Monday, September 3, 2012

நாமே செய்து கொண்டால் அந்த சமையல் எப்படி இருந்தாலும் தேவாம்ருதமாகத் தோன்றும்.காஞ்சிப்பெரியவர்

சுவாமி பிரசாதம், குரு பிரசாதம் தவிர ஸ்வயம்பாகம் (அவரவரே சமைப்பது) என்று ஆக்கிக் கொண்டு விட வேண்டும். என் அபிப்ராயம், பதினைந்தே நிமிஷத்தில் தயாரிக்கக் கூடியதாக ஏதாவது ஒரு சிம்பிள் ஆகாரத்தைப் புருஷர்கள் அத்தனை பேரும் தெரிந்து கொண்டு தாங்களே அதைப் பண்ணிப் போட்டுக் கொண்டு சாப்பிடவேண்டுமென்பது. அரிசியைக் களைந்து உலர்த்தி சிவக்க வறுத்தெடுத்து அரைத்து வைத்துக் கொள்வதே "ஸத்துமா'. உடம்புக்கு நல்ல சத்து தருவதாலும், ஸத்வகுணம் (சாந்தம்) ஊட்டுவதாலும் அதற்க ஸத்துமா என்றே பெயர் இருக்கிறது. ஸத்துமாவில் மோரை விட்டோ, பாலை விட்டோ சாப்பிடலாம். கொஞ்சம் சாப்பிட்டால் கூட பசி அடங்கி புஷ்டியாய் இருக்கும். நாள் கணக்கில் பிரயாணம் பண்ணும்போதும் கூட, கண்ட இடத்தில் கண்டதைத் தின்னாமல் இதைக்கொண்டே காலம் தள்ளி விடலாம். தானே சமைத்துக் கொள்ளும் போது, வேலையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்குமாதலால், பல தினுசுகளில் வயஞ்ஜனங்களை (சைடு டிஷ்) பண்ணிக் கொள்ளத் தோன்றாது. அதாவது, நாக்கு ருசி, அமித போஜனம் பண்ணி சித்த சக்தியைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்போம். இன்னொருத்தர் சமைத்துப் போடுகிற போது நாக்கைத் தீட்டிக்கொண்டு, "இது உப்பு, அது உறைப்பு' என்று நோணாவட்டம் சொல்லத் தோன்றுகிறது. இதில் நமக்கும்அதிருப்தி! பண்ணினவர்களுக்கும் மனவருத்தம்! நாமே செய்து கொண்டால் அந்த சமையல் எப்படி இருந்தாலும் தேவாம்ருதமாகத் தோன்றும். சாப்பிடுகிற வேளையில் "அரிபிரி' என்றில்லாமல், சந்தோஷமாக திருப்தியாக இருக்கும். ஆகாரம் இதனாலேயே உடம்பில் ஒட்டி சித்தத்திலும் நல்லதைப் பண்ணும். ஸ்வயம்பாகத்தினால் (சுயமாக சமைப்பதால்) ஒரு டிஸிப்ளினும் உண்டாகிறது. சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கவோ, சீட்டு,சினிமா என்று போகவோ விடாமல், சமையல் வேலை என்று ஒருத்தனைக் கட்டிப் போடுகிறதல்லவா!

No comments:

Post a Comment