Saturday, March 10, 2012

தைப்பூசம்

முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் மட்டுமின்றி, சிவ- வைணவ- அம்மன் கோவில்களிலும் தைப்பூசம் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தைமாத பூச நட்சத்திரத்தன்றுதான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். உமையவள் தன் சக்தியின் மூலம் ஜோதியை வேல் வடிவில் உருவாக்கி முருகனிடம் கொடுத்தாள். இந்த வேல், பிரம்மவித்யா சொரூபமானது என்று சாஸ்திரம் கூறும்.

அந்த வேல் பிறந்தநாள் தைப்பூசத் திருநாள் ஆகும்.

திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக் கரையில் தவமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.

பூச நாளின் பிரதான தேவதை குரு பகவான். கோள்களில் ஞானம் தருபவர். அது போல் நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம்
சிறப்பு வாய்ந்தது. ஆதலால் தைப்பூசத்தன்று புனித தீர்த்தத்தில் நீராடி, குரு பகவானா கிய பிரகஸ்பதியையும், குருவின் குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.

பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்திக் கலசத்திலிருந்து எழுந்து வரும்படி பதிகம் பாடி ஞானசம்பந்தர் அவளை உயிர்ப்பித்தார். இந்த நிகழ்வு தைப்பூசத்தன்று நடந்ததாக மயிலை கபாலீஸ்வரர் தலபுராணம் கூறுகிறது.

நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வேள்வி மலை. இங்குள்ள கோவிலில் முருகப் பெருமான் எட்டடி, எட்டு அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறம் சுமார் ஆறடி, இரண்டு அங்குல உயரத்தில் ஸ்ரீவள்ளி உள்ளாள். வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. எனவே இங்கு தெய்வானை விக்கிரகம் இல்லை. ஸ்ரீவள்ளியை முருகப் பெருமான் திருமணம் புரிந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்ச வம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.

தைப்பூசத் திருநாள் முருகப் பெருமானுக்குரியதாகப் போற்றப்பட்டாலும், தில்லை வாழ் நடராஜப் பெருமானுக்கும் உரிய நாள் என்று புராணம் கூறுகிறது.

ஆதிகாலத்தில் புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்), பதஞ்சலி முனிவர், ஜைமினி முனிவர் ஆகிய மூவருடன், தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவர், முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் உமையவளுடன் இறைவன் நடனம் ஆடினார். அதுவே ஆனந்த நடனம் ஆகும். இந்த அற்புத நிகழ்வு சிதம்பரத்தில் தை மாதத்தில் பௌர்ணமி கூடிய பூசத் திருநாளில் நடந்ததாக புராணம் கூறுகிறது. மேலும் பல திருத்தலங்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்

No comments:

Post a Comment