Tuesday, September 4, 2012

கர்ணன் கதை --அன்னதானகதை

தானத்தில் உயர்ந்த கர்ணனைப்பற்றி பல கதைகள் கேட்டிருக்கலாம், படித்திருக்கலாம் இதோ ஒன்று:- கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன்.தானத்திற்கே பெயர்பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன். அங்கு சென்று சகலவசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை.எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டு அலுத்து போனான். பிறகு சொர்க்கத்தின் தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை எனக்கு ஏன் இப்படி பசிக்கிறது என கேட்டான். அதற்கு சொர்க்கலோகத்தின் தலைவனோ கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாக கொடுத்து பெரும் புகழ்பெற்றவன். ஆனால் சிந்தித்து சொல் எப்பொழுதாவது யாருக்காவது அன்னதானம் செய்திருக்கிறாயா என கேட்டான். கர்ணனும் அன்னதானம் செய்ததாக நினைவு இல்லை. அன்னதானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்று பசி அடங்கவில்லையா? அப்படியானால் இதற்கு என்ன தான் வழி என கேட்டான். அதற்கு தலைவன் உனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து கொள் பசி அடங்கி விடும் என்றான். கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலை சப்பினால் பசி அடங்குமா? என்ன இது என சந்தேகத்துடன் வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து சப்பினான். இதனால் அவனது பசி உடனே அடங்கியது. ஒன்றும் புரியாத கர்ணன் இது எப்படி மாய மந்திரம் என கேட்க தலைவன் கூறினான். கர்ணா நீ பூவுலகில் வாழும்போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதான சத்திரம் இருக்கிறதென்று கேட்க நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழிகாட்டினாய். அந்த புண்ணிய செயல் நற்செயல் உனக்கு இëப்பொழுது உதவுகிறது என கூறினான். இதன் மூலம் கர்ணன் மூலம் அன்னதான மகிமையை உணர்ந்தான். முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள், ஏழைகள். இவர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கு மகிழ்ச்சியினையும் புண்ணியத்தையும் தரும். எனவே அளவற்ற புண்ணியம் தரும் அன்னதானம் செய்யுங்கள்.*

No comments:

Post a Comment