Monday, September 3, 2012

நாமும் பணிவைக் கற்றுக்கொள்வோமா!

ஏதோ சிறிய சாதனை செய்து விட்டால் போதும்! ஏதோ, பெரிதாகச் சாதித்து விட்டது போல் தாம்தூமென குதிப்பவர்களைத் தான் வாழ்வில் சந்தித்திருக்கிறோம். ஆனால், இதோ! இந்த மகானின் தன்னடக்கத்தைப் பாருங்கள்! திருப்பதி திருமலையில் ராமானுஜரின் தாய்மாமனாரான திருமலை நம்பி வசித்தார். ஒருமுறை, ராமானுஜர் திருப்பதி வந்தார். அவர் மலையேறிக் கொண்டிருக்கும் செய்தி, திருமலை நம்பிக்கு கிடைத்தது. மருமகன் என்றாலும் மகான் அல்லவா ராமானுஜர்! அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டும், பசித்து வரும் அவருக்கு உணவளிக்கும் பொருட்டும் பிரசாதம் மற்றும் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு திருமலை நம்பி படியிறங்க ஆரம்பித்தார். ஓரிடத்தில் அவர்கள் சந்தித்தனர். ""ஐயனே! பெரியவரான தாங்களா எங்களைக் காண வருவது! பிரசாதப் பாத்திரங்களை சுமந்து வருகிறீர்களே! அப்படியே எங்களுக்கு <உணவளிப்பதாக இருந்தாலும், ஒரு சிறியவரை அனுப்பியிருக்கலாமே!'' என்றார் ராமானுஜர். ""ராமானுஜரே! நான் அப்படிப்பட்ட சிறியவர்களைத் தேடாமல் இல்லை! ஆனால், எல்லாருமே என்னிலும் உயர்ந்தவர்களாகவே இருந்தனர்'' என்றார். இதுகேட்ட ராமானுஜர், ""ஆகா! எவ்வளவு வயதானாலும், ஏழுமலையானின் அன்பைப் பெற்றவர் என்றாலும் கூட எத்தனை தன்னடக்கம்...!'' என்று நெகிழ்ந்து போனார். நாமும் பணிவைக் கற்றுக்கொள்வோமா!

No comments:

Post a Comment