Wednesday, September 5, 2012

அஷ்டலட்சுமிகள்--அஷ்ட ஐசுவரியங்கள் -எட்டு விதமான போகங்கள்

மகாலட்சுமியின் அருளாற்றலை எட்டு விதமாக பிரித்து அஷ்டலட்சுமிகள் என்று போற்றுவது மரபு. அஷ்ட லட்சுமிகள் வருமாறு:- 1. கஜலட்சுமி, 2. ஆதிலட்சுமி, 3. சந்தானலட்சுமி, 4. தனலட்சுமி, 5. தானியலட்சுமி, 6. விஜயலட்சுமி, 7. வீரலட்சுமி, 8. மகாலட்சுமி. மகாலட்சுமியின் அருளாசியினை எட்டு விதமாக செல்வங்கள் என்ற கருத்தில் அஷ்ட ஐசுவரியங்கள் என்று கூறுவர். 1. ராஜாங்கம் (ஆட்சி அல்லது உயர் பதவி), 2. மக்கள், 3. சுற்றம், 4. பொன், 5. நவமணிகள், 6. தானியம், 7. வாகனம், 8. பணியாட்கள் இவை தான் அஷ்ட ஐசுவரியங்கள். பொதுவாக எட்டு என்ற எண்ணுக்கு தனித்த பெருமை உண்டு. பகவான் விஷ்ணுவை வழிபடும் முக்கியமான மந்திரத்தை அஷ்டாட்சரம் என்று கூறுவர். அதாவது ஓம் நமோ நாராயணா என்பதாகும். சித்த மருத்துவ முறைப்படி 1. சுக்கு, 2. மிளகு, 3. திப்பிலி, 4. ஓமம், 5. சீரகம், 6. கருஞ்சீரகம், 7.இந்துப்பு, 8.பெருங்காயம் ஆகிய மருந்து மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் மருந்துக்கு அஷ்ட சூரணம் என்று பெயர். அகில், சந்தனம், குங்குமப்பூ, மஞ்சள், கஸ்தூரி, கோரோஜனை, விளாமிச்சை, குருவிவேர் என்ற இந்த எட்டு நறுமணப் பொருட்களும் அஷ்ட கந்தம் என அழைக்கப்பெறுகின்றன. எட்டு சுலோகங்கள் கொண்டது அஷ்டகம். ஜயதேவரின் அஷ்டபதி மிகவும் புகழ் பெற்றதாகும். மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித செல்வங்களுக்கு மகாலட்சும அதி தேவதையாகும். மகாலட்சுமியின் எட்டு விதமான தோற்றத் திருவுருவங்களையும் மெய்யன்போடும், முழுமையான பக்தியோடும் வழிபடும் எவரும் மகாலட்சுமியின் அருளால் இன்பமும் மகிழ்ச்சியும் இழையோடும் அஷ்ட போக வாழ்க்கையை பெறுவார்கள். அத்தகைய எட்டு விதமான போகங்கள் விவரம் வருமாறு:- 1. குடும்பத்தில் அன்பும், பண்பும், அழகும் அமைந்த, கணவன்-மனைவி அமைதல். 2. மன உல்லாசத்துக்கு ஆதாரமாக விளங்கும் சிறந்த உடைகளை பெறுதல். 3. அழகு மிளிரும் அணிகலன்களை அடைதல். 4. ருசியான உணவு வகைகள் அடைய பெறுதல். 5. நலம் தரும் தாம்பூல வகைகள் தடையின்றி கிடைத்தல். 6. அற்புதமான நறுமன பொருட்களை பெறுதல். 7. மனத்திற்கு மகிழ்ச்சிïட்டும் இன்னிசை. 8. மன உல்லாசத்துக்கு உதவும் மண மலர்கள். இந்த எட்டு போகங்களும் முழுமையாக அமையப் பெற்றது தான் உயர்ந்த வாழ்க்கை.

No comments:

Post a Comment