Thursday, August 23, 2012

புத்தர் சொல்கிறார்

தானம் செய்பவன் உள்ளக் களிப்புடன் அமைதி பெறுகிறான். அவனுக்கு கவலையுமில்லை. சஞ்சலமுமில்லை.


* செல்வத்தைச் சேர்த்து வைக்கும் கருமி பாவத்தை கட்டி வைக்கிறான். முடிவில் எல்லாவற்றையும் இழக்கிறான்.

* திரவிய தானம், தர்மதானம் என தானத்தில் இருவகை உள்ளது. இதில் தர்மதானமே உயர்ந்தது.

* தயாளம், தர்மகுணமுள்ளவனை எல்லாரும் விரும்புவர். அவனுடைய நட்பைப் பெற முட்டி மோதுவர். அவனுக்கு மிகவும் மதிப்பு உண்டு. இறக்கும் சமயத்தில் அவனது உள்ளம் சாந்தியும் மகிழ்ச்சியும் பெற்று விளங்கும். அவனுடைய தானங்கள் நன்கு பழுத்த கனியாகி அவனுக்குப் பயனளிக்கும். தர்மகுணம் மலைபோன்ற துயரங்களையும் அழித்து விடும்.

* நமது உணவை பிறருக்கு அளிப்பதால், நாம் அதிகவலிமை பெறுவோம். உடைகள் அளிப்பதால் நாம் அதிக அழகு பெறுவோம். பரிசுத்தமான சத்தியநிலையங்களை அமைப்பதால் நாம் அரிய பொக்கிஷங்களை அடைவோம்.

* தீயவர்களுடன் சேராதீர்கள். இழிந்தவர்களுடன் இணங்க வேண்டாம். ஒழுக்கமுள்ளவரோடு உறவாடுங்கள். அறிஞர்களுடன் தொடர்பு வைத்திருங்கள்.

* யாரைச் சந்தித்தாலும் புண்ணியமான விஷயங்களை மட்டுமே பேசுங்கள். அது முடியாதென்றால் மவுனமாக இருங்கள். இந்த இரண்டில் ஒன்றே உங்களுக்கு நல்லது.

* நட்சத்திரங்கள், கனவுகளின் பலன் ஆகிய சாஸ்திரக் குறிகளைக் கொண்டு நன்மை தீமைகளைப் பார்க்காதீர்கள். இவற்றை அறவே ஒதுக்கியவனே சரியான வழியில் செல்பவன். ஜோதிடத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் கூறுதல், நன்மை, தீமைகளை முன்னதாகக் கூறுதல் தகாத செயலாகும்.

* உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்தாலும், இன்னும் கடலுக்கு அப்பால் ஒரு கண்டம் இருக்கிறதா என்று ஆசைப்படுவது மனித இயல்பு. ஆசைக்கு ஓர் அளவில்லை. கடல் முழுவதும் நீர் நிரம்பியிருந்தாலும் அதற்கு அமைதியில்லை. அதுபோல், எத்தனை இன்பங்கள் இருப்பினும் மனித மனத்திற்கு தெவிட்டுதல் இல்லை.

* உயிர்களை துன்புறுத்தாதே. பிறர் பொருளை எடுக்காதே. பெண்களை இம்சை செய்யாதே. பொய் சொல்லாதே. பொறுப்பற்ற தன்மைக்கு விதை தெளிக்கும் மதுவை அருந்தாதே. இவற்றைக் கடைபிடிப்பவன் பூமிதானம் செய்பவனை விடவும், யாகம் செய்பவனை விடவும் உயர்ந்தவன்.

* ஒருவர் செல்வந்தராய் பிறக்கிறார், இன்னொருவர் ஏழையாய் பிறக்கிறார். ஒருவர் அழகாயிருக்கிறார், இன்னொருவர் அவலட்சணமாய் உள்ளார், ஒருவர் அறிவுள்ளவராயும், மற்றவர் அறிவிலியாகவும் உள்ளனர். ஒருவர் தீர்க்காயுள் வாழ்கிறார், இன்னொருவர் அகால மரணமடைகிறார். ஒருவர் உயர்வும், இன்னொருவர் தாழ்வும் அடைகின்றனர். ஒருவருக்கு நல்ல வாய்ப்பு வருகிறது. இன்னொருவருக்கு தீயவாய்ப்பும் வந்து விடுகிறது. இதற்கெல்லாம் காரணம் அவரவர் வகுத்துக்கொண்ட விதியே. அவரவர் செய்கைகளே இத்தகைய பலன்களைத் தருகின்றன.



தர்மத்தை கடைபிடிக்கச் சொல்கிறார் புத்தர்

No comments:

Post a Comment