Saturday, December 22, 2012

எந்தக் கல் உயர்ந்தது

ஒரு நாட்டில் பல அடுக்கு பாதுகாப்பு போட்டிருந்தனர். ஆனால், அரண்மனைக்கு வரும் துறவிகளை மட்டும் தடுக்கக்கூடாது என்பது அரசகட்டளை.
ஒரு துறவி அரண்மனைக்கு வந்தார். அரசன் அவர் காலில் விழுந்து வரவேற்றான். துறவி அவனிடம், ""மன்னா! எதற்காக உன் நாட்டில் இவ்வளவு பாதுகாப்பு போட்டிருக்கிறாய்?'' என்றார்.
""துறவியாரே! எங்கள் தேசத்தில் விலை உயர்ந்த வைரக்கல் ஒன்று இருக்கிறது. அதை வேற்றுநாட்டவர் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அதைப் பாதுகாக்கவே இவ்வளவு ஏற்பாடு!''.
""அதை ஏன் பாதுகாக்க வேண்டும்! அதை எந்த நாடு அதிக விலைக்கு வாங்குகிறதோ, அந்த நாட்டுக்கு விற்று கிடைக்கும் பொருளைக் கொண்டு மக்கள் பணி செய்யலாம் அல்லவா! மேலும், பாதுகாப்புச் செலவையும் மிச்சப்படுத்தலாமே!''
""துறவியாரே! அப்படியானால், எங்கள் நாட்டைப் பற்றிய பெருமை என்னாவது!''.
""சரி..சரி..! உன் நாட்டில் இதை விட உயர்ந்த கல் ஒன்று இருக்கிறது. அது இருக்குமிடம் எனக்குத்தெரியும்! நான் காட்டுகிறேன்!''
அரசன் சிரித்தான்.
""என்ன! எனக்குத் தெரியாமல் என் நாட்டில் இன்னொரு கல்லா! ஆச்சரியமாயிருக்கிறது! சரி...வாருங்கள். தாங்கள் சொல்வது சரியாக இருந்தால் எங்கள் நாடு மேலும் பெருமைப்படப் போகிறது!''.
அரசன் துறவியுடன் கிளம்பினான். அவனை ஒரு குடிசைக்குள் அழைத்துச் சென்றார். ஒரு பெண் மாவு ஆட்டிக்கொண்டிருந்தாள்.
""மன்னா! நீ வைத்துள்ள கல் ஒரே இடத்தில் முடங்கி பல கோடிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த எளிய ஆட்டுக்கல்லில் மாவரைக்கும் இவள், பலருக்கும் விற்று தன் குடும்பத்தையே காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள். இப்போது சொல்! எந்தக் கல் உயர்ந்தது?'' என்று கேட்டார் துறவி.
மன்னன் தலைகுனிந்தான். மறுநாளே, வைரக்கல்லை ஏலம் விட அறிவிப்பு வெளியிட்டான்

No comments:

Post a Comment