை. குருமார்களே இவரைத் தேடிவந்து போதித்தனர்.

ஒருமுறை சீதாராம தரிசனம் காண, பஞ்சவடியில் தன்னை அனுமனாக பாவித்து தவம் மேற்கொண்டார். தீவிர உபாசனையில் அவரருகே ஒரு கருங்குரங்கு வந்து அமர்ந்த தாம். இந்த நிலையில் சீதை அவருக்கு தரிசனம் தந்து அவருள் மறைந்தாளாம்.

அதன்பின் ராமரும் தரிசனம் தந்து அவருள் மறைந்தாராம். எனவே, அனுமனைத் துதித் தால் சீதாராம தரிசனம் காணலாம் என்பர்.

அதுபோல கிருஷ்ண தரிசனம் காண, தன்னை ராதையாக பாவித்து தியானம் செய்தாராம். பெண்களைப்போலவே புடவை, ரவிக்கை, அணிகலன்கள் பூண்டு, பெண்கள்போலவே பேசிப் பாடினாராம்.

அந்த தீவிர மாதுர்ய பக்திரச சாதனையில், ராதா தேவி தரிசனம் தந்து அவருள் மறைய, அவளைத் தேடி வந்த கிருஷ்ணரும் காட்சி தந்து அவருள் மறைந்தாராம்.

சம்புசரண் மல்லிக் என்பவர் ஒரு ஆழ்ந்த கிறிஸ்துவ பக்தர். அவர் ஒருமுறை ராமகிருஷ்ணருக்கு பைபிளைப் படித்துக் காட்டினார். அதைக் கேட்ட ராமகிருஷ்ண ருக்கு ஏசுமீது ஈடுபாடு உண்டாயிற்று. சம்புசரண் வீட்டில் மேரியுடன் உள்ள குழந்தை ஏசுவின் படம் இருந்தது. அதையே உன்னிப்பாக தியானித்தார் ராமகிருஷ்ணர். படம் உயிருடன் பிரகாசித்தது. அதிலிருந்து தோன்றிய ஒளி ராமகிருஷ்ணருக்குள் புகுந்தது. ஏசுவின் நினைவிலேயே மூன்று நாட்கள் மூழ்கியிருந்தாராம். பிரபுதயாள் சர்மா என்ற ஏசுபக்தர் 31-8-1885-ல் அவரைக் கண்டு, ஏசுதான் இந்த ராமகிருஷ்ணர் என்று பூஜித்து வணங்கினாராம்.

அவருக்கு அல்லாமீதும் ஈடுபாடு இருந்தது. தனது ஒன்பதாவது வயதிலேயே கமார்புகூரில் இருந்த மசூதிக்கு நமாஸ் செய்யச் சென்றிருக்கிறார்.

அங்குள்ள அரச மரத்துக்குக் கீழே ஒளிமயமான ஒருவரை தரிசித்து, அந்த உன்மத்த நிலையில் இரண்டரை மணி நேரம் இருந்தாராம். பின்னர், பஞ்சவடியில் 1866-ல் கோவிந்த ராய் என்ற ஸுபி யோகி, குரானைப் பற்றியும் ஸுபி தத்துவங்களையும் ராமகிருஷ்ணருக்கு போதித்திருக்கிறார். அப்போது இஸ்லாமியத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவர், அவர்களைப்போலவே உடையணிந்து "அல்லா அல்லா' என்று ஆழ்ந்து துதித்து நமாஸும் செய்திருக்கிறார். அந்த உச்ச நிலையில் மூன்று நாட்கள் கழிந்தபோது, பெரிய தாடியுடன் கூடிய- ஒளி மிகுந்த முகம்மதுவையும் தரிசித்தாராம்; அவரும் ராமகிருஷ்ணருள் புகுந்தாராம்.

இவ்வாறு எண்ணற்ற தெய்வீக அனுபவங்களைக் கண்டவர் ராமகிருஷ்ணர். அவர் மற்றவர்களுக்கு தெய்வ வடிவங்களில் காட்சியளித்த சம்பவங்களும் ஏராளம்.

அவரது வாழ்க்கை ரகசியம் ருசிக்க ருசிக்கத் திகட்டாத ஆன்மிகப் பேரமுதம்!

No comments:

Post a Comment