Monday, October 8, 2012

வேண்டத் தக்க தறிவோய்நீ


வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.

பொழிப்புரை :

உயிர்களுக்குத் தேவையானது இது என்று அறிவோன் நீயே! மேலும் அவ்வுயிர்கள் எவற்றை வேண்டினாலும், அவையெல்லாவற்றையும் அருளுபவனும் நீயே! உன்னைக் காண விரும்பிய பிரமன், திருமால் என்பவருக்கும் அருமையாய் நின்ற வனாகிய நீ நீயாகவே விரும்பி, என்னையாளாகக் கொண்டனை. என் பொருட்டு நீ விரும்பி எதனை அருள் செய்தனை; அதனையே யானும் விரும்புவதல்லது, நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உளதாகு மெனில் அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பே யன்றோ?

குறிப்புரை :

வேண்டத் தக்கது - இரந்து பெறத்தக்க பொருள். `தாம் சாவ மருந்துண்ணார்` என்பதுபோலத் தமக்கு நன்மை பயப்பதனை யன்றித் தீமை பயப்பதனை ஒருவரும் இறைவன்பால் வேண்டார் எனினும் தீமை பயப்பதனைத் தீமைபயப்பது என்று அறியும் ஆற்றல் இலராகலின், இறைவன்பால் வேண்டத் தக்கது இதுவென்பதனையும் அவனே அறிதலன்றி, உயிரினத்தவருள் ஒருவரும் அறியார் என்க. ``வேண்ட`` என்றது. `தம் அறியாமையால் உயிர்கள் எவற்றை வேண்டினும்` என்றவாறு. தீமைபயப்பதனையும் இறைவன் மறாது தருதல்` அவற்றின்கண் பற்று நீங்குதற்பொருட்டாம். வேண்டும் அயன் மால் - உன்னை அளவிட்டறிய விரும்பிய பிரமனும் மாலும். இவர்க்கு அரியனாதலைக் கூறியது, தமக்கு எளிவந்தமையைப் புலப்படுத்தற்கு. எனவே, `அரியோயாகிய நீ` என ஒரு சொற்றன்மைப் படுத்து உரைக்கப்படும். ``பணி கொண்டாய்`` என்றதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. வேண்டி - எனக்கு உரியதாகக் கருதி. அருள் செய்தாய் - உணர்த்தியருளினாய். `அதுவே யானும் வேண்டினல்லால்` என மாற்றுக. வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் - பயிற்சிவயத்தால் ஒரோவொருகால் நான் உன்பால் இரக்கும் பொருள் வேறு ஒன்று இருக்குமாயின் அதுவும் உன்றன் விருப்பன்றே - அவ்வாறிருத்தலும் உன்றன் திருவருளே யன்றோ; என்றது, `வேண்டத் தக்கது அறிவோய் நீ என்பது முதலியவற்றை யான் அறிந்து உன் அருள்வழியே நிற்பேனாயினும், ஒரோவொருகால் பயிற்சி வயத்தால் அந்நிலையினின்றும் பிறழ்தலும் உனது திரோதான சத்தியின் செயலே` என்பதை விண்ணப்பித்து, `அக்குற்றத்தைப் பொறுத்து என்னை நின்பால் வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்` என வேண்டியதாம். இதன் இறுதிப் பகுதிக்கு மாதவச் சிவஞான யோகிகள் இவ்வாறே பொருள்கொள்ளுதல் காண்க. (சிவஞான சித்தி.சூ.10.3.)

பாடல் எண் : 7

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.

பொழிப்புரை :

எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடைய, எம் தலைவனே! மலையை ஒத்த பெரியோனே! என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட அப்பொழுதே, என்னுடைய உயிரையும், உடம்பையும், பொருள் எல்லாவற்றையும் உன்னுடையனவாக ஏற்றுக் கொள்ளவில்லையோ? அங்ஙனமாக இப்பொழுது ஒரு துன்பம் எனக்கு உண்டாகுமோ? உண்டாகாது. ஆதலின், எனக்கு நீ நன்மையே செய்வாய் எனினும், தீமையே செய்வாய் எனினும் இத்தன்மைக்குத் தலைவன் யானோ?

குறிப்புரை :

``அன்றே`` என்றதனை இறுதிக்கண் கூட்டி, அதன்பின், `ஆதலின், நின் திருவுள்ளத்திற்கு ஏற்றது செய்க` என்னும் கையறு கிளவியாகிய குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. இவ்வாறன்றி, வலியுறுத்தற் பொருட்டு, `அன்றே, என்னை ஆட்கொண்ட போதே` என இருகாற் கூறினார் என்றலுமாம். ஆவியாவது, சீவபோதம். உடைமையாவது, பிராரத்தமும், ஆகாமியமும் ஆகிய வினைகள். இறைவனுக்கு ஆட்பட்டார் பிற உடைமையை முன்னரே துறந்தமை யின், அவர்க்கு உடைமையாவன இவையன்றி இல்லை என்க. சிறுபான்மை எக்காரணத்தாலேனும் பிற உடைமை உளவாயின், அவையும், `உடைமை` என்பதனுள் அடங்கும். உடைமையை, `பொருள்` என்று கூறி, `உடல், பொருள், ஆவி மூன்றையும் இறைவன் பால் ஆக்குவிப்பவரே ஞானியர்` என்பது வழக்கு. `ஆவியும் உன்னுடையதாயினமையின், இப்பொழுது எனக்கென்று வரும் இடையூறு ஒன்று இல்லை` எனவும், `வருகின்ற இடையூற்றைத் தடுத்தும், வந்த இடையூற்றைப் போக்கியும் என்னை நான் காத்துக்கொள்ளுதலும், காவாது தீமையுறுதலும் ஆகிய செயல்களும் எனக்கு இல்லை; எல்லாவற்றிற்கும் உரியவன் நீயே` எனவும் கூறுவார், இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ? நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகம்` என்றும் அருளினார்.
``செய்வாய்`` என்றவை, `உன் விருப்பப்படி செய்தற்குரியை` என்னும் பொருளன. நன்று, பிழை என்னும் இரண்டனுள் தம்பால் செய்யப்படுவது ஒன்றேயாதலின், ``இதற்கு`` என ஒருமையாற் கூறப்பட்டது. நாயகம் - தலைமை; இஃது ஆகுபெயராய், `தலைவன்` எனப் பொருள் தந்தது.

 

No comments:

Post a Comment