Tuesday, December 25, 2012

பகவத் கீதையின் நான்காம் அத்தியாயம்

    ங்கை நதிக்கரையிலுள்ள புனித நகரமான காசியில் பரதன் என்ற துறவி வாழ்ந்து வந்தார். அவர் எப்போதும் பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தைப் பாராயணம் செய்துகொண்டே இருப்பார்.

சில வருடங்களுக்குப் பிறகு வேறு பல கோவில்களை
தரிசனம் செய்யப் புறப்பட்டார். அவ்வாறு செல்லும்போது ஒருசமயம், நெடுந்தூரம் நடந்ததால் களைப்பு மேலிட்டது.

சற்றே ஓய்வெடுத்துக் கொள்ள நினைத்தார். அங்கு நிழல் தரும் பெரிய மரங்கள் ஏதுமில்லை. இரண்டு இலந்தை மரங்கள் மட்டுமே அருகருகே இருந்தன.

ஒரு மரத்தின் வேரில் தலையையும் இன்னொரு மரத்தின் வேரில் காலையும் வைத்துக்கொண்டு படுத்தார்.

பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தை சொல்லிக்கொண்டே கண்ணயர்ந்தார். பிறகு விழித்தெழுந்து பயணத்தைத் தொடர்ந்தார்.

நாட்கள் கடந்தன. ஒருமுறை வேறொரு நகரினுள் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பெண்கள் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினர். ""நீங்கள் யார்? என்ன வேண்டும்?'' என்று கேட்டார் துறவி. ""சில வருடங்களுக்குமுன் நாங்கள் இலந்தை மரங்களாக இருந்தோம். நீங்கள் எங்கள் வேரில் இளைப்பாறினீர்கள். உங்கள் தலையும் பாதமும் பட்டதால் நாங்கள் சாபவிமோசனம் பெற்று, ஒரு பணக்காரர் வீட்டில் பெண்களாகப் பிறந்து வளர்ந்து வருகிறோம்'' என்றனர்.

இதைக் கேட்டு மிகவும் வியந்துபோன துறவி, ""நீங்கள் எதனால் இலந்தை மரம் ஆனீர்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ""கோதாவரி நதிக்கரையில் "விச்சின்ன பாவம்' என்னும் புண்ணிய தீர்த்தம் இருக்கிறது. அதன் கரையில் "சத்ய தபஸ்யர்' என்ற மகான் தவம் செய்துகொண்டிருந்தார்.

அவரது தவம் பலித்தால் தன் பதவிக்கு ஆபத்துவரும் என்றெண்ணிய இந்திரன், அவரது தவத்தைக் கலைக்க பலவிதங்களிலும் முயற்சி செய்தான். ஆனால் முடியவில்லை. இறுதியாக தேவ கன்னியர்களான எங்களை அனுப்பினான். நாங்களும் அவரது தவத்தைக் கலைக்கப் பார்த்தோம்.

எங்கள் செய்கையால் கண்விழித்த அந்த முனிவர், "நீங்கள் இருவரும் கங்கை நதிக்கரையில் இலந்தை மரங்களாக இருங்கள்' என்று சபித்தார். "நாங்கள் இந்திரனின் அடிமைகள். அவன் சொன்னதைச் செய்யக் கடமைப்பட்டவர்கள். எனவே எங்களை மன்னித்து சாபவிமோசனம் அளியுங்கள்' என்று வேண்டிக்கொண்டோம்.

அதற்கு அவர், "பரதன் என்ற மகான் ஒருவர் இலந்தை மரங்களாக இருக்கும் உங்கள் நிழலில் படுத்து, பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தை சொல்லிக்கொண்டே இளைப்பாறிவிட்டு எழுந்து போவார். அதைக் கேட்ட நீங்கள் இருவரும் சில நாட்களில் சாபவிமோசனம் பெற்று நகரத்திலுள்ள ஒரு பணக்காரர் வீட்டில் பெண்களாகப் பிறப்பீர்கள். இந்தப் பிறவியிலும் அவரைப் பார்ப்பீர்கள். அதன் முடிவில் தேவலோகத்தை அடைவீர்கள்' என்றார். அதன்படி தங்களை இப்போது தரிசித்து விட்டோம். எங்களின் சாபவிமோசன காலம் நெருங்கிவிட்டது. எங்களை ஆசீர்வதியுங்கள்'' என்று கூறி வணங்கினர்.

இந்தப் பெண்கள் சொன்ன விவரத்தை அறிந்த பரதரே, கீதையின் நான்காவது அத்தியாயத்திற்கு இவ்வளவு பெருமையா என்று ஆச்சரியப்பட்டார். அன்று முதல் பகவத் கீதையின் பெருமையை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார். பத்மபுராணத்தில் உள்ளது இக்கதை.

இத்தகைய சிறப்புவாய்ந்த பகவத் கீதையின் நான்காம் அத்தியாயமான "ஞான கர்ம சந்யாச யோகத்'தின் சாரமென்ன?

இந்த அத்தியாயத்தில்தான் கண்ணன் கர்ம யோகத்தின் மகிமையை விளக்குவதோடு, தனது அவதார ரகசியத்தையும் வெளிப்படுத்துகிறான்.

"பார்த்தா, எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் எழுச்சி பெறுகிறதோ, அப்போதெல்லாம் நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன்.

நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், தர்மத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்!'

என்னும் பகவத் கீதையின் பிரதான சுலோகங்கள் இந்த நான்காம் அத்தியாயத்தில்தான் உள்ளன!

No comments:

Post a Comment