Thursday, June 21, 2012

உணவும் உள்ளுணர்வும்

உணவும் உள்ளுணர்வும்

பாஞ்சாலியையே கனிவாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். இன்னமும் தலையை விரித்துப் போட்டவாறுதான் இருக்கிறாள் அவள்.
மகாபாரத யுத்தம் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. "பாவி துச்சாதனன் செந்நீர், பாழ்த்துரியோதனன் ஆக்கை ரத்தம் மேவி இரண்டும் கலந்த குழல் மீதினில் பூசிக் குளித்த பின் தான் தலைமுடிவேன்' என்று சபதம் செய்திருக்கிறாளே? சபதத்தை நிறைவேற்ற வேண்டியதும் கண்ணன் பொறுப்புத்தான்.
"எல்லாவற்றையும் கண்ணனிடமே விட்டுவிடுபவள் இன்று மட்டும் நான் செல்லுமிடத்திற்கு உடன்வர மறுக்கிறாளே? இவள் மனத்தை மாற்றி நான் இப்போது செல்லுமிடத்திற்குக் கட்டாயம் இவளையும் அழைத்துச் சென்றாக வேண்டும்.
அங்கே தான் இவளுடைய சந்தேகத்திற்கு விளக்கம் கிடைக்கும்'.
கண்ணனிடம் பாஞ்சாலி கேட்டாள்: ""கண்ணா! நடந்துகொண்டிருக்கிற இந்த பாரத யுத்தம் எப்போது முடியும்?''
""முடியும்போது முடியும்!''
""இது ஒரு பதிலா? பீஷ்ம பிதாமகர் மரணப் படுக்கையில் இருக்கிறார். இரு தரப்பு சேனைகளும் திகைத்து நின்றுவிட்டன. இந்தச் சூழலிலும் உன் கிண்டல் மட்டும் போகவில்லை!''
""நான் கிண்டல் செய்யவில்லை. உண்மையைத்தான் சொன்னேன். உன் கூந்தலை நீ முடியும்போது யுத்தம் முடியும் என்றேன்!''
திரவுபதி கலகலவென்று சிரித்தாள்.
""அதுதான் கேட்கிறேன். கூந்தலை நான் எப்போது முடிவது? யுத்தம் என்றைக்கு முடியும்? பீஷ்மர் ஸித்தி அடைந்துவிட்டால் துரியோதன் தரப்பு வலுவிழந்துவிடும் அல்லவா?''
""பீஷ்மருக்குப் பிறகு கர்ணன் இருக்கிறான். அர்ஜுனனுக்கு இணையான வீரன். தர்மம் அவனைக் காத்துக் கொண்டிருக்கிறது. அவனிடமிருந்து அர்ஜுனன் தப்பிக்க வேண்டும். இன்னும் நடக்க வேண்டியவை எத்தனையோ! அதெல்லாம் இருக்கட்டும்.
இப்போது நான் கூப்பிடும் இடத்திற்கு நீ ஏன் வர மறுக்கிறாய்? அதைச் சொல்!''
""எல்லாம் தெரிந்துகொண்டு ஒன்றுமேதெரியாததுபோல் பேசுவதில் வல்லவன் அல்லவா நீ? பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். தான் இறக்க நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுத்து மரணத்திற்காகக் காத்திருக்கிறார். அவரிடம் அறிவுரை பெற பாண்டவர்கள் ஐவரும் சென்றிருக்கிறார்கள். அங்கே என்னையும் வரச் சொல்கிறாய் நீ. நான் எப்படி வருவேன்?''
அப்பழுக்கற்ற முதியவர். கடும் பிரம்மச்சாரி. உன்னைப்போல் அவரும் என் தீவிர பக்தர். அவரை ஒருமுறை சென்று இறுதியாக தரிசிப்பதில் என்ன தயக்கம்?''
""துரியோதனன் அவையில் துச்சாதனன் என் துகிலை உருவ முனைந்தபோது பீஷ்மர் ஏன் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்றிருந்தார்? இந்த மாபாதகச் செயலைச் செய்யாதே என்று ஏன் அவர் உரத்துக் குரல் கொடுக்கவில்லை? அதர்மத்திற்குத் துணைபோனவர் எப்பேர்ப்பட்ட மகானாகத்தான் இருக்கட்டும். அவரிடம் அறிவுரை பெறவேண்டிய அவசியம் எனக்கில்லை. என் கணவர்களுக்கு அந்த அவசியம் இருந்து அவர்கள் போயிருக்கிறார்கள். அதை நான் தடுக்கவில்லையே?''
கண்ணன் பாஞ்சாலியை மீண்டும்பரிவுபொங்கப் பார்த்து, மெல்லச் சொல்லலானான்: ""துரியோதனன் சபையில் அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்ற கேள்வியை அவர் மரணமடைவதற்கு முன் அவரிடமே கேள். பதிலைத் தெரிந்து கொண்டால் உனக்கு விவரம் புரியும்!''
திரவுபதி யோசித்தாள். சரி... தன் கேள்வியை பீஷ்மரிடமே கேட்போம் என முடிவுசெய்தாள். கண்ணனைப் பார்த்து நகைத்தாள்: ""எப்படியும் நீ என்ன நினைக்கிறாயோ அதை நீ நடத்திக் கொண்டுவிடுவாய். சரி. நீ முன்னே நட. நான் உன்னைப் பின்பற்றுகிறேன். எப்போதும் நான் உன்னைப் பின்பற்றுபவள் தானே?''
கண்ணனும் பாஞ்சாலியும் பீஷ்மர் படுத்திருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆகாயத்தைப் பார்த்தவாறு அம்புப்படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர்,
""அர்ஜுனா! தாகமாக இருக்கிறது!'' என்றார்.
மறுகணம், ""இதோ!'' என்ற அர்ஜுனன் பூமியை நோக்கி ஓர் அம்பைச் செலுத்தினான்.
பூமியின் உள்ளிருந்து கங்கை நீர் விர்ரெனப் புறப்பட்டு வெளியே வந்து சரியாக பீஷ்மரின் தாகம் அடங்கும்வரை அவரது வாயில் கொட்டியது. பின் நின்றுவிட்டது.
கண்ணன் திரவுபதியிடம் தணிந்த குரலில் சொன்னான்: ""பாஞ்சாலி! கங்கா மாதா தானே பீஷ்மரின் தாய்? மகன் இறக்கும் தறுவாயில் அந்தத்தாய் பாசத்தில் நீராய் உருகுகிறாள் பார்!''
அந்தச் சூழல் திரவுபதியின் கோபத்தைச் சற்று மாற்றிச் சாந்தப்படுத்தியது. மரணப் படுக்கையிலிருக்கும் வயோதிகரிடம் தனக்கென்ன கோபம் என்றவாறே நெகிழ்ச்சியுடன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
பல்வேறு அறநெறிகளை பாண்டவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்த பீஷ்மர், நீர்வேட்கை தீர்ந்த புத்துயிர்ப்போடு தன் உபதேசத்தை மீண்டும் தொடரலானார். அதைச் சற்றுநேரம் கேட்ட பாஞ்சாலி, திடீரென்று அடக்கமாட்டாமல் "கிளுக்' என்று
சிரித்தாள்.
உபதேசத்தைச் சட்டென்று நிறுத்திய பீஷ்மர், ""யாரோ பெண் சிரித்த சிரிப்புச் சப்தம் கேட்கிறதே? சிரித்தவள் என் முன்னே வரட்டும்!'' என்றார்.
""நான்தான் சிரித்தேன் சுவாமி!'' என்றவாறே பீஷ்மரின் முன்வந்து தலைதாழ்த்திப் பணிந்தாள் பாஞ்சாலி.
""திரவுபதி! உன் கணவர்கள் கட்டிய மாளிகைக்கு முன்பொருமுறை முதல்தடவையாக வந்தான் துரியோதனன். அப்போது நிலம் எது நீர் எது என்று தெரியாத தரையின் வழவழப்பில் மயங்கித் திகைத்தான். நிலமிருக்கும் இடத்தில் ஆடையைத் தூக்கியவாறு நடந்தான். நீரிருக்கும் இடத்தில் நிலமென நினைத்து தொப்பென்று விழுந்து நனைந்தான். அப்போது சிரித்தாய் நீ. அதனால் தானே, உன்மேல் கொண்ட வெஞ்சினம் காரணமாக பாரதப் போர் மூண்டது? அதுசரி. இப்போது ஏன் சிரித்தாய்?''
""சுவாமி! அப்போது நான் சிரித்தது அறியாமையினால். ஒரு குழந்தை விழுந்தால் கூட அதன் தாய் மலர்ந்து சிரிப்பதுண்டு. அது சூழலால் உருவான சிரிப்பே தவிர, விழுந்தவரைக் காயப்படுத்தும் நோக்கம் அதில் இல்லை. தடுக்கி விழுந்தவரைக் கண்டு நகைப்பது எளிய மனித இயல்பு. அந்தச் சிரிப்புக்குத்தான் இத்தனை உயிர்ப்பலி என்றால் அது ஏற்கத்தக்கதல்ல. துரியோதனனுக்கு பாண்டவர்கள் மேல் உள்ள கோபம் என் திருமணத்திற்கும் முற்பட்டது. போகட்டும். இப்போது நான் சிரித்தது உங்களைப்
பார்த்துத் தான்!''
""என்ன காரணம் தேவி? அம்புப் படுக்கையிலிருந்து நான் ஒன்றும் தடுக்கி விழவில்லையே?''
""முன்னொருமுறை வாழ்க்கையில் நீங்கள் தடுக்கி விழுந்துவிட்டீர்களே, அதை நினைத்துச் சிரித்தேன்!''
""நான் தீவிரமான பிரம்மச்சரிய விரதம் காத்தவன்!''
""நான் உங்கள் பிரம்மச்சரிய விரதத்தில் நீங்கள் தடுக்கி விழுந்துவிட்டதாகச் சொல்லவில்லை சுவாமி! உங்கள் நல்லொழுக்கத்தை உலகே அறியும். உங்கள் ஐம்புலன்களில் ஒருபுலன் இப்போது அபாரமாகப் பணியாற்றுகிறது. ஆனால் முன்னொருமுறை தேவைப்பட்ட நேரத்தில் அது பணியாற்ற மறந்துவிட்டது. அதை நினைத்துச் சிரித்தேன்!''
""புரியும்படிச் சொல்! இப்போது பாண்டவர்களுக்கு எல்லா தர்மங்களையும் போதிக்கும் உங்கள் ஐம்புலன்களில் ஒன்றான வாய், கவுரவர் சபையில் துச்சாதனன் என் துகிலை உரிய முற்பட்டபோது பேச்சிழந்து போயிற்றே, என்ன காரணம்? இன்று தர்மம் பேசும் நீங்கள் அன்று ஏன் அதர்மத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை?''
பஞ்சபாண்டவர்கள் அந்தக் கேள்வியின் உக்கிரம் தாங்காமல் மவுனம் காத்தார்கள். கண்ணன் மனத்திற்குள் நகைத்தவாறு பீஷ்மரின் பதிலுக்காகக் காதைத்தீட்டிக் காத்திருந்தான். உலகம் அறியவேண்டிய ஓர் உண்மையை அல்லவா பீஷ்மர் சொல்லப்போகிறார்?
பீஷ்மர் தொண்டையைச் செருமிக்கொண்டு பேசலானார்: ""உன் கேள்வியில் உள்ள நியாயம் புரிகிறது பாஞ்சாலி! ஆனால், மனம் உடலின் கைதி. உடலோ சூழ்நிலையின் கைதி. நான் அன்று துரியோதனனுக்கு விசுவாசமாக இருந்தேன். அவன் அளித்த உணவைச் சாப்பிட்டு வாழ்ந்தேன். கெட்டவர்கள் வழங்கும் உணவை ஏற்றால் உடலில் கெட்ட சத்துத்தான் சேரும். அதனால் மனத்தில் கெட்ட புத்தி தான் வரும். அதனால் தான், அவன் உணவை உண்ட காலத்தில் அதர்மத்தை எதிர்க்கவேண்டும் என்ற வேகம் எனக்கு வராமல் போயிற்று. என் தர்ம சிந்தனை மழுங்கியிருந்தது''.
""இப்போது மட்டும் தர்மசிந்தனை திடீரென்று எப்படி மேலோங்கியது சுவாமி? நீங்கள் இன்னும் அவன் அணியில் தானே இருக்கிறீர்கள்?'' பாஞ்சாலி விடாமல் கேட்டாள்.
பீஷ்மர் சொல்லலானார்: ""என் உடலைப் பார்! உன் கணவன் அர்ஜுனன் விட்ட அம்புகள் என் மேனி முழுவதையும் காயப்படுத்தியிருக்கின்றன.
துரியோதனன் அளித்த உணவால் என் உடலில் ஊறிய கெட்ட ரத்தம் முழுவதையும் அந்த அம்புகள் நீக்கிவிட்டன. இப்போது புது ரத்தம் ஊறியுள்ளது. அதனால் தான் என் இயல்பான தர்ம சிந்தனை இப்போது எனக்குத் தோன்றியுள்ளது. இதுவே உன் கணவர் ஐவருக்கும் நான் அறநெறியைச் சொல்லக் காரணம்''.
பாஞ்சாலி நெகிழ்ச்சியுடன், ""தீயவர் அளிக்கும் உணவை ஏற்கலாகாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன் சுவாமி. நான் பேசியதில் தவறிருந்தால் மன்னியுங்கள்,'' என்றவாறு பீஷ்மரைப் பணிந்தாள்.
""நீ பாக்கியசாலி. கண்ணன் உனக்குத் துணையிருக்கிறான். கண்ணனைத் துணையாகக் கொண்டவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது!'' என்ற பீஷ்மர், திரவுபதி அருகே நின்ற கண்ணனைக் கைகூப்பித் தொழுதார். பின்னர் அவரது வலக்கரம் உயர்ந்து திரவுபதியை ஆசிர்வதித்தது.

No comments:

Post a Comment