Saturday, October 6, 2012

இனிமையாக பேசுவதே கடவுளை வணங்குவது போலத்தான்

இனிமையாக பேசுவதே கடவுளை வணங்குவது போலத்தான்
கடவுளை வணங்குவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. பெரிய பூஜைகள் பண்ணுவது, புனித நதிகளில் நீராடுவது, நீண்ட பயணங்கள் மேற்கொள்வது என்று பல வழிகளில் நாம் கடவுளை வணங்க அல்லது அவரின் அன்புக்கு பாத்திரமாக அல்லது எல்லோரும் சொல்வதுபோல் புண்ணியம் பெற ஏதேதோ செய்கிறோம் ... விரும்பியும்.. விரும்பாமலும்.. ஆனால் நம்முடைய திருமூலர் பெருமான் சொல்லுகின்ற மிக எளிமையான வழியைப் பாருங்கள்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

நாம் ஒரு பெரிய மனிதரைப் பார்க்கப் போகும்பொழுது வெறும் கையோடு போவதில்லை.. ஏதேனும் பழங்கள் அல்லது மாலை கொண்டு செல்கிறோம்.. ஏன் குழந்தைகளைப் பார்க்கப் போகும்பொழுது கூட ஏதேனும் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டுதான் போகிறோம். அது போல கடவுளைப் வணங்கப் போகும்பொழுது அது சிறிய கோவிலாக இருக்கலாம் அல்லது பெரிய கோவிலாகவும் இருக்கலாம் , சும்மா வெறும் கையோடு போகக்கூடாது. அதற்காக தேங்காய், பழம், மாலை எல்லாம் கொண்டு போக வேண்டும் என்று திருமூலர் சொல்லவில்லை. குறைந்த பட்சம் ஒரு இலையை கொண்டு போங்கள் என்கிறார். என்ன இலையா? என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. ஆம் இலை தான்.. பிள்ளையாருக்கு அருகம்புல்..முருகனுக்கு அத்தி.. சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, அம்மனுக்கு வேம்பு என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு இலை உண்டு.. அதையாவது கொண்டு சென்று வணங்குங்கள் என்று மூலர் பெருமான் கூறுகிறார்.

சரி.. அது என்ன பசு? வாயுறை ? அடுத்த படியாக அதே பாடலின் இரண்டாம் அடியில் அவர் சொல்லுவதை பாருங்கள்..
நாம் பார்க்கின்ற மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்களின் மீது அன்பு செலுத்த சொல்கின்றார். பசுவிற்கு ஒரு வாய் புல்லாவது கொடுங்கள் என்கிறார். நம்முடய மனதில் மற்ற உயிர்கள் மீது அருள் இல்லைஎனில் எப்படி கடவுளுக்கு நம் மீது அருள் வரும்? அதனால் நம்மோடு வாழ்கின்ற நாம் பார்க்கின்ற வாயில்லா ஜீவன்கள் மீது அன்பு செலுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை ஒரு கைப்பிடி புல்லையாவது கொடுங்கள் என்கிறார் நம்பிரான் திருமூலர்.
"எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி வாழ அருள் செய்வாய் பராபரமே" - தாயுமானவர்

நாம் கண்ணில் காண முடியாத ஜீவராசிகளைப் பற்றி யோசிக்க வேண்டாமா? உண்ணும் பொழுது ஒரு ஓரமாக சிறிதளவு உணவை ஒதுக்கி வையுங்கள்.. அல்லது உண்ணுவதற்கு முன் கொஞ்சம் உணவை வெளியே தாழ்வாரத்தில், முற்றத்தில், அல்லது வாசலில் எங்காவது வைத்துவிட்டு உண்ணுங்கள்.. அந்த ஒரு பருக்கையாவது கண்ணுக்கு தெரியாத ஜீவ ராசிக்கோ அல்லது குறைந்தது காகம், அணில், எறும்பு என்று எதாவது ஒரு ஜீவனுக்கோப் போய் சேரும்.

இந்த பாடலின் கடைசி வரியில் நம் திருமூலர் அதையும் பேசுகிறார். சக மனிதர்களுக்கு பொன் பொருள் கொடுத்து காப்பாற்ற வேண்டாம். அவர்களுக்கு வேண்டியதை செய்து அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டாம்.. வேறு என்ன தான் செய்வது? இனிமையாகப் பேசினாலே போதும் .. இனிமையான நல்ல சொற்களுக்குதான் இன்று பஞ்சமாய் இருக்கின்றது. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார் நம் சித்தர் பெருமான். கொடும் சொற்களைப் பேசி மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் இனிமையான வார்த்தைகளை பேசினாலே போது அதுவே கடவுளுக்கு பக்கமாக செல்லும் வழி என்று நான்காம் அடியில் சொல்லுகின்றார் திருமூலர்.
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" - திருவள்ளுவர்

No comments:

Post a Comment