Wednesday, September 5, 2012

மாசி மக பெருமை

பிறவி- அது தொடர்ந்து கொண்டே இருக்கும். அது ஒரு பெருங்கடல் என்றாலும், ஒருநாள் நாம் கரை சேர இயலும். அதற்காக நாம் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பிறவிப் பெருங்கடலில் மூழ்கி, அடுத்த பிறவியைத் தொடர ஆரம்பித்துவிடுவோம். பிறவாமை என்பதே இறையம்சம் பொருந்தியது. பிறவாமை என்பதே இறையோடு கலத்தல் என்பதாம். மானுட ஆன்மா பிறவிச் சூழலில் சுழன்று, பிற ஆன்மாக்களுக்கு படிப்பினையாகி, கடைசியில் பாடமாகிறது. எனவே நம் எல்லாருடைய எண்ணமும் பிறவாமை என்னும் முக்தி நிலையை அடைவதே. ஆனால், அது யாருக்கு எளிதில் கிட்டும் என்பதை இறையே தீர்மானிக்கும். ஒரு காலத்தில் பார்வதியுடன் சிவபெருமான் எழுந்தருளியிருந்தார். உமாதேவியார் சிவபெருமானின் தத்துவ நிலையை தனக்கு விளக்க வேண்டினாள். அப்பொழுது சிவன், "தேவி நாம் எந்த நியதிகளுக்கும் உட்பட்டவர்களல்ல. நமக்கு பெயர் கிடையாது. தனிப்பட்ட குணமோ செயலோ உருவமோ எதுவுமே இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம்மை இயக்குவது அந்த மகாசக்திதான் என்றார். இதனைக் கேட்ட பார்வதிதேவிக்கு பெரும் மகிழ்ச்சி. சிவபெருமானே சக்தியால்தான் சகலமும் இயங்குகிறது என்கிறாரே என நினைத்து சக்தியின்றி சிவனில்லை என்று முடிவு செய்தாள். சக்தி-சிவனை விட்டுத் தனித்து நின்றாள். அதன் காரணமாக இந்த உலகம் இயக்கமின்றித் தடுமாறியது. இதைக் கண்ட அம்பிகை சிவனை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என உணரப் பெற்றேன். கருணை புரிந்தருள்க என வேண்ட அப்பொழுது சிவபெருமான் பார்வதிதேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று நின்ற பாவம் உன்னையே சாரும். அந்த பாவம் நீங்க யமுனை நதியில் வலம்புரிச் சங்கு வடிவில் தவம் செய் என்று கட்டளையிட்டார். பார்வதிதேவியாருக்கும் சங்கு வடிவில் தாமரை மலர்மீது அமர்ந்து யமுனை நதியில் தவமிருந்து கொண்டிருந்தாள். அத்தருணத்தில், ஒரு மகாமக நாளில் பிரஜாதிபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். உடனே சங்கு பெண்ணுருவாய் மாறியது. சங்கு வடிவில் பார்வதிதேவியாரே வந்துள்ளாள் என்பதை உணர்ந்த பிரஜாதிபதி, அம்பிகைக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பித்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. அம்பிகை மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசி மகம் பெருமை பெறுகிறது. தன்முனைப்பு நீங்கி பிறவிப் பெருங்கடலில் பிறவாமை பெற இயலாவிட்டாலும், வரும் மாசி மகத்தில் தேவி உறைந்த தாமரையை மருந்தாக்கி நல்ல உடல்நலம் பெற முனைவோம்.

No comments:

Post a Comment