Monday, June 18, 2012

அமுதமொழி-வாரியார் சுவாமிகள்

நாம் எப்போதும் நம்மிலும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைக் கண்டு, "ஏதோ கடவுள் நமக்கு இவ்வளவாவது தந்திருக்கிறாரே.. போதும்' என்று திருப்தியடைய வேண்டும். குடிசையில் வாழ்கின்றவன், வீடின்றி மரத்தடியிலே மழையிலே நனைந்து, வெயிலிலே காய்பவனைக் கண்டு, "நமக்கு ஆண்டவன் இந்தக் குடிசையையாவது தந்தானே' என்று இறைவனுக்கு நன்றி கூறி திருப்திப்பட வேண்டும். காரிலே போகின்றவனைக் கண்டு, குதிரை வண்டியிலே போகின்றவன் நமக்கு கார் இல்லையே என்று நினைக்கக்கூடாது.குதிரை வண்டியிலே போகின்ற ஒருவன், மாட்டுவண்டியிலே போகிறவனையும், மாட்டுவண்டியில் போகிறவன் நடந்து போகிறவனையும், நடந்து போகிறவன், காலில்லாதவனைக் கண்டும் "கடவுள் நமக்கு இவ்வளவு வசதியைத் தந்தாரே' என்று திருப்திப்பட வேண்டும். காலே இல்லை எப்படி திருப்தியடைவது என்பவன், "நமக்கு இந்த ஊன்றுகோலையாவது இறைவன் தந்தானே! நோயற்ற உடலைத் தந்தானே!' என்று திருப்தியடைதல் வேண்டும். கஞ்சி குடிக்கிறவன் பட்டினி கிடக்கிறவனைப் பார்த்தும், ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்குபவன் நாற்பது வாங்குபவனைப் பார்த்தும் திருப்தியடைய வேண்டும். ஒரு கொடையாளி தன்னிடம் தானம் கேட்டவனுக்கு பத்து ரூபாய் கொடுத்தால் "அடப்பாவி! இருபதாக தந்தால் இவனுக்கென்ன குறைந்து விடுமாம்' என்று அதிருப்தி அடையக்கூடாது. "பத்து ரூபாய் தந்த அந்த புண்ணியவான் நன்றாக இருக்க வேண்டும்' என்று வாழ்த்த வேண்டும்.

No comments:

Post a Comment