Saturday, December 22, 2012

தவறான உச்சரிப்பைக் கூட ஏழுமலையான் ஏற்று மகிழ்கிறார் போலும்''

திருப்பதியில் உள்ள சுவாமி புஷ்கரணி குளத்தில் ஒரு பெரியவர் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது குளிப்பதற்காக பக்தர் ஒருவர் குடும்பத்துடன் அங்கு வந்தார். நீரில் மூழ்கி எழுந்த அவர், ""கோஹிந்தா! கோஹிந்தா!'' என்று சப்தமாகச் சொல்லி ஏழுமலையானை வணங்கினார்.
பெரியவர் பக்தரிடம் சென்று, "தம்பி! கோஹிந்தா என சொல்லாதே. கோவிந்தா என சொல்,'' என்று கூற வாயெடுத்தார். அதற்குள் பக்தர் உரத்த குரலில்,""அப்பனே கோஹிந்தா! ஒவ்வொரு வருஷமும் உனக்கு முடிக் காணிக்கை செலுத்தறதா வேண்டிக்கிட்டேன். இந்தவருஷமும் என் வேண்டுதலை செய்துட்டேன். போனவருஷம் போலவே, இந்த வருஷமும் சந்தோஷமா இருக்க நீ தான் அருள் செய்யணும்'' என்றார்.
உடனே பெரியவரின் மனதில் சிந்தனை எழுந்தது.
""போனவருஷமும் ஏழுமலையானை இந்த பக்தர் "கோஹிந்தா! கோஹிந்தா!' என்று சொல்லித் தானே அழைத்திருப்பார். அதற்காக ஏழுமலையான் ஒன்றும் அவரிடம் கோபம் கொள்ளவில்லையே! போனவருஷம் போலவே, இந்த வருஷமும் மகிழ்ச்சியைத்
தரணும் என்று தானே அந்த பக்தர் வேண்டிக்கொண்டார்! குழந்தையின் மழலை மொழி கேட்டு மகிழும் தாய் போல, தவறான உச்சரிப்பைக் கூட ஏழுமலையான் ஏற்று மகிழ்கிறார் போலும்'' என்று எண்ணியவர் "கோவிந்தா' என முழங்கியபடியே சென்றார்.

No comments:

Post a Comment