Sunday, April 1, 2012

சிவலிங்க வழிபாட்டை வீட்டிலேயே செய்வது சரியா?

 திருமணத்திற்குப் பின் பெண்கள் பிறந்த வீட்டு குல தெ#வத்தை வழிபடலாமா?

புகுந்த வீட்டுக் குல தெய்வம் தான் உங்களின் குலதெய்வமும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், தாய்வீட்டு குலதெய்வத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு, தாய் வீட்டுக் குல தெய்வக் கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். இது விசேஷமானதும் கூட.

* ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டை நதியில் விட்டுவிடலாமா?
கோ.பெ. இளந்திரையன், ஸ்ரீபெரும்புதூர்.
ஸ்ரீராமஜெயம் நோட்டில் எழுதுவதற்கு லிகிதநாமஜெபம் என்று பெயர். எழுதிய நோட்டை பூஜையறையில் வைப்பது சிறப்பு. இயலாவிட்டால் ராமநாம வங்கிகளுக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

** வீட்டிலிருந்து கிளம்பும்போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது உண்மைதானா?

சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்னையில்லை.

* வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? விளக்கம் தேவை.

முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.

* அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக் கூடாது என்கிறார்களே, சரிதானா?

எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத்தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது.
திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழங்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும்.

* செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்லுங்கள்.
  செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள்.

* சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்?

நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.


** புனிதமான கோயில் கோபுர சிற்பங்களில் ஆபாச சிலைகள் வடித்திருப்பதன் காரணம் என்ன?

இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், "டிவி' போன்றவை வந்து இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனிதஇனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.

* சுவாமிக்கு சாத்திய மாலையை வாகனத்தின் முன் கட்டிக் கொள்ளலாமா?

சுவாமிக்கு சாத்திய மாலைகள் பிரசாதம் எனும் புனிதப் பெயரையடைகின்றன. இவை காலில் படும்படியாக எங்கும் விழக்கூடாது. வாகனங்களில் கட்டிக் கொள்வதால் அது செல்லும் இடம் எல்லாம் சிதறி விழும். அதன் மீது மற்றைய வாகனங்கள் ஏறிச்செல்வது, நம் காலில் படுவது போன்ற தவறுகள் ஏற்படுகின்றன. இது பாவச் செயல். செய்யக்கூடாது.

* சிவலிங்க வழிபாட்டை வீட்டிலேயே செய்வது சரியா?

என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழி நின்று நம் எல்லார் இல்லங்களிலும் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்தலும் மற்றும் அவரவர் குல வழக்கப்படி தெய்வ விக்ரகங்களை பூஜை செய்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இதற்கு ஆன்மார்த்த பூஜை என்று பெயர். கோயில்களில் செய்யப்படுவது பொது நலனுக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜை. இரண்டும் சரியாக நடந்தால் தான் நாமும் நாடும் சுபிட்சமாய் இருப்போம்.

* பிதுர்தோஷம் ஏன் ஏற்படுகிறது. அதைப் போக்கும் வழி என்ன?

காலம் சென்ற முன்னோருக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனுடைய சந்ததி தழைக்க அவரவர்களது முன்னோர் வழிபாடு எனும் பிதுர் காரியத்தை அவசியம் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் திதி கொடுத்தல், அமாவாசை தர்ப்பணம் செய்தல் போன்றவை பிதுர் காரியங்களாகும். இவற்றைச் சரியாக செய்யாதவர்களுக்கு பிதுர் தோஷம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைப் போக்கிக் கொள்ள ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றில் தில ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகும், பிதுர் காரியங்களாகிய முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி நல்ல குடும்ப வாழ்க்கையும் வம்ச விருத்தியும் உண்டாகும்.

No comments:

Post a Comment