Tuesday, September 4, 2012

ஒருவன் தன்னுடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைத்தான் தனக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தன்னுடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைத்தான் தனக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும். மீதியில் ஒரு பங்கு பெற்றோருக்கு, இரண்டாவது பங்கு பித்ருக்களுக்கு (இறந்து போனவர்கள் நினைவாக) மூன்றாவது பங்கு சமூகத்திற்கு நான்காவது பங்கு அரசருக்கு அதாவது அரசாங்கத்திற்கு வரியாக கொடுப்பதற்கு கடைசிப்பங்கு தானம் தர்மங்கள் செய்வதற்கு என்று பழைய நூல்கள் சொல்கின்றன. தானத்தில் எத்தனையோ வகை உண்டு. பொருள் தானம், வஸ்த்ர தானம் (உடை) அன்னதானம்(சாப்பாடு),பூதானம்(நிலம்), கன்னிகா தானம் (கல்யாணம்), வித்யா தானம் (படிப்பு), கோ தானம்(பசு). இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதில் எது உயர்ந்ததுப எல்லா தானங்களிலும் மிகச் சிறந்த தானம் அன்னதானம் தான். ஏன் தெரியுமா? மற்ற எல்லா தானங்களிலும் தானம் பெறுபவருக்கு போதும் என்ற திருப்தி ஏற்படுவதில்லை. 10 ரூபாய் கொடுத்தால், 20 ரூபாய் கொடுத்திருக்கக்கூடாதா என்ற நினைப்பு வரும். ஆடைகள் கொடுத்தால், இதைவிட நல்ல ஆடைகள் தரக் கூடாதா என்று நினைப்பார்கள். இதே மாதிரி மற்ற தானங்களிலும் ஏற்படும். ஆனால் ஒருவருக்குச் சாப்பாட்டு போட்டால், அவர் வயிறு நிறைந்து விட்ட பிறகு மேலே ஒரு கரண்டி அன்னம் அளித்தாலும் கையை வைத்துத்தடுத்து "போதும், போதும்'' என்று கூறுவார்கள். மேலும் வாயார வாழ்த்தவும் செய்வார்கள். அன்னதானமே நமக்கு எல்லாச் செல்வங்களையும் அளிக்க வல்லது. பசித்த ஒருவனுக்கு அளிக்கப்படும் உணவானது ஆயிரம் மடங்காக வளரும். நாம் பிறருக்கு அளிக்கும் உணவு, அதனை உண்ணும் மனத்தின் வாழ்த்துதலாலும் அன்னதானம் செய்பவர்களுக்கு பல்வேறு செல்வங்களையும் அளிக்கும். அன்னதானம் செய்வதற்கு தர்ம சிந்தனை இருந்தால் மட்டும் போதுமானது. ஒரு பரம ஏழை ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய நினைத்தான். அவனிடம் பணமில்லை. குருவிடம் கேட்டான். அவரோ அந்த ஏழையின் தர்ம சிந்தனை அறிந்து கொஞ்சம் அரிசி மாவினை எடுத்து எறும்புப் புற்றினுள் போட்டு விடுமாறு கூறினார். அவன் சக்திக்குத் தகுந்த அன்னதானம் அது. மேலும் அவனது தர்ம சிந்தனைக்குக் கிடைத்த நல்வழி. தேவர்களுக்கு யாகம் செய்வதாலும் ரிஷிகளுக்கு தர்ப்பணம் செய்வதாலும் திருப்தி ஏற்படுகிறது. நம் குலத்தை வாழையடி வாழையெனத் தழைக்கச் செய்யும் நம் பித்ருகளுக்கு அன்னதானத்தினால் மட்டுமே திருப்தி அளிக்க முடியும்.

No comments:

Post a Comment