Saturday, June 23, 2012

பணியாளனின் செய்கைக்கு எஜமானனே பொறுப்பாளி


விபீஷணனை காட்டில் சில அந்தணர்கள் சிறைபிடித்து விட்டதாக ராமர் கேள்விப்பட்டார். அந்தணர்களிடம் நேரில் சென்ற ராமர், அங்கு கை, கால் கட்டப்பட்ட நிலையில் அவர் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். ராமரைக் கண்ட அந்தணர்கள் அவரது திருவடியில் விழுந்து வணங்கி வரவேற்றனர். காட்டில் கிடைத்த கனிவகைகளை கொடுத்து உபசரித்தனர்.
விபீஷணரைத் தேடித் தான் ராமர் வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தனர்.
அவரிடம் ""சுவாமி! தர்ப்பை சேகரிப்பதற்காக வயோதிக அந்தணர் ஒருவர் வனப்பகுதிக்கு வந்திருந்தார். அவர் எப்போதும் மவுன விரதம் மேற்கொள்பவர். அப்போது தேரில் வந்த இந்த அரக்கன் அவருடன் பேச முற்பட்டான். ஆனால், அவரோ மவுனம் காத்தார். கோபம் கொண்டு காலால் அவரை உதைத்து விட்டான். நிலைகுலைந்து விழுந்த அந்தணரின் உயிர் போய்விட்டது. அதனால் இவனைக் கட்டி வைத்தோம். எங்களின் நல்லகாலம். உத்தமரான நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். கொலைகாரப்பாவியான இவனுக்கு தண்டனை வழங்குங்கள்,'' என்று கேட்டுக் கொண்டனர்.
விபீஷணன் தலை குனிந்து நின்றான்.
ராமர் அந்தணர்களிடம்,""இவன் என்னுடைய பணியாளன்.ஒரு பணியாளனின் செய்கைக்கு எஜமானான நானே பொறுப்பாளி. இவனுக்கு கொடுக்க நினைக்கும் தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன்,'' என்றார்.
இதைக் கேட்டு அந்தணர்களின் உள்ளம் நெகிழ்ந்தது.
விபீஷணனுக்கு அவரைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பதையும், அவருடைய மரணம் தற்செயலாக நடந்தது என்பதையும் உணர்ந்தனர். விபீஷணனை விடுவித்து ராமருடன் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment