Wednesday, September 5, 2012

முருகனுக்கும் தமிழர்களுக்கும் இறுக்கமான பிணைப்பு

முருக வழிபாடு தொன்மை மிக்கது. சிவனின் மகனான முருகனுக்கும் தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதாகும். தமிழர்களின் பண்பாட்டோடும் மொழியோடும் தத்துவத்தோடும் பழக்க வழக்கங்களோடும் இம்முருக வழிபாடு பின்னிப் பிணைந்திருந்த தன்மையைச் சங்ககால இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல் என்பன மிகச் சிறப்பாக கூறி நிற்கின்றன. இயற்கை வழிபாட்டின் ஒரு கூறான சூரிய வணக்கமே பின்னர் முருக வழிபாடானது என்று சொல்வார்கள். சூரிய உதயத்தின் இயற்கை அழகில் உள்ளந் தோய்ந்த அன்பர்கள் அதனையே இறையென வழிபட்டு வணங்கினர். அதுவே பின்னர் நீலமயில் மீது வீற்றிருக்கும் செவ்வேள் வழிபாடாக மலர்ந்தது. இதிலிருந்து மலைவாழ் மக்களுக்குப் பெரும் துன்பத்தை உண்டாக்கியது. "இருள்'' என்றும் அந்த இருளாகிய துன்பத்தை அகற்ற இளஞாயிறாகிய முருகனை வழிபட்டனர் என்பதும் பெறப்படுகின்றது. இதனடிப்படையில் முருக வழிபாட்டின் தன்மையை இரண்டு விதங்களில் பார்க்க முடியும். 1. முருகன் மலைக்கடவுள் 2. முருகன் தமிழ்க்கடவுள் மக்களின் வாழ்வு முதன்முதலில் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது அறிஞர் கருத்து. ஆதிகால மனிதன் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் படைக்கப்பட்டிருக்கலாம். மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி முருகன் ஒரு குழுமத்தின் தலைவனாக இருந்து பெரும் வெற்றிகளையீட்டித் தெய்வத்தன்மைக்கு உயர்த்தப்பட்டு நாளடைவில் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கலாம். சமூக அடிப்படையில் மலையைத் தெய்வமாகவும் முருகனை மலைவாழ் இறையாகவும் வழிபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தங்களுக்குள் ஒரு தலைவனை உருவாக்கிக் கொண்ட ஆதிகால மக்கள் அவனை "முருகன்'' என்றழைத்தனர். ஒரு தலைவனுக்குரிய அழகு, கம்பீரம், வலிமை, கடமையுணர்வு, ஒரு கூட்டத்தை வழிநடத்தும் ஒழுங்குமுறை என்பன அத்தலைவனுக்கு இருந்தன. இதிலிருந்து முருகனின் தொடக்கம் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரிகின்றது. தமிழர்கள் முருகனைப் போர் நிலத்தெய்வமான கொற்றவையின் மகன் என்று போற்றியதோடு தங்கள் போர்த் தெய்வமாகவும் வணங்கினர். மலைவாழ் வேடர்கள் வேட்டையாடும்போது வேலைக் கொண்டு செல்வர். அதேவேலை தம்குலக் கடவுளின் ஆயுதமாகவும் `வேல்' ஆயுதத்தையே கொண்டனர். அந்த வேலவன் பகைவர்களை அழித்துச் சம்காரம் செய்வான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. மனித வடிவில் முருகனைக் காண தமிழர் மிகவும் விரிவான தத்துவத்தை உள்ளடக்கி இருக்க வேண்டும். முருகனுக்கும் தமிழர்களுக்கும் இருந்த இறுக்கமான பிணைப்பினை முருகன், `கந்தன்' என்றும் `வேலன்' என்றும் `குகன்' என்றும் அழைக்கப்படுவதில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.*

No comments:

Post a Comment