Tuesday, September 4, 2012

தானம் செய்வதற்கு பணம் முக்கியமே அல்ல.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தானம் செய்ய வேண்டும். தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை எல்லா மதங்களும் வலியுறுத்தியுள்ளன. "ஏழ்மை நிலையில் உள்ள என்னால் எப்படி தானம் செய்ய முடியும்?'' என்று பெரும்பாலானவர்கள் நினைக்கலாம். தானம் செய்வதற்கு பணம் முக்கியமே அல்ல. கொடுத்து உதவும் நல்ல மனம்தான் வேண்டும். சிலர் தானம் செய்வது எள்முனை அளவு கூட வெளியில் தெரியாது. மன நிறைவுக்காக ஏழை-எளியவர்களை, ஆதரவற்றவர்களை தேடி, தேடி போய் உதவி செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு ஆதரவற்ற இல்லத்துக்கு சென்று சிறுமிகளுக்கு உதவி செய்து பாருங்கள், அவர்கள் முகம் கோடி சூரியனை கண்டது போல பிரகாசமாகும். அந்த மகிழ்ச்சி தரும் புண்ணியத்துக்கும், திருப்திக்கும் அளவே இல்லை. ஆனால் சிலர் கோவிலுக்கு ஒரு டியூப் லைட் வாங்கி கொடுத்து விட்டு, அதில் கொட்டை எழுத்தில் தங்கள் பெயரை எழுதி இருப்பார்கள். சிலர் வெளியில் பார்க்க கஞ்சன் போல தெரிவார்கள். ஆனால் முக்கிய சேவைகளுக்கு வாரி, வாரி தானம் செய்வார்கள். உலகப்புகழ் பெற்ற ராக்பெல்லர் அந்த ரகம்தான். உலக கோடீசுவரர்களில் ஒருவராக திகழ்ந்த போர்டு கார் நிறுவனத் தலைவரான அவர், ஒரு பைசா கூட அனாவசியமாக செலவு செய்ய மாட்டார். லாட்ஜில் தங்கினால் சாதாரண அறையில்தான் தங்குவார். அப்படிப்பட்டவர் ஒரு பள்ளிக்கூடத்துக்கு அறைகள் கட்ட ஒரே தடவையில் 2 லட்சம் டாலர்களை அள்ளி தானமாக கொடுத்தார். இப்படி தானம் செய்பவர்களில் பல வகையினர் இருப்பது போல, தானம் கொடுப்பதிலும் பல வகைகள் உள்ளன. கோவிலுக்கு என்று சில வகை தானங்கள் உள்ளன. தனி நபர்கள் செய்வதற்கு என்றே சில வகை தானங்கள் பிரத்யோகமாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த தானங்களை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்ப தான, தர்மம் செய்தால் அளவிடற்கரிய புண்ணிய பலன்கள் உங்களைத் தேடி வரும்.சமீப காலமாக அன்னதானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானங்கள் மிகப் பிரபலமாக பேசப்படுகின்றன. என்றாலும் உங்களுக்கு மன நிறைவு தரும், உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்தாலே போதும். நீங்கள் எந்த தானம் செய்வதாக இருந்தாலும் பூஜை அறையில் விளக்கேற்றி, கடவுளை மனம் குளிர வணங்கி விட்டு, மகிழ்ச்சியுடன் கொடுத்தால் நிச்சயமாக புண்ணியம் கிடைக்கும். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வதுதான் தானம் என்பதை மனதில் ஆழமாக பதிய செய்து கொள்ள வேண்டும். மேலும் எல்லாராலும், எல்லாருக்கும் தானம் செய்து விட முடியாது. பாத்திரம் அறிந்தே தானம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே தானம் செய்வதில் உள்ள ஐதீகங்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

No comments:

Post a Comment