Thursday, November 29, 2012

ஒளித்திருநாள்

ஒளித்திருநாள்

தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் அக இருள் (மன இருள்) அகல்வதற்கு பாதை போடுகிறது. புத்தாடை அணிந்து, பலகாரம் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து, உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் கொள்ளும் விழாவாக தீபாவளியைக் கருதிவிடக் கூடாது. நம் மேல் நாம் வைக்கும் அன்பைப்போல, நாம் பிறர் மேல் வைக்கும் அன்பும், பண்பும், பாசமும் தூய்மையானதாக இருக்க வேண்டும். நம்மை விடப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, நாம் உதவும் விழாவாக தீபாவளி இருக்க வேண்டும்

எண்ணெய் தேய்த்துக் குளியுங்க!

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். அது வெந்நீராக இருப்பது அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும்.

தண்ணீரில் கங்கை

தீபாவளியன்று நாம் குளிக்கும் நீரில் கங்கை தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள். அதனால் கங்கையில் குளித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். இதனால் தான் தீபாவளி குளியலை "கங்கா ஸ்நானம்' என்று சொல்கிறார்கள். முற்றும் துறந்த துறவிகளுக்கும் கூட அன்று எண்ணெய் குளியல் உண்டு. கங்கா ஸ்நானத்தால் நம் பாவங்கள் முழுமையாகத் தொலைகின்றன


நரகாசுரனின் நிஜப்பெயர்

நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. "நரன்' என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே "நரகாசுரன்' என்றானது
 
நரக சதுர்த்தி
 
கிருஷ்ணர் ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று, இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை வேளையில் நரகாசுரனைக் கொன்றார். நரகாசுரன் கொல்லப்பட்ட சதுர்த்தசி என்பதால் இவ்வேளை நரக சதுர்த்தசி எனப்படுகிறது. சிவராத்திரி சைவத்திற்கு உரிய நாள். நரக சதுர்த்தசி வைணவத்திற்குரிய நாள். இதனால் சதுர்த்தசி திதிகளில் சிவன், பெருமாள் இருவரையும் வழிபட வேண்டும்.
 

No comments:

Post a Comment