Wednesday, September 5, 2012

ராம' நாமத்திற்குள் இந்த பிரபஞ்சமே அடங்கியுள்ளது

தாய்- தந்தையர் தான் உலகம் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காக, ஞானப்பழத்தை வைத்து நாரத முனிவர் மூலமாக சிவபெருமான் நடத்திய திருவிளையாடல் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதில் விநாயகருக்கும், முருகருக்கும் உலகத்தை யார் முதலில் சுற்றி வருவது என்று போட்டி வைத்து, விநாயகர் தாய்- தந்தைதான் உலகம் என்ற கருத்தை கூறி சிவன்-பார்வதியை சுற்றிவந்து பழத்தை பெற்றுக்கொள்வார். அதே போல் மற்றொரு முறையும் விநாயகருக்கும், முருகருக்கும் போட்டி வைக்கப்பட்டது. அதிலும் விநாயகர் தான் வெற்றி பெற்றார். அந்த வெற்றிதான் அவருக்கு கணபதி என்ற பெயர் வரக் காரணமாக அமைந்தது. அந்த கதையை பார்ப்போம். ஒரு சமயம்... கையிலாயத்தில் தம்மை வழிபட்டு சேவை செய்யும் கணங்களுக்கு அதிபதியாக, விநாயகர், முருகர் ஆகியோரில் யாரை நியமிப்பது என்ற குழப்பம் சிவபெருமானுக்கு ஏற்பட்டது. இதனால் முன்பு போலவே யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறார்களோ? அவர்களே கணங்களின் தலைவராக தகுதி படைத்தவர்கள் என்று சிவன் கூறினார். ஏற்கனவே ஒரு முறை ஏமாற்றம் அடைந்திருந்த முருகர் இந்த முறை சுதாரித்துக் கொண்டு தாய்- தந்தையரை சுற்றி வர தொடங்கினார். பார்த்தார் விநாயகர், அவருக்கு `ராம' நாமத்திற்குள் இந்த பிரபஞ்சமே அடங்கியுள்ளது என்ற உண்மை தெரியும். எனவே ஒரு கணத்தில் தரையில் அவர் `ராமா' என்று எழுதி அதை சுற்றி வந்து வெற்றியும் பெற்று விட்டார். விநாயகரின் புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்த சிவபெருமான், மூத்த மகன் விநாயகரை பாராட்டியதுடன், கணங்களுக்கு அதிபதியாக இருக்கும் படி ஆசி வழங்கினார். மேலும் கணங்களின் அதிபதியான நீ இன்று முதல் `கணபதி' என்ற திருநாமம் பெற்று விளங்குவாய் என்றும் அருள்புரிந்தார்.

No comments:

Post a Comment