Sunday, July 29, 2012

எளிமை தான் ஒருவனை உயர்த்தும் கருவி

தேவர் தலைவன் இந்திரனுக்கு உலகிலேயே மிகப்பெரிய மாளிகை கட்ட வேண்டுமென்று ஆசை. கைலாயம், வைகுண்டம், சத்தியலோகம், ஆனந்தலோகம், சூரியலோகம் எல்லாவற்றையும் விட பரப்பில் அதிகமாக கட்டப்பட வேண்டுமென்ற விருப்பத்தை தேவசிற்பி விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்தான். விஸ்வகர்மா தன் பணியாளர்களைக் கொண்டு வேகமாகப் பணிகளைச் செய்தார். பரப்பு பெரியது என்பதால், சில ஆண்டுகள் கடந்த பின்னரும் பணி இழுத்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் களைப்படையவே வேலை பாதியில் நின்றது. இந்திரனுக்கு ஒரே கவலை. அந்த நேரத்தில் நாரதர் வந்தார். ""நாரதரே! பிரச்னை இப்படி..'' என்று ஆரம்பித்த இந்திரன், மாளிகை கட்டுமானப்பணி தடைபட்ட விஷயத்தைச் சொல்லி, இதற்கு தீர்வு சொல்லுங்களேன்,''என்றான் வருத்தத்துடன். ""அப்பா! எனக்கு வீடு கட்டிய பழக்கம் கிடையாது. வீடும் கிடையாது. போகிற ஊரில் யார் வீட்டிலாவது தங்குபவன். ரோமச மகரிஷியை போய்ப் பார். அவர் சொல்வார் தீர்வு!'' எனச்சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். அந்நேரத்தில் ரோமசர் அங்கு வந்தார். (உடலெல்லாம் முடி உடையவர் என்பது பொருள்) அவரது தலையில் ஒரு பாய் நீட்டிக் கொண்டிருந்தது. இடையில் சிறிய ஆடை மட்டும் அணிந்திருந்தார். ""முனிவரே! தலையில் என்ன பாய்?'' என்றான் இந்திரன். ""அப்பனே! அதுதான் என் வீடு. மழை பெய்தாலோ, வெயில் அடித்தாலோ என் தலை குடியிருக்க இவ்வளவு பெரிய மாளிகை போதாதா!'' என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டார். இந்திரனுக்கு சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. ""ஆகா... ஒருவன் நினைத்தால் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் வாழலாம். எளிமை தான் அவனை உயர்த்தும் கருவி,'' என்று எண்ணியவன் மாளிகைக் கட்டுமானப்பணியை நிறுத்தி விட்டான்.

No comments:

Post a Comment