Wednesday, October 3, 2012

கழுதையிடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

ஞானி ஒருவரிடம் அவரது சீடன், “குருவே, நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும் தாங்கள் சமமாக எடுத்துக் கொள்கிறீர்களே...? இந்தப் பண்பு உங்களிடம் எப்படி வந்தது?” என்று கேட்டான்.

அவர் உடனே, “கழுதையிடமிருந்துதான்...” என்றார்.

“என்னது கழுதையிடமிருந்தா...?” என்று அங்கிருந்த சீடர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கேட்டனர்.

“ஆமாம், நான் கழுதையிடமிருந்துதான் அதைக் கற்றுக் கொண்டேன். காலையிலும், மாலையிலும் தெருவில் செல்லும் கழுதையை நீங்கள் பார்த்ததில்லையா? காலையில் அது அழுக்கு உடைகளைச் சுமந்து செல்லும். மாலை வேளையில் அது சுத்தமான உடைகளைச் சுமந்து வரும். காலையில் அழுக்கு உடைகளைச் சுமந்து செல்கிறோமே என்று அது வருத்தமடைவதுமில்லை. மாலையில் சுத்தமான உடைகளைச் சுமந்து வருகிறோமே என்று மகிழ்ச்சி அடைவதுமில்லை... கழுதையிடமிருந்துதான் அந்த நல்ல பண்பைக் கற்றுக் கொண்டேன்” என்றார் அந்த ஞானி.

No comments:

Post a Comment