Wednesday, September 5, 2012

வீட்டில் குறைவில்லா செல்வம் பெருக...

செல்வம், பொன், பொருள்,வியாபாரம், தொழில் அபிவிருந்தி ஆகியவற்றை அருள்பவர் லட்சுமி குபேரர். குபேரன் என்றால் செல்வத்தைப் பெருக்குபவன். சிவபெருமான் அவனை வட திசைக்கு அதிபதியாக நியமித்து ஆளச் செய்தார். அன்று முதல் வட திசைக்கு ஏற்றம் உண்டானது. இதனால் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற சொல் வழக்கு உண்டானது. குபேரனுக்குரிய விமானம் குபேரவிமானம். இவ்விமானம் எங்கு பறந்து சென்றாலும் பொன், முத்து, நவமணிகளைச் சிந்திக் கொண்டே செல்லும். குபேரன் சிவந்த நிறமும், குள்ளமான உருவமும், புஷ்டியான செல்வச் செழிப்பும் கொண்டவராக இருக்கிறார். குபேர பட்டினத்திற்கு அழகாபுரி என்று பெயர். அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மீது மீனாசனத்தில் மெத்தையின் மீது குபேரன் அமர்ந்திருப்பார். முத்துக்குடை அவர் மீது சுழன்று கொண்டிருக்கும். அட்சய திரிதியை அன்று செல்வ வளம் தரும் லட்சுமி குபேரரை வழிபட்டால் வீட்டில் செல்வத்திருமகளின் அருள் பெருகும். நெல்லி மரத்தில் திருமகள் வாசம் செய்வதாக ஐதீகம். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்கிறது. நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகத் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் திருமகள் நித்திய வாசம் புரிவாள். தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் இருக்கும். குறைவில்லா செல்வம் வீட்டில் பெருக அட்சய திரிதியை நாளில் நெல்லிமரத்தை வீட்டில் நடுவது சிறப்பு.

No comments:

Post a Comment