Thursday, September 6, 2012

அந்தக்கரண சுத்திக்கு மிக முக்கியமானவை

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத் தறம்' என்கிறது குறள். ஒருவன் தன் மனத்தில் குற்றமில்லாதவனாக இருக்கவேண்டும். அறம் அவ்வளவே. மனத்தூய்மையில்லாத மற்றவை வெறும் ஆரவாரத்தன்மை உடையதுதான். நல்ல மனப்பாங்கு உடைத்தாயிருப்பது ஆத்ம முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. இதில் நான்கு வகை உண்டு. மைத்ரி முதல் வகையான மனப்பாங்கு மைத்ரி என்று சொல்லப்படுகிறது. அதாவது, சிநேக பாவத்துடனிருக்கும் பாங்கு. எந்த நிலையிலும் நேர்மை தவறாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டி ருப்பவர்களுடன் தோழமை கொண்டு, அந்த நல்லிணக்கத்தால் மனப்பாகம் விரிவடைந்து, தன் மனத்தூய்மைக்குப் பேருதவியாயிருக்கும் வாய்ப்பை வளர்த்துக்கொள்வது. கருணா இரண்டாவது இயல்பு கருணா என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு காலத்தில் துன்பம் ஏற்படுகிறது. துன்பப்பட்டுக் கொண்டிருப்பவரிடம் இரக்கம் காட்டுவது இந்தப் பாங்கு. பிறர் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதி அவரிடம் இரக்கம் காட்டுவது ஒரு தெய்வீக இயல்பு. இறைவனை "கருணாமூர்த்தி' என்கிறோமே? இத்தகைய கருணை காட்டும் இயல்பு ஒவ்வொருவருக்கும் அமைந்திருக்குமானால் அதுவே அவன் மனசக்திக்கு ஏற்ற சாதனமாக அமையும். முதிதா மூன்றாவது மனப்பாங்கு முதிதா என்பது. அறநெறி பிறழாது நன்னெறியில் வாழ்பவர்களைப் பற்றி பிறர் சொல்லக் கேட்கும்போதோ அல்லது பார்க்கும்போதோ நமக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படு கிறது. அன்னாரிடம் நமக்கு நெருங்கிப் பழகவோ பேசவோ சாத்தியமோ வாய்ப்போ இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் களின் நேர்மையான வாழ்க்கை பற்றிக் கேட்கும்போது மகிழ்ச்சி உண்டாகிறது. இந்த மனப்பாங்கு முதிதா எனப்படுகிறது. உபேஷா நான்காவது இயல்பு உபேஷா என்பது. உலகில் சிற்றியல்பு உடையவர்களும் துஷ்டர் களும்கூட வாழ்கிறார்கள் அல்லவா? அவர் களைப் பற்றியும், அவர்கள் சமூகத்திற்கு விளைவிக்கும் கேடுகளைப் பற்றியும் நம் மனதில் ஏற்காது பாராமுகமாக இருப்பதுதான் இந்த உபேஷா என்ற மனப்பாங்கு. அன்னாரின் சிற்றியல்புகளை மனதில் ஏற்கும்போது நம் மனது மாசடைகிறது. உலகிலுள்ள கேடுகளைப் பொருட்படுத்தாதி ருத்தல் என்பதே ஒரு நல்ல ஆத்ம பயிற்சி தான். சேற்றிலிருக்கும் மீன், தன் மேனியில் சிறிதும் சேறு படாதபடி பளபளப்பாகவே இருக்கிறதல்லவா? உலக தோஷங்களை மனதில் ஏற்காதிருந்தால் தெய்வீக சித்தி விருத்திகள் தானே வந்து வடிவெடுத்துக் கொள்ளும். இம்மாதிரி நல்லதை வளர்ப்பதே கேட்டைத் தவிர்க்க தக்க உபாயம். இந்த நான்கு மனநிலைகளும் அந்தக்கரண சுத்திக்கு மிக முக்கியமானவை. இந்த மனநிலை களில் வாழ்பவன் "தெய்வத்தில்' வாழ்பவனாகிறான்.

No comments:

Post a Comment