Tuesday, September 4, 2012

தான எண்ணத்தையும் தானம் செய்யுங்கள்

தானம் செய்ததும் சிலருக்கு தலைக்கனம் வந்து விடும். அந்த எண்ணத்தை கைவிட வேண்டும் என்று காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் கூறியுள்ளார். அவர் மேலும்கூறியதாவது:- சொத்துக்களை நாமே வைத்துக்கொண்டு அனுபவிப்பதில் பெறுகிற சுகம் தற்காலிகமானது. இந்த தற்காலிக சுகம் நித்ய சவுக்கியமாக மாறதானம் செய்யவேண்டும். உடமைகளை நாம் வைத்துக்கொண்டு அனுபவிப்பதை விட கொடுத்து அனுபவித்தால் இதுவே பரம ஆனந்தத்தை தருகிறது. சாஸ்வத சவுக்கியத்துக்கும் வழிகோலுகிறது. இதனால்தான் உபநிஷத்துகளில் முதலாவதான ``ஈசாவால்ய'' த்தில் முதல் மந்திரத்திலேயே ``தியாகம் பண்ணி அனுபவி'' என்ற செல்லியிருக்கிறது. கொடுக்க வேண்டும் அதுதான் தியாகம். அதைத்தான் வேதம் வற்புறுத்துகிறது. மற்ற வஸ்துக்களை கொடுத்துவிட்டு `நான் கொடுத்தேன்' என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக் கொண்டே இருந்தால் இந்த அகங்காரமானது தியாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மா அபிவிருத்தியை அப்படியே ஏப்பம் விட்டு விடும். எனவே தானம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தானம் பண்ணிவிட வேண்டும். மகாபலி நிறையக் கொடுத்தான். வாரிவாரிக் கொடுத்தான். ஆனால் தான் கொடுக்கிறோம் என்ற அகங்காரத்தை அவன் பகவானுக்கு பலி கொடுக்கவில்லை. இதனால்தான் பகவானே அவனிடம் இந்த அகங்காரத்தை யாசகமாகப் பெற்று அகங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான். சமூகசேவை பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டு வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அகங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால் பிரயோஜனமில்லை. அது நின்று நிலைத்து விளங்காது.

No comments:

Post a Comment