Wednesday, September 5, 2012

பங்குனி உத்திர வழிபாடு

ஆண்டின் நிறைவான மாதமாக வரும் பங்குனி மாதம் குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் புனித மாதமாக அமைகின்றது. பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் நட்சத்திரத்தால் பவுர்ணமியின் பலன் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது. ஒவ்வொரு மாதத்தின் பவுர்ணமி வெவ்வேறு சிறப்புகளை நமக்கு தருவதாக அமைகின்றது. அதில் பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவது தனிச்சிறப்பு. பொதுவாக `பங்குனி உத்திரம்' என நட்சத்திரத்துக்கு சிறப்பு தரும் பவுர்ணமி நாள் என்றவுடன் அனைவரது உள்ளமும் குதூகலம் அடையக் காரணம் முருகனுக்கு விழா எடுக்கும் நாள் என்ற சிறப்பை பெறுகின்றது. தமிழ் கடவுள் சுப்பிரமணியின் ஆலயங்கள் அனைத்தும் விழா கோலம் அடையும் தினம் என்று மட்டுமே பலர் அறிந்து வைத்திருப்போம். இந்நாளில்தான் தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளது என்று நமது புராணங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. எனவேதான் பங்குனி மாதத்தில் நம் குடும்பங்களில் திருமண சடங்குகளை நாம் நடத்துவதில்லை. பங்குனி உத்திரத் திருநாளில் ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்க மன்னரை கரம்பிடித்த நாள் ஆகும். இதுபோலவே ராமர் சீதாதேவியை மணம் செய்த நாளும் பங்குனி உத்திரத் திருநாள் ஆகிறது. ரதியின் வேண்டுதலுக்கு இணங்கி மன்மதனை சிவபெருமான் எழுப்பித்தந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாள் ஹோலி என்னும் காமன்பண்டிகை என்றும் போற்றப்படுகிறது. மஹாபாரதம் அர்ச்சுனன் பிறந்த தினம் பங்குனி உத்திரம் என்று கூறுவது மட்டுமல்லாமல் அர்ச்சுனனுக்காக அவன் மூலம் உலகுக்கும் கீதை கிடைத்ததை போற்றும் நாளாகவும் பங்குனி உத்திரம் சிறப்பு பெறுகின்றது. சிவன் சக்திதேவியை கரம் பிடித்த நாள் பங்குனி உத்திர நன்னாள் என ஆகமங்கள் தெரிவிக்கின்றது. எனவே பல சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவங்கள் சிவன் பார்வதிக்கு நடத்தப்படும் உற்சவங்களாக அமைகின்றது. ஸ்ரீரங்கத்திலும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் நடைபெறும் பங்குனிப் பெருவிழாக்கள் இறைவனின் கருணையை ஒருநிலைப்படுத்துவதாக அமைகின்றது. சபரிமலை சாஸ்தா அய்யப்பன் அவதார தினம் பங்குனி உத்திரம் என்பதால் சபரிமலையில் ஆராட்டுவிழா என்னும் தீர்த்தவாரி நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. இறைவன் நீராட்டப்படும் நதியில் நாமும் நீராடினால் புனிதப்படுத்தப் படுகின்றோம். பல ஆலயங்களில் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவங்கள் நமது கலாசார பண்புகளையும், நம் நாகரிகத் தன்மையும் நமக்கும் உலகுக்கும் தெரிவிப்பதாக அமைகின்றன. பங்குனி மாதத்திற்கு உண்டான தனிச்சிறப்பு நம்மை ஒன்று படவைப்பதாக அமைகின்றது. பங்குனி உத்திரம் பல குடும்பங்களின் குல தெய்வங்களை தேடிச் சென்று வழிபடும் நன்நாளாக அமைகின்றது. பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது. இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது. நாம் நம்குல தெய்வங்களை இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது. அது மட்டுமா இன்று இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் நாம் யார் எதற்காக பிறந்திருக்கின்றோம் என்றே நமக்கு புரிவதில்லை என புலம்புகின்றோம். நம் குலதெய்வக் கோவிலுக்கு செல்வதன் மூலம் நமது சொந்தங்கள் எத்தனை லட்சம் பேர், அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகள், அவர்கள் செய்து வரும் சமூக, ஆன்மீக பணிகளை தெரிந்து கொள்வதன் மூலம், நமது குல மக்களின் சிறப்புகளையும் சொந்தங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதால் வேலை வாய்ப்பில் உதவி, திருமண பந்தங்களை விபரங்கள் தெரிந்து நம் சமூகத்துடன் இணைய என குல தெய்வ வழிபாடு நமக்கு நம் குல சிறப்பையும், பெருமையையும் உணர்த்தும் நல்ல நாளாக பங்குனி உத்திரம் அமைகின்றது. முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை சம்ஹாரம் செய்ததற்கான பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத்தந்த நாள் பங்குனி உத்திரம் அன்றுதான் என்பதால் இத்திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீட்டில் தனித்தன்மை பெற்றதா அமைகின்றது. திருப்பரங்குன்றம் முருகனின் திருமணம் நிகழ்ந்த ஸ்தலமாக மைந்துள்ளது. இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் காணும் பேற்றினை அனைவரும் பெறும் வண்ணமே அனைத்து ஆலயங்களிலும் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படடு இறைவனின் பரிபூரண கருணை அனைவருக்கும் கிடைக்கும்படியாக செய்யப்படுகின்றது. நாம் முருகனை அரோகரா என அழைக்கின்றோம். ஒவ்வொரு மனிதனையும் சுற்றி ஒரு ஆரோ வட்டம் உள்ளது. இந்த ஆரோ வட்டத்தின் வளைவு தான் நம்மை சுற்றியுள்ள ஆரோவை தூண்டும் செயலில் நாம் இருந்தால் நல்ல பண்புகள் நம்மை வந்தடையும். இதைத்தான் அரோ அரா... என முருகனை விழிப்பதன் மூலம் நாம் பெறுகின்றோம். அதில் அடுத்து வரும் சித்திரை மாதம் அக்கினியின் தன்மையை அதிகப்படுத்தும் என்பதை சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அரோ அரா போடும்போது அக்கினித் தாக்கத்தில் இருந்து நம் குலத்தையும் முதலில் நம்மையும் காத்துக் கொள்ள அரோ அரா எனும் பாதுகாப்பு வளையத்தை நமக்கு ஒரு மாதம் முன்பாக அமைத்துக் கொண்டு வாழ்வாங்கு வாழ வழி வகுக்கின்றது பங்குனி உத்திரம். பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மாள் ஆன உதவியை வயதானவர் களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந் திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும். இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும். இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை இன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும். பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயண லட்சுமிதேவி அடைந்ததைப்போல் நம் வீட்டு பெண்கள் கடை பிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தை கள் ஆலயம் சென்று வணங்கு வதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையை பெறுபவர்களாகவும் நாம் அமைகின்றோம். லாபம் பெருகும், நிம்மதி தொடரும். உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும். பங்குனி உத்திரம் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை போன்ற அறுபடை வீடுகள் மற்றும் எண்கண், சிக்கல் போன்ற முருகன் ஆலயங்களில் மிக விமர்சையாக நடைபெறுகின்றது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில், நடைபெறும் மச்சக்காவடி, சேவற்காவடி, கற்பகக் காவடி உலகப் பிரத்தி பெற்றது. எனவே நாம் நம்மூர் அருகில் உள்ள முருகன் கோவில்களில் சென்று பங்குனி உத்திரம் நன்னாளில் இறைவனை வணங்கி நன்மைகள் பெறுவோம்.

No comments:

Post a Comment