Wednesday, September 5, 2012

குண்டோதரன் பொம்மை ரகசியம்

நம் வீடுகளில் குண்டாக இருக்கும் ஒருவரது பொம்மையை வைக்கிறோம். இவர் இருந்தால் வீட்டில் செல்வம் வளரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்த குண்டோதரன் பொம்மை யாருடைய அம்சம் தெரியுமா? சாந்தகுணம் கொண்ட தேவதைகளில் லட்சுமி குபேரர் முதன்மையானவர். இவர் ராவணனின் தம்பி. அசுரனாகப் பிறந்தாலும் சிவபக்தியில் சிறந்தவர். ராஜயோகத்தை அருளும் தனலட்சுமியும், வீரத்தை அருளும் தைரியலட்சுமியும் இவரிடம் நித்யவாசம் செய்கின்றனர். வடக்கு திசைக்குரிய அதிதேவதையாக இருக்கிறார். இவர் குடியிருக்கும் பட்டணம் அழகாபுரம் எனப்படுகிறது. அங்குள்ள அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மெத்தை மீது, மீன் ஆசனத்தில் அமர்ந்திருப்பார். அட்சய திரிதியை நாளில் லட்சுமி குபேரரை வழிபடுவதால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். வெள்ளிக்கிழமையிலும், சுக்கிர ஹோரையிலும் குபேரரை வழிபாடு செய்வது சிறப்பானதாகும். ராஜராஜேஸ்வரிக்குரிய பஞ்சதசீ மந்திரத்தை எப்போதும் ஜபிக்கும் இவர், மகாலட்சுமியின் நிதிகளான சங்கநிதி, பதுமநிதி ஆகியவற்றை நிர்வகிக்கும் தகுதி பெற்றார். இந்த நிதிகளை இரண்டு குண்டோதர வடிவங்களாக்கி பாதுகாத்தார். சங்கநிதி என்பது திருமகளின் அம்சமான வெண்சங்கினையும், பதுமநிதி என்பது திருமகள் வீற்றிருக்கும் செந்தாமரை மலரையும் குறிக்கும். இவ்விருவரின் அருளால் அன்றாட உணவுக்கே அல்லல்படும் ஒருவன் கூட கோடிக்கு அதிபதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்விருவரும் குபேரனுடைய கட்டளைப்படி அவரவர் உழைப்பு, நம்பிக்கை, முன் வினைப்பயன் ஆகியவற்றின் அடிப்படையில் பொருட் செல்வத்தை வழங்குவர். இதனால் தான் இவர்களது அம்சமாக குண்டு பொம்மைகளை வீட்டில் வைக்கிறார்கள். அட்சயதிரிதியை பிரசாதம்..... அட்சய திரிதியை நாளில் தெய்வங்களுக்கு "யவை'' என்ற தானியம் நைவேத்தியம் செய்வது மிகவும் சிறப்பானது. பார்ப்பதற்கு சம்பா கோதுமை போல நீளமாக இருக்கும். பூஜை சாமான்கள் விற்கும் கடைகளில் இது கிடைக்கும். இதை வேக வைத்து படைக்கலாம். குபேர லட்சுமி, லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர் படங்களின் முன்னால் இதை வைக்கலாம். கோதுமை மாவில் செய்த இனிப்பு பலகாரங்களையும் படைக்கலாம். அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலன் உண்டாகும். சிறியவர்கள் பெரியவர்கிளடம் ஆசி பெறுவதற்கு அட்சயதிரிதியை உகந்த நாள்.

No comments:

Post a Comment