Monday, October 1, 2012

எப்போதும் பணிவாகவும்,அடக்கத்துடனும் இரு. வீண் பெருமை பேசாதே'

ஒருநாள் கிருஷ்ண தேவராயரின் அரசவைக்கு வந்த ஒரு மந்திரவாதி, தனது சாகசச் செயல்களைச் செய்துகாட்டி, அவையோரை மகிழ்விக்க அனுமதி வேண்டினான். முதலில் சற்றுத் தயங்கினாலும், சபையோரின் வேண்டுகோளுக்கிணங்கி, ராஜா அவனை அனுமதித்தார். ஒன்றன் பின் ஒன்றாகத் தனது சாகசங்களைக் காட்டி மந்திரவாதி அவையோரை மகிழ்வித்தான். தங்களது தலைகளை ஆட்டியும், சந்தோஷமாகச் சிரித்தும் தங்களது மகிழ்ச்சியை அவர்கள் தெரியப்படுத்தினர். இறுதியாக, அந்த மந்திரவாதி ராஜாவை அணுகி, 'மஹாராஜா! இதோ எனது கையில் ஒரு கூழாங்கல் இருக்கிறது, பார்த்தீர்களா? அதைத் தொட்டுப் பாருங்கள்' என வேண்டினான். 'ஆம், இருக்கிறது. அதையென்ன தொட்டுப் பார்க்க வேண்டிய தேவை?' என தேவராயர் பதிலிறுத்தார். உடனே அந்தக் கல்லைத் தன் கைக்குள் மூடி, அதன் மீது சற்று ஊதி, ஒரு சில மந்திரங்களை உச்சாடனம் செய்து, பின்னர் வேறொரு கல்லை உருவாக்கி, அதை மன்னரின் கையில் கொடுத்தான். அது ஒரு பளபளக்கும் வைரம்! அவையோர் அனைவரும் ஆரவாரக் கூச்சலிட்டனர். அத்தோடு நிற்காமல், அந்த மந்திரவாதி, 'இதுபோலப் பல திறமைகள் என்னிடம் இருக்கின்றன. இந்தச் சபையில் இருக்கும் எவரேனும் எனக்கு ஈடு கொடுக்க இயலுமா?' எனப் பெருமை பேசினான். அவனது திறமையைக் கண்டு வியந்த சபையினர், அவனை ஆஸ்தான மந்திரவாதியாக நியமிக்க விரும்பினர். ஆனால், சற்றுத் தள்ளி நின்று இவையனைத்தையும் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன், மந்திரவாதியின் திறமையைச் சோதிக்க எண்ணம் கொண்டான். அரசரின் அனுமதியைப் பெற்றபின், தனது சேவகனின் காதுகளில் ஏதோ ரகசியமாகச் சொல்லிவிட்டு, 'நான் கண்ணை மூடிக்கொண்டு செய்யப்போகும் ஒரு செயலை நீ கண்ணைத் திறந்து கொண்டே செய்ய முடியுமா?' எனச் சவால் விட்டான். அதைக் கேட்ட மந்திரவாதி, ஏளனமாக தெனாலி ராமனைப் பார்த்து,' நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் ஒன்றை, கண்ணைத் திறந்து கொண்டு செய்வது கடினமா என்ன?' என ஜம்பமாகச் சொன்னான். 'ஓ, அப்படியா, சரி. நீ தோற்றால் உனது தலை உருளும், அதேபோல, நான் தோற்றால் எனது தலையும் போகும். சம்மதமா?' எனத் தெனாலி ராமன் கேட்டான். இதற்குள்ளாக, அவனது சேவகன் ஒரு தட்டில் எதையோ வைத்து, துணியால் மூடி எடுத்து வந்து நின்றான். அதை விலக்கிய தெனாலி ராமன், அதிலிருந்து மிளகாய்த் தூளை கை நிறைய அள்ளி, மூடிய தன் இரு கண்களின் மீதும் அப்பிவிட்டு, பிறகு ஒரு கைக்குட்டையை எடுத்து அதைத் துடைத்தான். கண்களைத் திறந்ததும், மந்திரவாதியைப் பார்த்து, 'இதோ நான் செய்தாகி விட்டது. இப்போது உன் முறை! ......கண்களைத் திறந்து கொண்டு..!' எனச் சொன்னான். வீண் பெருமை பேசியதால், வசமாகத் தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்த மந்திரவாதி, தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, 'இப்போது என் தலையை வெட்டுவாயா?' எனப் பரிதாபமாகக் கேட்டான். 'அதெல்லாம் செய்ய மாட்டேன். ராஜ தரும் வெகுமானத்தை அப்படியே என் கைகளில் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்!' எனத் தெனாலி ராமன் அவனைத் தேற்றினான். மந்திரவாதி சபையை விட்டுச் செல்லும்போது, அரசர் அவனைப் பார்த்து, 'உனது திறமை குறித்து எப்போதுமே கர்வம் கொள்ளாதே. உன் வலையில் நீயே வீழ்ந்து போவாய். எவ்வளவு திறமை இருந்தாலும், எப்போதும் பணிவாகவும், அடக்கத்துடனும் இரு. வீண் பெருமை பேசாதே' என அறிவுறுத்தி, சன்மானமும் வழங்கி அனுப்பினார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். [திருக்குறள்]

No comments:

Post a Comment