Tuesday, September 4, 2012

திருநீறு அணிந்து கொண்டு கொடுக்கப்படும் தானங்களுக்கு பலன்கள் அதிகமாகும்.

வங்கதேசத்தில் புஜபலன் என்ற அரசன் நேர்மையாக ஆட்சி செய்து வந்தான். இந்த அரசன் தன் பிறந்த நாள் அன்று ஏழைகளுக்கு ஏராளமான தானங்களை வழங்கினான். இதை கேள்விப்பட்ட ஏழைகள் திரண்டு வந்தார்கள். விதர்ப்ப தேசத்தில் இருந்து சுசீலன் என்பவரும் வந்தார். இவரை கண்ட மற்றவர்கள் அரசே நீங்கள் சுசீலனுக்கு பரிசு வழங்கி விடுங்கள். அவர் வாங்கிய பிறகு நாங்கள் பெற்றுக் கொள்கிறோம். இவர் சகல சாஸ்திரங்கள் தெரிந்தவர். உலக நாயகனான ஈசனை வணங்குபவர். இவருக்கே முதல் மரியாதையை வழங்குங்கள் என்றனர். சரி உங்கள் விருப்பமே என் விருப்பம் என்று கூறி சுசீலனுக்கு முதலில் தானம் கொடுக்க வந்தார் அரசர். அரசரே... நீங்கள் தானம் செய்யும் முன் விபூதியை பூசிக்கொண்டு தானம் செய்தால் உங்களுக்கு புண்ணியம் ஏற்படும். விபூதி செல்வத்தின் சின்னம். மங்களகரமாக திருநீரில் ஸ்ரீமகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது சாஸ்திரம் என்றார் சுசீலன். தானம் வாங்க வந்த நீ எனக்கு உபதேசம் செய்கிறாயா? உன் ஆலோசனை எனக்கு வேண்டாம் என்றார் மன்னர். விபூதியை மதிக்காமல், விபூதியை பூசாமல், நீ கொடுக்கும் தானத்தை நான் ஏற்று கொள்ளமாட்டேன். விபூதி வேண்டாம் என்று ஆணவமாக கூறிய உன் வாயாலேயே... திருநீறு கொடுங்கள் என்று என்னிடம் கேட்கும் காலம் வெகுதொலைவில் இல்லையப்பா என்றார் சுசீலன். சில வருடங்கள் நகர்ந்தது. ஒரு நாள்... எதிர்நாட்டு அரசன் புஜபலனின் நாட்டை கைபற்றி புஜபலனை கொல்ல படையோடு வந்தான். எதிரிகளிடம் சிக்கினால் உயிர் போய் விடும் என்பதை உணர்ந்து தன் மனைவியை அழைத்து கொண்டு நாட்டை விட்டே ஓடிவிட்டான் புஜபலன். யார் ஆதரவும் இல்லாததால் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் புஜபலன் ஒருவரின் அருகில் தயங்கி தயங்கி வந்தான். அங்கே சுசீலன் நின்று கொண்டிருந்தார். புஜபலனை சுசீலன் அடையாளம் கண்டுக்கொண்டார். என்ன அரசே... சவுக்கியமா? என்றார். உன் சாபத்தால் நான் இப்படி இருக்கிறேன் என்று தன் கையில் இருந்த திருவோட்டை காட்டி பேசினார் புஜபலன். அய்யா... என் சாபத்தால் உங்களுக்கு இந்த நிலை இல்லை. எல்லாம் ஈசனின் விளையாட்டு. சரி நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை யோசிப்பவனே அறிவாளி. நீ இப்போதாவது என் பேச்சை கேள். நான் உனக்கு திருநீறு தருகிறேன். அதை நீ உடல் முழுவதும் பூசிக்கொண்டால் மீண்டும் நல்ல நிலையை பெறுவாய் என்றார் சுசீலன். அதன்படி செய்தான் புஜபலன். பிச்சைகாரனாக காட்சி தந்த அவன் முகம் மாறி ஆயிரம் சூரியன் கூடி நிற்பதை போல் பிரகாசமாக இருந்தது. தன் மனைவியை அழைத்து கொண்டு தன் நாட்டுக்கு சென்று அங்கு இருந்த தன் விசுவாசியான மந்திரிகளையும், நண்பர்களையும் சந்தித்து மறுபடியும் போர் புரிந்து தன் நாட்டை கைப்பற்றினான் புஜபலன். எனவே திருநீறு அணிந்து கொண்டு கொடுக்கப்படும் தானங்களுக்கு பலன்கள் அதிகமாகும்.

No comments:

Post a Comment