Thursday, September 6, 2012

கவிச்சக்கரவர்த்தி கம்பர்

இறை வணக்கத்தோடு எச்செயலையும் தொடங்குதல் சான்றோர் மரபு. இறை வணக்கத்தையும், அளவிடற்கரிய ஆழமும் அகலமும் உயரமும் கொண்ட "உலகம்' என்னும் மங்கல மொழியோடு தொடங்குதல், முத்தமிழ்த் துறையின் முறைபோகிய உத்தமக் கவிஞர்களின் உயர்பண்பு. கல்வியில் பெரியோனான கவிச்சக்கரவர்த்தி கம்பரும், தனது இராமாவதாரம் என்னும் இரா மாயணக் காப்பியத்தை கடவுள் வாழ்த்தோடு தான் தொடங்குகிறார். கடவுள் வாழ்த்தையும் "உலகம்' என்ற உயிர்நேயப் பார்வையும், பரந்துபட்ட சிந்தனையும் பொதிந்த சொல்லை முதன்மையாகக் கொண்டே ஆரம்பிக்கிறார். புவிக்கு அணியாக, மொழிக்கு மணிமுடியாக அறநெறிக் காப்பியம் படைத்து, அன்னை மொழியின் ஆயுளை நீட்டித்த கவிமேதை கம்பர், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இது, கம்பரையும் தமிழ் இலக்கியக்கால வரலாற்றையும் ஆய்ந்தறிந்தோர் கணிப்பு. சைவமும் வைணவமும் புத்தமும் சமணமும் தமிழகத்தில் பதியமிடப்பட்டிருந்த காலம் அது. அடி, உதை, குத்து, வெட்டு, புழுதி, கழு மரம் என்று சமயங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், பாரதப் பண்பாட்டு ஒற்றுமைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும் காதையினைத் தேர்வு செய்து பேரிலக்கியமாக்கிய கம்பர் எந்த சமயத்தின் கடவுளைச் சரணடைகிறார்? பாலகாண்டம், அயோத்தியா காண்டம், கிட்கிந்தா காண்டம், ஆரணிய காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு பெரும் பிரிவுகளாக வகுத்துக் கொண்டு, ஒவ்வொரு காண்டத்திற்கும் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார். முதல் காண்டத்திற்கு மட்டுமே மூன்று கடவுள் வாழ்த்துப் பாடல்கள். மற்ற ஐந்து காண்டங்களுக்கும் தலா ஒரு பாடல். கம்ப ராமாயணத்தில் உள்ள கடவுள் வணக்கப் பாடல்கள் எட்டி னையும் இப்போது பார்ப்போம்; நயப்போம். பிறகு தெளிவோம்! கடவுள் வாழ்த்து- 1 (பாலகாண்டம்) உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே. இதன் பொருள்: உலகையும் உலகத்திலுள்ள யாவற்றையும் உண்டாக வைத்தும், உண்டானவற்றைத் தாமாகவே நிலைபெற வைத்தும், நிலைபெற்றவற்றைத் தாமாகவே நீக்க வைத்தும், மீண்டும் தாமாகவே உண்டாக வைத்தும், நிலைபெற வைத்தும், நீக்க வைத்து மாய் தீராத சுழற்சி யோடு நீங்காமல் விளையாடிக் கொண்டிருப்பவர் யாரோ, அவரே எங்கள் தலைவரா கிய இறைவன். அவரையே நாங்கள் சரணடை கிறோம். கடவுள் வாழ்த்து- 2 (பாலகாண்டம்) சிற்கு ணத்தர் தெரிவரும் நன்னிலை எற்கு ணர்த்தரி தெண்ணிய மூன்றனுள் முற்கு ணத்தவ ரேமுத லோரவர் நற்கு ணக்கடல் ஆடுதல் நன்றரோ. இதன் பொருள்: மறைகளால் போற்றப்பட்ட மூன்று குணங்களுள் முதல் குணத்தை உடையவரே உலகின் முதன்மையானவர். அவரே பரம்பொருள். சித்தர்களாலும் தெரிந்துரைக்க அரியது அந்தப் பரம்பொருளின் பேரின்ப நன்னிலை. அத்தகைய கடவுளின் நல்நெறியை என்னால் உணர்த்துதல் இயலுமா? இயலாது. ஆயினும் அந்தப் பரம்பொருளின் நற்குணம் என்னும் பேரின்பக் கடலுள் குளிப்பதே நன்மை பயக்கும். கடவுள் வாழ்த்து- 3 (பாலகாண்டம்) ஆதி அந்தம் அரியென யாவையும் ஓதி னாரல கில்லன உள்ளன வேதம் என்பன மெய்நெறி நன்மையன் பாதம் அல்லது பற்றலர் பற்றிலார். இதன் பொருள்: "கற்றதனா லாய பயனென்கொல் வாலறி வன் நற்றாள் தொழாஅர் எனின்' எனும் குறட்பாவை பொன்போல் போற்றி தன்னுள் ஏற்றுக் கொண்ட அளவடி விருத்தம் இது. முதலும் முடிவும் நடுவும் என்று எல்லையற்றுத் திகழும் வேதங்கள் யாவற்றையும் கற்றுணர்ந்து ஆசைகளைத் துறந்தவர்கள், மெய்யறிவான இறைவனின் திருவடிகளைத் தவிர வேறு எதன் மீதும் ஆசைப்படமாட்டார்கள். கடவுள் வாழ்த்து- 4 (அயோத்தியா காண்டம்) வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூ தத்தின் வனப்பெங்கும் ஊனும் உயிரும் உணர்வும்போல் உள்ளும் புறனும் உளனென்பர் கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக் கோல்துறந்து கானும் கடலும் கடந்திமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை.' இதன் பொருள்: வானிலிருந்து சிதறி, அளவற்றுத் திகழும் பூமியின் வளமை எங்கும், எல்லாவற்றிலும் உள்ளும் புறமுமாய், உடலும் உயிரும் உணர்வுமாக விளங்கு பவன் ஆதிநாதராகிய பரம் பொருளே! அந்தப் பரம்பொருளே, கூனியென்கிற மந்தரையும் அரசியாகிய சிற்றன்னை கைகேகியும் செய்த கொடுமை யால், அரச பதவியைத் துறந்து, காட்டையும் கடலையும் கடந்து சென்று, அரக்கர்களை அழித்து, இமையோராகிய தேவர்களின் துன்பத்தைத் தீர்த்த ராமனாகப் பிறந்தவன் என்கிறார்கள் பெரியவர்கள். அந்தப் பரம் பொருளை வணங்குவோம். கடவுள் வாழ்த்து- 5 (ஆரணிய காண்டம்) பேதி யாதுநிமிர் பேதவுறு வம்பிறழ்கிலா ஓதி ஓதிஉண ரும்தொறும் உணர்ச்சியுதவும் வேதம் வேதியர் விரிஞ்சன்மு தலோர்தெரிகிலா ஆதி நாதரவர் எம்அறிவி னுக்கறிவரோ! இதன் பொருள்: மாறுதலற்றவர், வளர்ந்து மாறுதலடையும் உருவங்களிலும் மாறாது இருப்பவர், உச்சரிக்க உச்சரிக்க உணர்ச்சிப் பெருக்கோடு உணரத் தக்கவர், வேதத்தாலும், வேதியர்களாலும் விரிஞ்சன் எனும் பிரம்மன் முதலானவர்களாலும் அறியப்படாதவர். அவரே ஆதிநாதர். அவரே எமது அறிவுக்கு அறிவாய்த் திகழும் இறைவன். கடவுள் வாழ்த்து- 6 (கிட்கிந்தா காண்டம்) மூன்றுரு எனக்குணம் மும்மை யாம்முதல் தோன்றுரு எவையுமம் முதல சொல்லுதற்(கு) ஏன்றுரு அமைந்தவும் இடையில் நின்றவும் ஊன்றுரு உணர்வினுக் குணர்வும் ஆயினான். இதன் பொருள்: பிரமன், சிவன், திருமால் என மூன்று உருவங்களானவன். ஆக்கல், அழித்தல், காத்தல் தொழிலுக்கேற்ப வெண்மை, செம்மை, கருமை என குணங்களும் மூன்றானவன். முதலில் தோன்றிய உருவங்கள் எல்லா வற்றுக்கும் ஆதாரமானவன். சுட்டிக்காட்டு வதற்கு சாட்சியாய் பல்வகை வடிவங்களானவன். எல்லா உருவங்களையும் தாங்கி நிற்பவன். எல்லா உருவங்களிலும் ஒன்றி நிற்பவன். இவனே முதற்கடவுள். இவனே என் உணர்வுகளுக்கு உணர்வாய் விளங்கிக் கொண்டி ருக்கிறான். கடவுள் வாழ்த்து- 7 (சுந்தர காண்டம்) அலங்கலில் தோன்றும் பொய்மை அரவெனப் பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபா டுற்ற வீக்கம் கலங்குவ தெவரைக் கண்டால் அவரென்ப கைவில் ஏந்தி இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக் கிறுதி யாவார்! இதன் பொருள்: மலர் மாலையில் காட்சியளிக்கும் பொய்ப் பாம்புபோல நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் கலவைச் செயல்பாட்டால் பயமூட்டும் பொய்த் தோற்றங்கள் காட்சியளிக்கும். பொய்த் தோற்றங் களால் ஏற்படும் இந்தப் பயம் யாரைக் கண்டால் அகலுமோ, அகன்று உண்மை உருவின் தெளிவு ஏற்படுமோ, அவரே மறைகளுக்கு எல்லாம் நிறைவானவர். அவரே ராமபிரானாக அவதாரமெடுத்து கையில் வலிய வில் ஏந்தி, இலங்கையில் போர் புரிந்தவர். அந்த நிறைவான கடவுளைச் சரணடைவோம். கடவுள் வாழ்த்து- 8 (யுத்த காண்டம்) "ஒன்றே என்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கின் பலவேயாம் அன்றே என்னின் அன்றேயாம் ஆமே என்னின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம் உளதென் றுரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!' இதன் பொருள்: இறைவன் ஒருவனே எனச் சொன்னால் ஒருவன்தான் இறைவன். இறைவன் பலரே என்றால் இறைவன் பலர்தான். இந்த உருவத்தன் இறைவன் எனச் சொன்னால் இறைவன் இந்த உருவமுடையவனே. இறைவன் அப்படிப்பட்ட உருவம் உடையவன் அல்ல எனச் சொன்னால் இறைவன் அப்படிப்பட்ட உருவமுடையவன் இல்லைதான். கடவுள் இருக்கிறான் என்று சொன்னால் கடவுள் இருக்கிறான். கடவுள் இல்லை எனச் சொன் னால் கடவுள் இல்லை. இறைவனின் நிலை அறிவதற்கும் உணர்வதற்கும் அரியது. இறைவனை விட்டால் நமக்கு இங்கு உய்யும்வழி இல்லை. அவனிருக்க நமக்கு இங்கு என்ன குறை? ஏதுமில்லை! இந்த எட்டுப் பாடல்களுள் இரண்டில் மட்டும், கதையின் நாயகனான ராமபிரானின் பெயரை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகிறார் கம்பர். "அரனையும், அரியையும், அயனையும் படைத்தவரும், உலகத்து உயிர்களில் எல்லாம் ஒன்றி நிற்பவருமான ஆதிநாதரே, ராமனாக அயோத்தியில் அவதரித்து, கையில் வில்லேந்திச் சென்று, இலங்கையில் போர்புரிந்து, அரக்கர் களை வெற்றிகொண்டு, தேவர்களுக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தைத் தீர்த்தார். அந்த ஆதிநாதரை- பரம்பொருளை வணங்குவோம்' என்கிறார். கம்பர் வணங்கும் அந்தப் பரம்பொருள் யார்? ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொய்தீர் ஒழுக்க நெறியாளன், தனக்குவமை இல்லாதான், அற ஆழியான், எளிய குணத்தான், இறைவன் என்றெல்லாம் திருக்குறளின் முதல் அதிகாரத்திலுள்ள பத்துப் பாடல்களிலும் திருவள் ளுவப் பெருந்தகை எடுத்துக்காட்டி, எந்தக் கடவுளின் தாளடிகளில் சரணடையச் சொல்கிறாரோ, மறைகளை யும் மதங்களையும் கடந்து நிற்கும் அந்தக் கடவுளையே கவிச்சக்கரவர்த்தியும் சரணடைகிறார். தனது எட்டுக் கடவுள் வணக்கப் பாடல்களின் மூலம், சரணடையுமாறு நம்மையும் ஆற்றுப்படுத்துகிறார். தனது இந்தத் தெய்வீகத் தெளிவை, ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான சொல்லின் செல்வன் அனுமனின் வாய்வழியேயும் ஆழமாகப் பதிவும் செய்கிறார் கம்பர். கற்பினுக்கு அணியான சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கைக்குள் புகுந்து, அந்தத் தீவையே ரணகளப்படுத்திக் கொண்டிருந்த அஞ்சனை மைந்தன் அனுமன் இந்திரசித் தனால் பிடிக்கப்படுகிறான். குற்றவிசாரணை மண்டபத் திற்குக் கொண்டுசெல்லப்படுகிறான். இராவணனால் விசாரிக்கப்படுகிறான். ""யார் நீ? உன்னை அனுப்பியது யார்? சக்கராயுதத்தைக் கொண்ட திருமாலா? மழுப்படையனாகிய சிவனா? தாமரைக் கிழவனான பிரம்மனா? வச்சிராயுதத்தை உடைய இந்திரனா? பூமியைத் தாங்கும் ஆதிசேடனா? எம தருமனா? திசையெட்டுக்கும் உரிய திக்குப் பாலகரா? சொல்... நீ யார்? உன்னை அனுப்பியது யார்?'' இவையெல்லாம் இலங்கை மன்னன் இராவணனின் கேள்விகள். ""என் பெயர் அனுமன். வாலியின் மகன் அங்கதனின் தூதன் நான். நீ குறிப்பிட்டதைப்போல தேவர் களோ, மும்மூர்த்திகளான பிரம்மனோ, சிவனோ, திருமாலோ என்னை இங்கு அனுப்பவில்லை. இவர்கள் எல்லாரும் சாதாரண வலிமையுடைய வர்கள். இவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அருமையான செயல்களை முடிக்கும் ஆற்றல் கொண்ட ஒருவர் என்னை அனுப்பியுள்ளார். அவர் தான் மும்மூர்த்திகளான சிவனை, திருமாலை, பிரம்மனைப் படைத்த பரம்பொருள். அவர்தான் ராமச்சந்திர மூர்த்தியாக அவதாரமெடுத்தவர். அந்த ராமபிரானின் அடிமை நான், தொண்டன் நான்!'' என்று தெளிந்த புலமையோடு இலங்கை மன்னனுக்கு பதில் சொல்கிறான் அனுமன். எந்தச் சமயம் பெரியது? எந்தக் கடவுள் பெரியவர் என்ற மதச்சண்டை கள் தமிழகத்தை சின்னாபின்னப் படுத்திக் கொண்டிருந்த காலத்தில், ஒன்றே கடவுள் என்ற வள்ளுவரின் கொள்கையை வலியுறுத்தி, எல்லா சமயங்களுக்கும் பொதுவானவர் ஆதிநாதராகிய பரம்பொருள் என்று தனது காப்பியக் கடவுள் வணக்கப் பாடல்கள் வாயிலாக நிலைநாட்டுகி றார் கம்பர்.

No comments:

Post a Comment