Saturday, December 22, 2012

நம் மனசுக்கும் தாழ்ப்பாள் போட்டாகணும்

வாலிபன் ஒருவனுக்கு தியானக்கலையில் பெரிய ஆளாக வரவேண்டுமென ஆசை. தியானத்தை துவங்கினான்.
எங்கிருந்தோ கொலுசு சத்தம் கேட்டது. இவனுக்கு அந்தக் கொலுசு அணிந்து வந்த பெண்ணின் முகத்தை ஒரு தடவை பார்த்தால் என்ன என்று தோன்றிற்று. "ஊஹூம்... அப்படி பார்த்தால் தியானம் கலைந்து விடும்...
காது கேட்பதால் தானே கொலுசு சத்தம் கேட்கிறது! காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் எங்கிருந்தோ மலரின் நறுமணம் வந்தது.
வாலிபன் நினைத்தான்.
"இது அவளது கூந்தலில் சூடியுள்ள மல்லிகையின் மணமாகத்தான் இருக்க வேண்டும்... இதை நுகர்ந்து கொண்டே இருந்தால் தியானம் கைகூடாது' என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, மூக்கை ஒரு துணியால் கட்டிக் கொண்டான். கண், காது, மூக்கு எல்லாவற்றுக்கும் தாழ்ப்பாள் போட்டாயிற்று. ஆனாலும், தியானம் நிலைக்க மறுத்தது. ஏன் தெரியுமா? மனசு மட்டும் அவளைச்
சுற்றியே வந்தது. ""அவள் எப்படி இருப்பாளோ? அழகா, அழகில்லையா, குணவதியா? குணமற்றவளா! ராஜகுமாரியா! ஏழையா?'' என்று!
இந்த இளைஞனின் தியானம் போலத்தான் இன்று மனித மனங்கள் கற்பனைக் காற்றில் பறக்கின்றன. ஆடம்பரமாக வாழ்ந்தால் தான் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள் என்ற பெயரில், வாழ்க்கையின் அஸ்திவாரமே பெயரும் வகையில், பலரும் நடந்து கொள்கின்றனர்.
பக்கத்து வீட்டைப் பார்த்து நாம் வாழ வேண்டுமென அவசியமில்லை. நம் மனசுக்கும் தாழ்ப்பாள் போட்டாகணும்! போடுவீங்களா?

No comments:

Post a Comment