Thursday, April 26, 2012

அடுத்தவர் சொத்தைப் பறிப்பவர்கள், அதை அனுபவிக்கும் பாக்கியமில்லாமல் போய்விடுவார்கள்.

மக்களை ஏமாற்றி சம்பாதிப்பவர்கள், சகோதர பிரச்னையில் சொத்தை அபகரிப்பவர்கள், அடுத்தவரை மிரட்டி பொருளைப் பறிப்பவர்கள்...யாரானாலும் பறித்த சொத்து நிலைக்காது. இதோ ஒரு சம்பவம்.
கலிங்கநாட்டை ஆட்சி செய்த வாகுலனுக்கு இன்பமுகன், நண்பமுகன் என்ற பிள்ளைகள். தன் மறைவுக்குப் பின், மூத்தவன் இன்பமுகன் ஆட்சி நடத்த வேண்டுமென்றும், அவனுக்குப் பின் இளையவன் ஆட்சி செய்ய வேண்டுமென்றும் எழுதி வைத்தான். ஒப்பந்தத்தை எழுதியது மற்றவர்களுக்கு தெரியாது. அன்றிரவே, வாகுலன் இறந்து விட, ஒப்பந்தத்தை இன்பமுகன் எரித்து விட்டான்.
தனக்குப் பின் தன் மகன் நாடாள வேண்டுமென்பது அவன் விருப்பம். தம்பி நண்பமுகனுக்கு பல தொல்லைகள் கொடுத்தான்.
இதையறிந்த நண்பமுகன் மனம் வெறுத்தான். சொந்த சகோதரனே, தனக்கு துரோகம் செய்ததைப் பொறுக்க மாட்டாமல், அரண்மனையை விட்டு வெளியேறினான். காலம் வரும் வரை காத்திருக்க முடிவு செய்தான். அவந்தி தேசத்துக்கு சென்றான். அங்கே, தன்னை இளவரசனாகக் காட்டிக் கொள்ளாமல், போர்ப்பயிற்சி தரும் ஆசிரியராகக் காட்டிக் கொண்டான்.
அந்நாட்டு மன்னன் இளங்கோவன், அவனது திறமை பற்றி கேள்விப்பட்டு, தன் அந்தரங்க பாதுகாவலனாக நியமித்துக் கொண்டான்.
இளங்கோவனின் மகள் சுந்தரி, பெயருக்கேற்றாற் போல் பேரழகி. கட்டிளங்காளையான நண்பமுகன் மீது அவளுக்கு காதல். அவனைத் திருமணம் செய்ய விரும்பி, தந்தையிடம் விருப்பத்தை வெளிப்படுத்தினாள்.
""மகளே! மன்னாதி மன்னர்களெல்லாம் உன்னை மணக்க போட்டியிடுகின்றனர். நீ சாதாரண வீரனை விரும்புகிறாயே! உலகம் என்னை மதிக்குமா?'' என்றான்.
""அப்பா! நீங்கள் வாள் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில் என்னை மணக்க விரும்புவோர் பங்கேற்கட்டும். வெற்றி பெறுபவருக்கு, என்னை மணம் முடித்துக் கொடுத்து, நம் நாட்டின் மன்னனாகவும் ஆகலாம் என அறிவியுங்கள். நண்பமுகன் நிச்சயம் வெல்வார் என்று நம்புகிறேன்,''என்றாள்.
"மாபெரும் மன்னர்கள் முன்னால் நண்பமுகன் தூசாகிவிடுவான். யாரோ ஒரு மன்னன் தான் வெற்றி பெறப் போகிறான்! அவனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்து விடலாம்' என இளங்கோவன் கணக்கு போட்டான். ஆனால், போட்டியில் நண்பமுகன் வென்றான்.
இளங்கோவன் நண்பமுகனிடம்,"" <உண்மையைச் சொல், ஒரு வீரனால் இங்குள்ள மன்னர்களை ஜெயிக்க முடியாது. நீ யார்?'' என்று கேட்டான்.
தான் கலிங்கதேச இளவரசன் என்றும், நடந்த விபரங்களையும் அவன் கூறவே, போட்டிக்கு வந்த அரசர்கள் எல்லாரும் அவனுக்கு நண்பர்களாயினர். எல்லாருமாக இணைந்து கலிங்கத்திற்கு வந்தனர். இன்பமுகனை விரட்டியடித்து விட்டு, நண்பமுகனை கலிங்கத்தின் ராஜாவாக்கினர். ஒன்றுக்கு இரண்டாக, கலிங்கத்தையும், அவந்தியையும் இணைத்து அவன் அரசாண்டான்.
அடுத்தவர் சொத்தைப் பறிப்பவர்கள், அதை அனுபவிக்கும் பாக்கியமில்லாமல் போய்விடுவார்கள்.

No comments:

Post a Comment