Wednesday, September 5, 2012

ஸ்ரீராகவேந்திரர்

ஒருநாள் ராகவேந்திரர், மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருதார். அவர் திடீரென்று எழுந்து, ஆகாயத்தை பார்த்து வணங்கி விட்டு, எதையோ கேட்டார். மறுபடியும் வணங்கிவிட்டு அமர்ந்தார். சீடர்களுக்கு வியப்பு, சுவாமிகள் ஏன் வானத்தை நோக்கி வணங்கினார்ப யாரிடம் என்ன கேட்டார்? அவர்கள் விபரம் கேட்டார்கள். அதற்கு ராகவேந்திரர் கூறினார், "ஸ்ரீகிருஷ்ணத்வைபாயனர் என்ற தவசீலர், மேலே வைகுந்தம் சென்று கொண்டே, எனக்கு தரிசனம் தந்தார். நான் அவரை வணங்கி, இன்னும் எவ்வளவு காலம் நான் பூத உடலுடன் வாழ வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், இரண்டு விரல்களை காண்பித்து, மூன்று முறை அசைத்துக் காண்பித்தார். நான் அதை புரிந்து கொண்டு அவருக்கு நன்றி சொல்லி வணங்கினேன். அவர் சைகை காட்டியதன் பொருள், நான் இன்னும் இரண்டு வருடம், இரண்டு மாதம், இரண்டு நாள்தான் பூத உடலுடன் இருக்க முடியும். அதன்பிறகு பிருந்தாவனம் சென்று விடுவேன்'' என்றார். சீடர்களுக்கு ராகவேந்திரரின் வார்த்தை, வருத்தத்தை கொடுத்தது. குரு, தங்களை விட்டு பிரியும் நாள், விரைவில் வருகிறதே என்று கவலைப்பட்டனர். ஸ்ரீராகவேந்திரர், உடனேயே தன்னுடைய பிருந்தாவனத்திற்காக, ஓர் இடத்தை தேடி, யாத்திரை செல்லத் தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். கும்பகோணம் மடத்தில் தன்னுடைய குருவுக்கு குருவான ஸ்ரீவிஜயீந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் முறையோடு, எவ்வித குறையும் இல்லாமல், பூஜை செய்ய தகுந்த ஒருவரை நியமித்தார் அப்போது, ஸ்ரீசக்ரபாணி ஆலயம், ஸ்ரீசாரங்கபாணி ஆலயம் மற்றும் ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயம் ஆகியவை மடத்தின் கண்காணிப்பில் இருந்தன. ஸ்ரீசக்ரபாணி ஆலயம் மற்றும் ஸ்ரீசாரங்கபாணி ஆலயம் ஆகிய இரண்டு ஆலயங்களையும், ஸ்ரீஅகோபில மடத்தின் மேற்பார்வைக்கு விட்டார். ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயத்தை, ஸ்ரீகாமகோடி மடத்தின் மேற்பார்வையில் விட்டார். இவ்வாறு, தன்னுடைய பொறுப்புகள் அனைத்தையும், சரியானவர்களிடம் ஒப்படைத்த திருப்தியுடன், சீடர்களுக்கு ஆசியும், அறிவுரைகளும் கூறிவிட்டு, கும்பகோணத்தை விட்டு யாத்திரை கிளம்பினார். விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லப்பட்டது. மழை இல்லை அதனால் விவசாயம் இல்லை. அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேலை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? மந்திரி சபையை கூட்டி ஆலோசித்தார் அரசர். அப்போது ஒரு மந்திரி, ``நம் ஊருக்கு ஸ்ரீராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு நல்ல வழியை காட்டுவார்'' என்று கூறினார். அரசரும் உடனே, ``ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்'' என்று உத்தரவிட்டார். ஸ்ரீராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார். தன் நாடு மழை இல்லாமல் வறுமையின் பிடியில் இருக்கிறது. மழை பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர் ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அழுதார்கள். நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், ``நெல் களஞ்சியத்திற்கு போகலாம் வாருங்கள்'' என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் ``அட்சயம்'' என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார். அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. 50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல், இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வறட்சி நீங்கியது. பிறகு தான் மக்கள் ராகவேந்திரரின் மகிமையை உணர்ந்தார்கள் ஒருசமயம் ஸ்ரீராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு வந்த மூன்று மலையாள ஜோதிடர்கள், அவருடைய ஜாதகத்தை வாங்கி அவருடைய ஆயுள் காலத்தைக் குறித்துத் தந்தனர். ஒரு ஜோதிடர் சுவாமிகளுடைய ஆயுள் எழுபது ஆண்டுகள் எனவும், இரண்டாமவர் முந்நூறு ஆண்டுகள் எனவும், மூன்றாவது ஜோதிடர் எழுநூறு ஆண்டுகள் எனவும் சொல்ல, கூடியிருந்த மக்கள் ஜோதிடர்களைக் கேலி செய்தார்கள். ``ஒரு மனிதர் முந்நூறு ஆண்டுகளும் எழுநூறு ஆண்டுகளும் உயிர் வாழ முடியுமா'' என்று அவர்கள் கேட்க, சுவாமிகள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி, மூவரும் சரியாகக் கணித்திருக்கிறார்கள் என்று கூறி, அதற்கு விளக்கமும் அளித்தார். அதாவது, தன்னுடைய உடல் இந்த மண்ணில் எழுபது ஆண்டுகள் இருக்கும் என்றும், ஜீவசமாதி அடைந்து முந்நூறு ஆண்டுகள் பிருந்தாவனத்தில் இருக்கப் போவதாகவும், தன்னை உள்ளன்போடு நேசிக்கும் மக்களோடு தான் எழுநூறு ஆண்டுகள் இருக்கப் போவதாகவும், முடிவாக பிரம்ம லோகம் சென்று சங்குகர்ணனாக இருக்கப் போவதாகவும் தெரிவித்தார். 1601-ம் ஆண்டு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரியில் அவதரித்த சுவாமிகள், 1671-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மந்த்ராயலத்தில் பிருந்தாவனப் பிரவேசம் (ஜீவ சமாதி) செய்தார். பின்னர் முந்நூறு ஆண்டுகள் அதாவது 1971-ம் ஆண்டு வரை பிருந்தாவனத்தில் இருந்தவாறே தன் பக்தர்களுக்கு அருள்புரிந்தார். பின்னர் 2671-ம் ஆண்டு வரை தன் பக்தர்களுக்காக நேரிலேயே வந்து அருள்புரிவார் என்பது ஐதீகம். இதை ஸ்ரீ ராகவேந்திரர் பலமுறை தன் பக்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். ஆதோனியில் உள்ள காட்டுப் பிரதேசத்தில் ஒரு முறை ஸ்ரீராகவேந்திரர் சென்று கொண்டிருந்தார். அப்போது அக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வெங்கண்ணா என்ற சிறுவன் ஓடி வந்து ராகவேந்திரரின் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுதான். நான் படிப்பறிவு இல்லாதவன் நான் ஒரு அனாதை எழுதப்படிக்க எனக்கு ஆசையாக உள்ளது. ஆனால் வறுமை விரட்டுகிறது என்றான். அதற்கு ராகவேந்திரர் வருந்தாதே உனக்கு கஷ்டமான நேரத்தில் என் பெயரை உச்சரித்தால், நான் உனக்கு உதவுவேன் என்றார். சில ஆண்டுகள் கழித்து வெங்கண்ணா வாலிபப் பருவத்துக்கு வந்திருந்தான். அப்போது அப்பகுதியை ஆட்சி செய்து வந்த முகமது சுல்தானின் பிரதிநிதியாகிய அஸதுல்லாகான் அந்தக் காட்டுப் பகுதிக்குள் வந்து கொண்டிருந்தான். அப்போது சுல்தானிடமிருந்து ஒரு கடிதத்தை ஒரு குதிரை வீரன் கொண்டு வந்து அஸதுல்லாகானிடம் கொடுத்தான். அஸதுல்லாகானுக்கு படிக்க தெரியாது. அக்கடிதத்தை வாங்கிப் படித்துச் சொல்வதற்கு அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்த போது அங்கே வெங்கண்ணா நின்று கொண்டிருந்தான். அவனிடம் கடிதத்தை கொடுத்து படித்துச் சொல்லும்படி கூறினான். அய்யா எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று வெங்கண்ணா கூறினான். அதை அஸதுல்லாகான் நம்பவில்லை. பார்ப்பதற்கு படித்தவன் போல இருக்கிறாய் நான் மூன்று எண்ணுவதற்குள் நீ இதைப் படித்துச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் உன் தலையை வெட்டுவேன் என்றான். அதனைக் கேட்டு பயந்து போன வெங்கண்ணா ஸ்ரீராகவேந்திரரை வேண்டினான். அப்போது அவனது காதில் வெங்கண்ணா பயப்படாதே நான் சொல்வதைத் திருப்பிச் சொல் என்று அசரீரி கேட்டது. அதன்படி வெங்கண்ணா கூறினார். அஸதுல்லாகானின் திறமையை பாராட்டி சுல்தான் பல பிரதேசங்களை அவனது ஆளுகையில் சேர்த்து இருப்பதாகவும் அதற்காக அவனைக் கவுரவிக்க விருந்து ஏற்பாடு செய்திருப்பதாகவும் என்ற செய்தியை வெங்கண்ணா வாசித்தான். உடனே அஸதுல்லாகான் மிகவும் மகிழ்ச்சியடைந்து வெங்கண்ணாவைத் தமது அரண்மனைத் திவானாக நியமித்தான். இந்த வெங்கண்ணாதான் பின் நாளில் மந்த்ராலயத்துக்கு இடம் ஒதுக்கி அங்கு ராகவேந்திரர் ஜீவசமாதி அடைய உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment