Tuesday, September 4, 2012

பொங்கல் அன்று கொடுக்க வேண்டியவை

பொங்கல் அன்று சுமங்கலிகளுக்கு பசும் மஞ்சள் கிழங்கு, தேங்காய், கரும்புத்துண்டு, வாழைப்பழம், இலந்தைப்பழம் ஆகியவற்றை தட்சணை வைத்து வெற்றிலை, பாக்குடன் தானமாக கொடுக்க வேண்டும். சிலர் கல்யாணமான வருடம் மட்டும் தானம் கொடுத்தால் போதும் என்கிறார்கள் அது தவறு. எல்லா வருடமும் கொடுக்க வேண்டும். கல்யாணமான வருடம் நிறையப் பேருக்கு தானம் கொடுப்பார்கள். கல்யாணமான வருடம் வரும் முதல் சங்கராந்தி அன்று ஐந்து வாழைப்பழம் உடன் தேங்காய், கரும்புத்துண்டு, பசும் மஞ்சள் கிழங்கு, இலத்தைப் பழம் தட்சணை வைத்து ஐந்து சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டும். இரண்டாவது வருடம், 10 பழங்கள் 10 சுமங்கலிகளுக்கும், 3-வது வருடம் 15 பழங்கள் வைத்து 15 சுமங்கலிகளுக்கும் 4-வது வருடம் 20 பழங்கள் வைத்து 20 சுமங்கலிகளுக்கும், 5-வது வருடம் 25 பழங்கள் வைத்து 25 சுமங்கலிகளுக்கும் உடன் தேங்காய் மற்றவைகளையும் வைத்து கொடுக்க வேண்டும். பழங்கள் மட்டும் தான் எண்ணிக்கையில் அதிகரித்து கொடுக்க வேண்டும். மஞ்சள் பொடி........ ஒரு பெரிய பாத்திரத்தில் மஞ்சள் பொடியை கோபுரமாக நிரப்பி உடன் இரண்டு பொட்டணம் குங்குமம் வைத்து, மஞ்சள் பொடியின் உள்ளே தட்சணை வைத்து, வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய், கரும்புத் துண்டு இலந்தைப்பழம், தட்சணை, துளசி தளம் வைத்து தானம் கொடுக்க வேண்டும். மஞ்சள் பொடியில் மட்டுமின்றி வெற்றிலை, பாக்கில் தனியாக தட்சனை வைக்க வேண்டும். இதனால் நீடித்த மங்கல்ய பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். பூசணிக்காய்......... இந்த தானமும் பொங்கல் அன்று கொடுக்க வேண்டும். சாமி சிலை முன் ஒரு இடத்தை சுத்தப்படுத்தி செம்மண் கோலம் போட்டு அதன் மேல் பலகை வைத்து, அதன் மேல் நுனி வாழை இலை போட்டு அதில் ஒருவர் சாப்பிடும் அளவுக்கு குறையாமல் அரிசியை பரப்ப வேண்டும். அதன் மேல் பூசணிக்காயை வைக்க வேண்டும். பூசணிக்காயின் மேல் வேஷ்டி, துண்டு வைக்க வேண்டும். பூசணிக்காயின் முன்பு இரண்டு விளக்கு ஏற்றி, பூசணிக்காய்க்கு கஜ வஸ்தரம், சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்து தேங்காய், பழம் நைவைத்யம் செய்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். வெற்றிலை, பாக்கு, தேங்காய் தட்சணையுடன் துளசிதளம் வைத்து, இலை, அரிசியுடன் பூசணிக்காயை அப்படியே தானமாக கொடுக்க வேண்டும். இலந்தைப் பழம்...... இந்த தானமும் பொங்கல் தினத்தன்று செய்ய வேண்டிய தானமாகும். பொங்கல் அன்று ஒரு தட்டில் கொஞ்சம் இலந்தைப் பழம் வைத்து, சாமிக்கு விளக்கேற்றி நைவைத்யம் செய்து விட்டு வெற்றிலை, பாக்கு, தேங்காய், தட்சணை, துளசி தளம் வைத்து தட்டுடன் அப்படியே தானமாக கொடுக்க வேண்டும். கரும்பு..... இதுவும் பொங்கல் அன்று கொடுக்க வேண்டிய தானம் ஆகும். சாமி முன் ஒரு இடத்தை சுத்தப்படுத்தி, செம்மண் கோலம் போட்டு, அதன் மேல் பலகை வைத்து, அதன் மேல் நுனி வாழை இலைப்போட்டு அதில் ஒருவர் சாப்பிடும் அளவுக்கு குறையாமல் அரிசியை பரப்பி, அதில் ஒரு ஜோடி கரும்பு ஜல்லையை நிறுத்திய மாதிரி வைக்க வேண்டும். அதற்கு வேஷ்டி கட்ட வேண்டும். கஜ வஸ்தரம், சந்தனம், குங்குமம், தேங்காய், பழம் நைவைத்தியம் செய்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். வெற்றிலை, பாக்கு, தேங்காய், தட்சணையுடன் துளசிதளம் வைத்து, இலை, அரிசியுடன் கரும்பை அப்படியே ஏழைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment