Thursday, September 6, 2012

ஆளவந்தார்

<பகவத் ராமானுஜருக்கு முன்னதாக, வைணவ குரு பரம்பரையின் தலைவராக இருந்தவர் ஆளவந்தார். இவர்தான் வைணவ சம்பிரதாயம் வாழ வழிவகுத்ததோடல்லாமல், நமக்கு ராமானுஜரைத் தேடிக் கொடுத்த பெருமையும் பெற்றவர். நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள் நமக்குக் கிடைக்க வழி செய்தவரான நாதமுனிகளின் பேரன் இவர். ஆளவந்தார் தாது வருடம், ஆடி மாதம், உத்திராட நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருக்கு யமுனைத்துறைவர் என்று பெயரிட்டனர். ஸ்ரீமணக்கால் நம்பி என்ற மஹனீயர் நாராயணனின் எட்டெழுத்து மந்திரத்தையும் மற்றும் பல வேத ரகசியங்களையும் இவருக்கு உபதேசித்தார். ஆளவந்தார் தமது ஆறாவது வயதில் மகாபாஷ்ய பட்டர் என்கிற பண்டிதரிடத்தில் வேதசாஸ்திரங்களைப் பயின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்நாட்டு சோழ மன்னனின் புரோகிதரும் வித்வானுமான கோலாகல பண்டிதன் என்பவர், நாட்டிலுள்ள வித்வான்களை எல்லாம் தொந்தரவு செய்து அவர்களிடமிருந்து கப்பம் வாங்கி வந்தார். மகாபாஷ்ய பட்டரிட மும் கப்பம் வாங்கிவர தனது ஆட்களை அனுப்பினார். பட்டரைச் சந்தித்த பண்டிதனின் ஆட்கள், ""எங்கள் பண்டித ரிடம் வாதிட்டு வெல்லவேண்டும். அதற்கு அஞ்சினால் அவருக்கு கப்பம் செலுத்த வேண்டும்'' என்று சொல்ல, பட்டர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். அப்போது ஆளவந்தார் தான் சென்று வாதிடுவதாகக் கூற, சிறுவனான ஆளவந்தாரை அனுப்ப மனமின்றி வருந்தினார் பட்டர். அவரை சமாதானப்படுத்திய ஆளவந்தார், பண்டிதரின் ஆட்களிடம், ""நான் வாதத்திற்கு வருகிறேன். ஆனால் என்னைப் பல்லக்கில் அழைத்துச் செல்ல வேண்டும்'' என்று தெரிவித்தார். வந்த காவலர்கள் இந்த விஷயத்தை அரசனிடம் சென்று சொல்ல, அரசன் வியந்து அச்சிறுவனை அழைத்து வர பல்லக்குடன் காவலர்களை அனுப்பி வைத்தான். யமுனைத் துறைவரும் தன் குருவை வணங்கி, அரசவைக்குப் பல்லக்கில் சென்றபோது, மன்னரும் அரசியும் உப்பரிகை யில் வாதிட்டுக் கொண்டிருப்பதைக் கேட்டார். பின்னர் அரசவைக்குச் சென்று மன்னரை வணங்கி தமக்கு ஒரு ஆசனத் தையும் பெற்றுக் கொண்டார். சிறுவனான யமுனைத் துறைவனைக் கண்ட கோலாகலன் அவர் வயதையும் வடிவத்தையும் கண்டு நகைத்தார். அந்தச் சிரிப்பின் உட்பொருளை உணர்ந்துகொண்ட யமுனைத் துறைவன், ""என்னுடைய வயதைக் கண்டு ஏளனமாக நினைக்க வேண்டாம். துணிவிருந்தால் என்னோடு வாதிடும்'' என்றார். கோலாகலப் பண்டிதனோ, ""நீயோ சிறுபிள்ளை. உனக்குத் தெரிந்த விஷயத்தைப் பற்றி நீரே பேசும்'' என்று ஏளனமாகக் கூறினார். யமுனைத் துறைவரும் தயங்காமல், ""நான் இப்போது மூன்று விஷயங்களைப் பற்றிச் சொல்கிறேன். நான் "ஆம்' என்று கூறும் வார்த்தைகளை நீவிர் "இல்லை' என்று மறுக்க வேண்டும். அப்படிச் செய்தால் நான் தோற்றதாக ஒப்புக்கொண்டு தண்ட னையை ஏற்றுக்கொள்கிறேன்'' என்று கூறி கீழ்க்கண்டவாறு பேசினார். ""முதலாவதாக, உமது தாய் மலடி என்கிறேன். அதை மறுக்க வேண்டும். இரண்டாவது, இந்நாட்டு அரசன் தர்மவான் என்பதை மறுக்க வேண்டும். மூன்றாவது, மகாராணி பதிவிரதை என்பதை மறுக்க வேண்டும்.'' மூன்று கேள்விகளையும் கேட்ட கோலாகலப் பண்டிதன் மிகவும் குழம்பிப் போனார். மூன்றுமே "இல்லை' என்று மறுக்க முடியாதவை ஆயிற்றே! எனவே, ""நீரே பதிலையும் சொல்லி விடும்'' என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். யமுனைத் துறைவனும் மூன்று கேள்விகளுக்கும் சாதுர்யமாக பதிலளித்தார். முதல் கேள்விக்கு பதிலாகக் கூறுகையில், ""ஒரு மரம் தோப்பாகாது என்பார்கள். எனவே ஒரே பிள்ளையாகிய உம்மைப் பெற்ற உம்முடைய தாயை மலடி என்று கூறுவதில் தவறில்லை'' என்றும்; இரண்டாவது கேள்விக்கு, ""சாஸ்திரப்படி அரசனின் ஆட்சிக்குட்பட்டவர்கள் செய்யும் பாவங்களும், அதாவது நீர் செய்வதைப் போன்று பிற அறிஞர்களிடம் கப்பம் வாங்குவது போன்ற பாவங்களும் அரசனையே சேரும் என்பதால், அவரை தர்மவான் என்று கூறமுடியாது. "மண்டலத்தோர் செய்த பாவம் மன்னரைச் சாரும்; திண்டிறன் மன்னர் செய்த தீங்கு மந்திரியைச் சாரும்; தொண்டர்கள் செய்யும் பாவம் அவர்களின் குருவைச் சாரும்' என்ற நியதியின்படி அரசன் தர்மவான் அல்ல என்று கூறலாம்'' என்றும்; மூன்றாவதான கேள்விக்கு, ""சாத்திரப்படி ஒரு பெண் பிறக்கும்போது கந்தர்வர்களுக்கும், பின்னர் நடக்கும் சடங்குகளில் அதற்குரிய தேவர்களுக்கும், திருமணத்தின் போது அக்னி தேவனுக்கும் அர்ப்பணித்த பின்பே கணவரிடம் ஒப்படைக்கப்படுகிறாள் என்ற காரணத்தால், மகாராணி பதிவிரதை அல்ல என்று கொள்ளலாம். மேலும் "பெண்டிர்க்கழகு எதிர்பேசாதிருத்தல்' என்பது நியதி. ஆனால் மகாராணி அரசரோடு எதிர்வாதம் செய்ததால் பெண்ணிற்குரிய கற்பின் அழகை இழந்துவிட்டதாகவும் கருத இடமுண்டு. ஆக மகாராணி பதிவிரதையல்ல என்பது நிரூபணமாகிறது'' என்றும் யமுனைத் துறைவன் தன் விளக்கத்தை முடித்தார். சபையில் சூழ்ந்திருந்த வித்வான்களும் மற்றவர்களும் சிறுவயதுப் பிள்ளையிடம் பண்டிதனான கோலாகலன் தோற்றதைக் கண்டு மகிழ்ந்தனர். அரசி ஓடோடி வந்து யமுனைத் துறைவனை அணைத் துக்கொண்டு, ""எனை ஆளவந்தீரோ'' என்று மகிழ்ந்தாள். அதனால்தான் அதுமுதல் யமுனைத் துறைவனுக்கு ஆளவந்தார் என்ற பெயரேற்பட்டது. அரசன், தானும் மகாராணியும் வாதாடியதைப் பற்றி கோலாகலனிடம் கூறி, ""இப்பிள்ளை தோற்பான்; அப்படி யில்லையெனில் அவனுக்கு பாதி ராஜ்ஜியம் அளிப்பேன் என்று நான் மகாராணியிடம் கூறியிருந்தேன்'' என்று சொல்லி, ஆளவந்தாருக்கு தன் அரசின் பாதிப்பகுதியை அளித்து அவரை அரசனாக்கினான். மணக்கால் நம்பி, ஆளவந்தாரை பல முயற்சிகள் செய்து அணுகி, அவருக்கு கீதோபதேசம் செய்து, வேதங் களின் அர்த்தங்களையும் உபதேசித்தார். அதன்பின் ஆள வந்தார் சாஸ்திர ஞானசீலராய் அரங்கத்தரவணையானின் கைங்கரியங்களில் ஈடுபட்டு, வைணவத்தின் ஞானாசிரிய ராய்த் திகழ்ந்தார். அந்த ஞானாசிரியன் காட்டிக்கொடுத்த பகவத் ராமானுஜரே வைணவம் வளர பாடுபட்ட சீலர்.

No comments:

Post a Comment