Wednesday, September 5, 2012

அட்சய திருதியையின் சிறப்பு

மகாபாரதத்தில் துச்சாதனன் துகில் உரிந்துபோது நிராதரவான நிலையில் இருந்து திரௌபதி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரைச் சரணடைந்தாள். அப்போது ஸ்ரீகிருஷ்ணரும் தான் இருந்த இடத்தில் இருந்தபடியே, தன் இரண்டு கைகளையும் உயர்த்தி `அட்சயம்' என்றார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அருளால், துச்சாதனன் இழுக்க இழுக்க திரௌபதியின் துகில் புதிது புதிதாகத் தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த திவ்ய ஆடைகள் சபை முழுவதும் குவிந்தன. `அட்சயம்' என்றால் அழியாதது. அதாவது அள்ள அள்ளக் குறையாதது. மேன்மேலும் தொடர்ந்து வளர்வது என்று அர்த்தம். அட்சய திருதியை நாளன்றுதான் கிருதயுகம் பிறந்தது. இதுவே அட்சய திருதியை முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கான காரணங்களில் முதல் காரணமாக விளங்குகிறது. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றதும், மணிமேகலை அழுதசுரபி பாத்திரம் பெற்றதும் ஒரு அட்சய திருதியை திருநாளில்தான். குழந்தைகளுக்கு `அட்சராப்பியாசம்' செய்யும் சடங்கு, `அட்சய திருதியை' நாளிலும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. இந்த தினத்தில் அக்னியில் ஆஹுதி செய்யப்பட்ட பொருள்களும், தானம் செய்யப்பட்ட பொருள்களும் குறைவதே இல்லை. ஆகவே ரிஷிகள் இந்த தினத்தை `அட்சய' என்றார்கள். தேவர்களுக்காகவும் பித்ருக்களுக்காகவும் நம்மால் தானம் செய்யப்பட்டவை. மேன்மேலும் விருத்தியடைகின்றன. அட்சய திருதியை அன்று அதிகாலையில நீராடி, ஸ்ரீமந் நாராயணனின் நாமங்களைச் சொல்லி காரியங்களைத் தொடங்க வேண்டும். இதனால் ஏற்படும் நன்மைகள் பலவாகும். பலவகையான தான, தருமங்களைச் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். தீவினைகள் நம்மை அணுகாது. * ஏழை, எளியவர்கள்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். * வறியவர்களுக்கு ஆடைகள் தானம் கொடுத்தால் நோய் நொடிகள் நீங்கும். நலம் விளையும். * இந்நாளில் கனிவகைகள் தானம் செய்தால் இன்பமான வாழ்க்கை அமையும். உயர் பதவிகள் கிடைக்கும். * குளிர்ந்த நீர் மோர், பானகம் போன்றவற்றை அளித்தால், கல்விச் செல்வம் வளரும். * உணவுத் தானியங்களை தானம் செய்தால் விபத்து அகால மரணம் போன்றவை ஏற்படாது. * இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். வளம் சேரும். முக்கியமாக தயிர் அன்னதானம் செய்தால், பாப விமோசனம் ஏற்படும். * தண்ணீர்ப் பந்தல் வைத்தால் நிழற்குடை அமைத்தல் காலணி, விசிறி, குடை போன்றவை தானம் செய்தால் புண்ணியம் ஏற்படும். - இவ்வாறாக அட்சய திருதியையின் பெருமையை பவிஷ்யோத்தர புராணம் மிகவும் விரிவாக விவரிக்கிறது.

No comments:

Post a Comment