Wednesday, September 5, 2012

தானத்தின் எட்டு படிகள்

மைமோனிடீஸ் என்பவர் வைத்தியர், தத்துவஞானி (1135-1204) யூத மதத்தைச் சேர்ந்தவர் ) ஒரு கட்டுரையில் தானத்தின் எட்டு படிகளைப்பற்றி விளக்குகிறார். அந்த எட்டு படிகள் விவரம் வருமாறு:- முதல் படி மனத்திற்குப் பிடிக்காமலோ, மன வருத்தத்தோடோ கொடுப்பது. இந்த தானம் கையால் கொடுக்கும் தானம். இருதயத்திலிருந்து வரும் தானம் அல்ல. 2-ஆவது படி சந்தோஷத்தோடு, ஆனால் கேட்பவர் தேவைக்குக் குறைவாகக் கொடுக்கும் தானம். 3-ஆவது படி- சந்தோஷமாகவும்,தேவைப்பூர்த்தி செய்யும் வகையில் கொடுப்பது. ஆனால் கேட்ட பிறகு கொடுக்கும் தானம். 4-ஆவது- சந்தோஷமாகவும், கேட்காமலேயே தேவைக்கேற்ற தானத்தை தானம் பெறுபவர் கையில் கொடுத்து அவரை வெட்கப்படும்படி செய்யும் தானமாகும். 5-ஆவது படி யாருக்காக தானம் கொடுக்கப்பட்டது என்று தெரியாமலேயே தனாம் செய்வது. முன்னோர்களில் சிலர் தங்கள் வீட்டு முற்றங்களில் பண மூட்டைகளை தொங்கவிடுவார்களாம். பணம் தேவையுள்ளவர்கள் கொடுத்தவருக்கும் தெரியாமலேயே எடுத்துச் செல்வார்களாம். 6-ஆவது படி- தானம் கொடுத்தவரின் பெயர் விளம்பரப்படுத்தாமலேயே கொடுக்கப்படும் தானம். முந்தைய காலத்தில் சில நல்லவர்கள் யாருக்கு உதவி தேவையோ அவர்கள் வீட்டுக்கு தானப்பொருள்களை அனுப்புவது உண்டு. யார் அனுப்பினர் என்பது பெறுபவருக்கு கூடத்தெரியாது. 7-ஆவது படி- கொடுப்பவருக்கும் யாருக்கு கொடுக்கிறோம் என்று தெரியாது. வாங்கியவருக்கும் யாரிடமிருந்து வந்தது என்று தெரியாது. இந்த தானம் சிறந்தது. ஒரு பொது இடத்தில் (உதாரணம் கோவிலில் ஒரு அறை) தானப்பொருள் கொடுக்கப்படும். வேண்டியவர்களுக்குத் தகுதிக்கு ஏற்ப அது விநியோகிக்கப்படும். 8-ஆவது படி- எல்லாவற்றுக்கும் மேலான உயர்ந்த தானம், ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகள். ஒரு மனிதனுக்கு தினந்தோறும் ஒரு மீனை தானமாகக் கொடுக்காதே. அவனுக்கு மீன் பிடிக்கக்கற்றுக் கொடுத்துச் சொந்தக்காலில் நிற்க வை'' என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தேவை என்று வருகிறவர்களுக்கு ஒரு தொழிலையோ, வியாபாரத்தையே கற்றுக் கொள்ள வசதிகள் செய்வது மிகப்பெரிய தானம். இந்த தானம் தான் அவர்களை மற்றவர்களிடம் கை ஏந்தி நிற்காத நல்ல தன்மானமுள்ள மனிதர்களாக மாற்றும்

No comments:

Post a Comment