Wednesday, September 5, 2012

அனுமனின் சிறப்புகள்!

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொரு வரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து சேவை செய்தார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச் செய்யும் சனிபகவானையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. பகைவரை அச்சமுறச் செய்யும் வலிமையும், மேருமலையைக் குன்றச் செய்யும் உறுதியான மனோதிடமும் உடையவர் ஆஞ்சநேயர். இணையற்ற ராமபக்தரான அனுமன் பிரம்மச்சரியத்தை முழுமையாகப் பின்பற்றுபவர். ஆற்றல், சீலம், அறிவு, பக்தி, வெற்றி, வீரம், புலனடக்கம் என்று நிகரற்ற தன்மைகளைக் கொண்டவர். அனுமனிடம் விஷ்ணுவின் குணநலன்களும் உண்டு. அதே சமயத்தில் ருத்ராம்சமாகவும் இவர் கருதப்படுகிறார். அனுமன், பரமாத்மாவைப் போன்று என்றும் நிலையானவர் என்றும் நம்முடன் சிரஞ்சீவியாய் இருந்து, நமக்கெல்லாம் ராமநாமத்தின் மீது ருசியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார். இவரை வணங்கிய மாத்திரத்தில் தைரியமும் ஞானமும் நமக்கு வளரும், காமம் நசிந்து விடும். அனுமன் தனது பக்தர்களுக்கு புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், போன்றவற்றைத் தருபவர் ஆவார். ஆஞ்சநேயருக்கு வெண்ணையும் வெற்றிலையும் மிகவும் உகந்தது. வெண்ணை உருகும் தன்மை உடையது. பக்தர்கள் ராமநாம ஜெபம் செய்தால் அனுமான் உருகிப்போய் அவர்கள் கேட்டதைத் தருவார். அசோகவனத்தில் தன்னை சந்தித்து ராமபிரான் அங்கு வரப்போகும் செய்தியை அறிவித்தமைக்காக சீதாதேவி அனுமானுக்கு வெற்றிலையால் ஆசீர்வாதம் செய்தாள். இதன் காரணமாக அவருக்கு வெற்றிலை உகந்ததாகிறது. வியாழக்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் சுந்தரகாண்டம் படித்து வெற்றிலையும், வெண்ணையும் சாத்தி வழிபடலாம். பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு என்ன படைப்பது? பஞ்சமுக ஆஞ்சநேயரில் அனுமன் முகத்திற்கு வாழைப்பழமும், கொண்டைக்கடலையும், நரசிம்ம முகத்திற்கு பானகமும், நீர் மோரும் படைக்க வேண்டும். கருட முகத்திற்கு தேனும், வராக முகத்திற்கு சர்க்கரைப் பொங்கல் வடையும் படைக்க வேண்டும். மேல் முகமான ஹயக்கிரிவருக்கு எதுவும் படைக்க வேண்டியதில்லை ஆஞ்சநேயர் காண்டம் ராமாயணத்தில் மிக சிறந்தது சுந்தரகாண்டம். வால்மீகி ஏன் சுந்தர காண்டம் என இதற்கு பெயரிட்டார் தெரியுமா? சுந்தரம் என்றால் அழகு என்று அர்த்தம். சுந்தரகாண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயர். எனவே வால்மீகி முதலில் "ஆஞ்சநேய காண்டபம்'' என்று தான் காண்டத்துக்கு தலைப்பு கொடுத்தார். உடனே, ஆஞ்சநேயர் வால்மீகியிடம் வந்து, நான் ராமதாசன். ஆகையால் என் பெயர் வைக்க வேண்டாம்'' என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். பொருள் புதிந்த புன்னகையுடன் சம்மதித்து ஆஞ்சநேயர் விருப்பப்படி மாற்றி "சுந்தர காண்டம்'' என பெயரிட்டார். ஆஞ்சநேயர் மகிழ்ச்சியடைந்தார். பின்பு ஒருநாள் ஆஞ்சநேயர், தன் அன்னை அஞ்சனையை, காண சென்றபோது "சுந்தரா வா'' என்று அஞ்சனை வரவேற்றான். ஆஞ்சநேயர் வியப்புடன் அன்னையை நோக்கி, "ஏன் அம்மா, என்னை சுந்தரா என அழைத்தீர்கள்'' என்று கேட்டார். அதற்கு அஞ்சனையோ, நாங்கள் உனக்கு இட்ட பெயர் சுந்தரம், அதனால் அவ்வாறு அழைத்தேன்'' என்று சொன்னாள். வால்மீகியின் தீர்க்க தரிசனத்தை ஆஞ்சநேயர் அப்போதுதான் உணர்ந்தார். ஓடோடி வந்து வால்மீகியை சந்தித்து மறுபடியும் பெயர் மாற்றும்படி கேட்டார். வால்மீகியோ, சுந்தர காண்டத்தை நிறைவு செய்து விட்டேன். இனி, மாற்றுவதற்கு இடமில்லை என முடிவாக சொல்லி விட்டார். ஆஞ்சநேயர் பெருமையை அனைவரும் அறியும் பொருட்டு வால்மீகி இவ்வாறு செய்தார்.

No comments:

Post a Comment