Sunday, February 17, 2013

பீஷ்மரின் தியாகம்

தந்தையின் விருப்பத்திற்காக இளமை துறந்து பதவியை உதறிய பீஷ்ம பிதாமகர் மறைந்த நன்னாள் பீஷ்மாஷ்டமி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.பீஷ்மாஷ்டமி தினம் என்பதால் பீஷ்மரின் தியாகத்தை இந்த நாளில் அறிந்து கொள்ளலாம். சந்தனு மகாராஜாவிற்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவர்தான் தேவவிரதன் என்ற காங்கேயன்.இளவரசான இவர் தனது தந்தை சந்தனுவிற்காக யாருமே செய்ய முடியாத தியாகத்தை செய்துள்ளார். தந்தை விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக இளமை விட்டுக்கொடுத்தார். அவர்களின் வாரிசுகள் அரசாளா வேண்டும் என்பதற்காக திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் ஏற்றார்.அவரது தியாகம் கண்டு உலகமே அதிசயத்தது. தந்தையின் ஆசையை நிறைவேற்ற தியாகம் செய்தவர் ‘பீஷ்மர்' என்று போற்றப்பட்டார். பீஷ்மர் என்றால் யாருமே செய்ய முடியாத தியாகத்தை செய்தவர் என்று பொருள். மகனின் தியாகத்தைக் கண்டு மகிழ்ந்த சந்தனு, மகனுக்கு மிகப்பெரிய வரம் ஒன்றை அளித்தார். "தீர்க்காயுளுடன் இருக்கும் நீ விரும்பும் நாளில்தான் உயிர்துறப்பாய்" என்பதுதான் அந்த வரம்.சந்தனு மகாராஜாவின் இரண்டாவது மனைவி மூலம் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் என்ற இரு மகன்கள் பிறக்கிறார்கள். அவர்களுக்கு அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை பீஷ்மர் மனமுடித்து வைக்கிறார். மன வலிமை குறைந்த சித்திராங்கதன் முதலில் இறந்துபோக, சந்தனு மஹாராஜாவுக்குப் பிறகு, விசித்திரவீர்யன் அஸ்தினாபுரத்தைத் தலைநகராய்க்கொண்டு இராஜ்ஜியத்தை ஆள்கிறான். கொஞ்ச காலத்திற்குப் பின்னர், காச நோயால் அவதியுற்ற விசித்திரவீர்யனும், சந்ததி இல்லாமல் மரணமடைகிறான். அவனுடைய அம்பிகா, அம்பபாலிகா என்ற இரு மனைவியரும் தம் இளம் வயதிலேயே விதவைகள் ஆகின்றனர். அஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசன் இல்லாமல் தவிக்கிறது. அன்றாட அரச காரியங்கள், சத்யவதி, பீஷ்மர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.அப்போது விரதத்தை விட்டு வம்சவிருத்தி செய்ய உதவவேண்டும் என்று என்று இரண்டாவது அன்னை கேட்டுக்கொண்ட போதும் சபதத்தை கைவிடவில்லை பீஷ்மர். இதனையடுத்து வியாசர் மூலம் அம்பிகா, அம்பாலிகாவிற்கு பிறந்தவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர். இதில் திருதராஷ்டிரன் கண்பார்வையற்றவன். பாண்டுவின் புத்திரர்கள் பாண்டவர்கள், திருதராஷ்டிரன் மக்கள் கவுரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.பிற்காலத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தீயவர்கள் என்று தெரிந்தும் கவுரவர்களின் பக்கம் நின்றார் பீஷ்மர். அர்ஜூனன் விட்ட அம்புப் படுக்கையில் பல நாள் இருந்தாலும் உத்தராயண காலத்தில் உயிர் விட வேண்டும் என்று காத்திருந்து ரத சப்தமிக்கு மறுதினம் அஷ்டமி நாளில் உயிர்நீத்தார். எனவேதான் இந்த நாளினை பீஷ்ம தர்ப்பண நாள், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கின்றனர்.தகப்பனுக்காக யாரும் செய்ய முடியாத தியாகத்தை செய்தவர் பீஷ்மர். ஆனால் இன்றைய காலத்தில் பெற்றவர்களுக்கு ஒருவேளை உணவளிக்க கூட யோசிக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். பீஷ்மாஷ்டமி நன்நாளில் பெற்றோர் இருந்தாலும் பீஷ்மருக்காக தர்பணம் செய்யலாம் என்கின்றனர் முன்னோர்கள்

 

Thursday, February 7, 2013

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் இரவு 12 மணிக்கு புத்தாண்டு வழிபாடு செய்கிறார்களே, சரியா?

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் இரவு 12 மணிக்கு புத்தாண்டு வழிபாடு செய்கிறார்களே, சரியா?
திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அரசு தனியார் நிர்வாகம் என எல்லாமே ஆங்கில மாதக் கணக்குப்படிதானே செயல்படுகிறது! எனவே ஆங்கில வருடம் என்பது இன்றைய காலத்தில் உலகளாவிய மக்கள் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. அவரவர் மதசமய சம்பிரதாயப்படி ஆண்டுகள் பலவாக பிரிந்திருந்தாலும், புத்தாண்டு தினத்தை வெவ்வேறாகக் கொண்டாடினாலும் பொது நிர்வாகம் என்பது ஆங்கில வருடம் தானே! அதன் துவக்க தினத்தில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தினால் எல்லோருக்கும் நன்மை தான். உற்சவ காலங்களிலும், வழிபாட்டு தினங்களிலும் இரவு அர்த்தயாம பூஜை தாமதமாகச் செய்யப்படுவது சாஸ்திர சம்மதம் தான்.

கோயில்களில் பரிகாரம் செய்துவிட்டு வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடுவது சரியா


கோயில்களில் பரிகாரம் செய்துவிட்டு வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடுவது சரியா?

சுவாமி பிரசாதத்திற்கு எந்த தோஷமும் கிடையாது. பரிகார பூஜை நைவேத்ய பிரசாதங்களைபக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் விநியோகம் செய்து விட்டு நீங்களும் சாப்பிடலாம்.

சமையல் செய்யும் போது கவனியுங்க !

நாள்தோறும் தவறாமல் பூஜை செய்யும் பக்தர் ஒருவர் இருந்தார். அவருடைய மனைவியும் நல்ல குணவதி. இருவரும் கடவுளை நினைக்காத நேரமில்லை. எப்போதும் அவனுடைய பெருமைகளைப் பேசி மகிழ்வர். அவருடைய பெருமையை அறிந்த மகான் ஒருவர் பக்தரின் வீட்டுக்கு வந்தார். தன் வீட்டுக்கு வந்திருப்பவர் மகான் என்பதை அறிந்து பக்தர் மிகவும் மகிழ்ந்தார். மகானுடன் சேர்ந்து ஒருவேளை உணவு சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்தை பக்தர் தெரிவித்தார். அவரை அன்புடன் உபசரித்தார். பக்தரின் மனைவியும் உடனிருந்தார்.
திடீரென்று பக்தரின் மனைவிக்கு மாதவிலக்கு உண்டானதால், ஒதுங்கிக் கொண்டாள். உடனடியாக பக்கத்துவீட்டு பெண்மணியை அழைத்து உணவு தயாரிக்க ஏற்பாடு செய்தனர். சாதுவும், பக்தரும் சேர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஆனால், என்னவோ அந்த மகான் தன்னை அறியாமல் தனக்கு அருகில் இருந்த வெள்ளி
டம்ளரைத் திருடிவிட்டார். டம்ளர் காணாமல் போனதை அறிந்த பக்தர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், மகானோ அன்றிரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டார். மனசாட்சி அவரை உறுத்தியது. பொழுது புலர்ந்ததும் பக்தரின் வீட்டுக்கு வெள்ளி டம்ளரோடு புறப்பட்டார். பக்தரிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டியதோடு டம்ளரையும் கொடுத்தார். காவியுடைக்கு பொருத்தமில்லா மல் நடந்து கொண்ட மகானைக் கண்ட பலரும் ஆச்சரியம் கொண்டனர். பக்தர் இதற்கான காரணத்தை அறிய முற்பட்டார். உண்மையும் அவருக்கு புரிந்து விட்டது. சாப்பாடு தயாரித்த பெண் அங்குள்ள சில பொருட்களைத் திருட வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் சமைத்தாள். அந்த உணவைச் சாப்பிட்டதும் அவளது புத்தி மகானை ஒட்டிக் கொண்டது. சமையல் செய்யும்போது நல்ல எண்ணத்துடன் சமைக்க வேண்டும். தீய எண்ணங்களுடன் சமைக்கும் சமையல் குடும்பத்தினரின் மனதைச் சிதறடிக்கும். நம் குழந்தைகளின் கவனம் சிதறுவது கூட இதனால் தான்! இனியேனும், சமையலின் போது தெய்வ சிந்தனையுடன் சமைப்பீர்களா!

கடைகளில் விற்கும் பலகாரங்களை சுவாமிக்கு நைவேத்யம் செய்யலாமா?


கடைகளில் விற்கும் பலகாரங்களை சுவாமிக்கு நைவேத்யம் செய்யலாமா?
சுவாமிக்கு நைவேத்யம் என்பது தயாரிக்கப்படுவதிலிருந்து பூஜை செய்யப்படும் வரை மற்றவர்கள் பார்ப்பது கூட தவறு என்கிறது சாஸ்திரம். அதாவது தயாரிப்பவரையும் பூஜை செய்பவரையும் தவிர, வீட்டிற்கும் சரி, கோயிலுக்கும் சரி, ஒரே சட்டம் தான். கோயிலில் நைவேத்யம் செய்யும்போது திரை போட்டுவிட்டுச் செய்வதைக் காணலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சுவாமிக்கு நிவேதனம் செய்யும் முன் வேறு யாரும் அதை சாப்பிடக்கூடாது. நைவேத்யத்தின் வாசனையை மற்றவர்கள் முகர்ந்து விடுவதால் ஏற்படும் தோஷத்திற்குக் கூட பரிகாரம் செய்யச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு சட்டங்களும் கோயில் மடப்பள்ளிக்கு என்று இருக்கும் போது கடைகளில் வாங்கி நைவேத்யம் செய்வது எப்படிப் பொருந்தும்?

சுமங்கலிப் பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிகிறார்களே

சுமங்கலிப் பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிகிறார்களே! சரியா? ""மாங்கல்ய தந்துனா'' என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. "தந்து' என்றால் "மஞ்சள் கயிறு' என்று பொருள். "திருமாங்கல்ய சரடு' என்றும் இதனைச் சொல்வார்கள். கணவன் இல்லாதவரை "விதந்து'என்று குறிப்பிடுவார்கள். அதாவது "மாங்கல்ய கயிறு இல்லாதவள்' என்று பொருள். மந்திர உச்சரிப்போடு கட்டப்படுகிற மஞ்சள்கயிறைத் தான் பெண்கள் அணிய வேண்டும். விருப்பமுள்ளவர்கள் திருமாங்கல்யத்தைக் கயிற்றிலும், மற்றவற்றை சங்கிலியிலும் அணிவதும் வழக்கம். எப்படியோ மஞ்சள் கயிறு அணிந்து தான் ஆக வேண்டும்.

உடைந்த விக்ரகங்களை பூஜிக்கலாமா?


பின்னப்பட்ட (உடைந்த) விக்ரகங்களை பூஜிக்கலாமா?

தெய்வ விக்ரஹங்களின் அமைப்பை அங்கம் (உடல்), உபாங்கம் (உறுப்புகள்), பிரத்யங்கம் (அணிகலன்) என்று மூன்று விதமாக பிரிப்பார்கள். விக்ரஹங்களில் பின்னம் ஏற்படுவது காலத்தாலும் நிகழலாம். தவறுதலாகவும் நிகழலாம். உடலில் பெரிய அளவில் பிளவு ஏற்படுமே யானால் அதனை மாற்றி வேறு விக்ரஹம் பிரதிஷ்டை செய்ய வேண்டும். உடல் உறுப்புகளில் சரிசெய்யக்கூடிய அளவிற்கு பின்னப்பட்டால் அஷ்டபந்த மருந்தினால் ஒட்டவைப்பது போன்ற பணிகளை செய்து சரி செய்து கொள்ளலாம். கை, கால், தலை ஆகிய உறுப்புகள் உடைந்திருந்தால் அந்த விக்ரஹத்தை மாற்ற வேண்டும். அணிகலன்கள், அலங்காரங்கள் ஆகியவற்றில் பின்னம் ஏற்பட்டிருந்தால் சரிசெய்து பூஜிக்க வேண்டுமே தவிர, விக்ரஹத்தை மாற்றக்கூடாது

வயதான காலத்தில் பெற்றோரைத் தவிக்க விட்டு, இறந்தபின் தகனம், தர்ப்பணம் போன்ற சம்பிரதாயங்களை மட்டும் செய்வதைப் பற்றி

 வயதான காலத்தில் பெற்றோரைத் தவிக்க விட்டு, இறந்தபின் தகனம், தர்ப்பணம் போன்ற சம்பிரதாயங்களை மட்டும் செய்வதைப் பற்றி தர்மசாஸ்திரம் என்ன கூறுகிறது?
பெற்றோரைப் பாதுகாப்பது. இறந்த பின் காரியங்கள் செய்வது இரண்டுமே ஒரு மனிதனுடைய கட்டாயக் கடமைகள். முன்னதை விட்டுவிட்டு பின்னதை மட்டும் செய்வது சரியா என்று கேட்கிறீர்கள். இரண்டும் தனித்தனி கடமையாகும். பெற்றோரை சரியாகப் பாதுகாக்காதது மிகப்பெரிய பாவம் தான். இதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும். இது அவரை மட்டும் பாதிக்கும் விஷயம். இறந்த பிறகு காரியங்கள் செய்யாவிட்டால் கொடிய பாவம். இது சந்ததிகளையே பாதிக்கும். எனவே அவருக்காக இல்லாவிட்டாலும் சந்ததிகளைக் காப்பாற்றுவதற்காகவாவது பித்ரு காரியங்களைச் செய்தேயாக வேண்டும்.

யாரெல்லாம் அம்மாவுக்கு நிகரானவர்கள்... - அதிவீரராமபாண்டியர்

நல்ல வழியில் சம்பாதித்த பொருளைக் கொண்டு தானும் உண்டு, குடும்பத்துக்கும் நல்லதை செய்பவர்கள் சொர்க்கலோக வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் ஆகின்றனர்.
* நாம் அடைந்த சுகங்களை அனுபவித்து, அடையாத சுகத்துக்கு ஆசைப்பட்டு, அவதிப்படாமல் இல்லற நெறியை எந்தக்காலத்திலும் பிறழாமல் வாழ்பவர்கள் முற்றும் துறந்த முனிவர்களைக் காட்டிலும் மேலானவர்கள்.
* தந்தையும் தாயும் கூறிய கட்டளையை ஏற்று நடப்பதே பிள்ளைகள் செய்யும் சிறந்த கடமையாகும்.
* கற்பில் மாணிக்கக் குன்றைப்போல விளங்கும் மனைவியை கொண்டவன், அருந்தவம் செய்ததன் பயனாக அவளை அடைந்திருக்கிறான். அப்படிப்பட்டவன் முயன்றால் முடியாத செயல் ஒன்றுமில்லை.
* கங்கை போன்ற நதிகளில் மூழ்கினால் மூழ்கியவர் பாவம் தீரும். ஆனால் கற்புடைய பெண்கள்
மூழ்கினால் நதியின் பாவம் தீரும்.
* மன்னவன், குரு, சகோதரன், மாமன் ஆகியோரது மனைவிமார்களும், தன் மனைவியைப் பெற்றவர்களும் நம்முடைய தாய்க்கு நிகரானவர்கள்.
* தான் செய்த தவத்தையும், தானமாகக் கொடுத்த பொருளையும் பெருமையாகப் புகழ்ந்து கொண்டால் அவற்றின் பெருமை குறையும்.
* இறைவனை வணங்க தலை இருக்கிறது. வாழ்த்த வாய் இருக்கிறது. மனம் மட்டும் அடங்காமல் திரியும் குரங்கு போன்றது. எனவே இறைவனை நினைக்க அடியார்களிடம் பழகிக் கொள்ள வேண்டும்.
* இறைவனை வழிபட்டால் உள்ளம் தூய்மை பெறும். உள்ளம் தூய்மையுடையவன் செல்வத்தையும், சிறப்பையும் பெறுகிறான். மனக்கவலையை தவிர்த்து, அறிவு நிரம்ப பெறுவதுடன், கல்வியில் சிறந்து நற்கதி அடைவான்.
* நாம் விரும்பியதை முன்பே பெற்றிருப்பதை அறியாமல் விரும்பியது கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்கள், பரமனின் அருளைப் பெற்றும் பெறாதவர் போல் அறியாமையில் வருந்துகின்றனர்.
* கடலில் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாறுபட்டு வருவதைப் போல், மனதிலும் ஆசைகளும், கவலைகளும் கோடிகோடியாக அடுத்தடுத்து வந்து வேதனை அளிக்கிறது.
* புகழ்,செல்வம்,பேரறிவுடன் திருப்பொலிவு, உண்மையான இன்பம், முக்தி ஆகியவற்றை பெற விரும்புகிறவர்கள் மனத்தை ஒரு வழிப்படுத்தி இறைவனைத் துதிக்க வேண்டும்.
* மறைவாக இருந்து பொம்மைகளை ஆட்டி நடிக்க வைப்பவனை போல், இறைவன் கண்களுக்கு புலப்படாமலும், காட்சியளிக்காமலும் இருந்து நம்மை ஆட்டுவிக்கிறான்.
* உண்மையான பக்தி உள்ளவர்கள் செய்யும் குற்றங்களை, கோபம் கொள்ளாமல் இறைவன் பொறுத்துக் கொள்வான்.
* உலகிலுள்ள இல்லற வாழ்க்கை, சொந்த பந்தம், அளவிட முடியாத செல்வம், நிறைந்துள்ள மற்ற வசதிகள் அனைத்தும் நீடித்து நிற்காது.
* வெண்மையான குடையின் கீழ் அமர்ந்து உலகத்தை ஆள்பவனுக்கு இறைவன் மீது பக்தி இல்லையென்றால், ஒருநாள் அவனுக்கும் அன்பு இல்லாத கூழும் கிடைப்பது அரிதாகிவிடும்.
* பொருளையும், குறைவற்ற அறிவையும், அருளையும், ஆனந்தத்தையும் அளித்து இருளுக்கு ஒளியை காட்டும் இறைவனை எண்ணினால் அனைத்து இன்னல்களும் நீங்கிவிடும்.
* பூமிக்குப் பாரமாய், அவல வாழ்க்கையில் ஆசை வைத்து உடலைச் சுமந்து திரியும் உயிர்கள் தங்களுக்கு தாங்க@ள நற்கதியைத் தேடிக் கொள்ள வேண்டும்.
* உயிரை ஓடவிட்ட உடலை, உறவினர்கள் இடுகாட்டில் எரிப்பதற்குள் இறைவனை எண்ணி மோட்சத்துக்கு வழி தேட வேண்டும்.
* நாக்குக்கு அழகு இறைவனின் நாமத்தைக் கூறுவது, பாடலுக்கு அழகு இறைவனைப்பாடுதல், கலைக்கு அழகு அறிவோடு இருத்தல், தலைக்கு அழகு இறைவனின் பாதத்தைத் தாங்குவதாகும்

குழந்தைகள் படிப்பில் முன்னேற என்ன மந்திரம் கூறி வழிபட வேண்டும்?

குழந்தைகள் படிப்பில் முன்னேற என்ன மந்திரம் கூறி வழிபட வேண்டும்?
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவான வார்த்தைகள் தான் முதல் மந்திரம். குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லிக் கொடுங்கள்.
""சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா''

திருமணத்திற்கு ஜாதகம் அவசியம் தானா?

ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் பலர் சந்தோஷமாக இருக்கும் போது, திருமணத்திற்கு ஜாதகம் அவசியம் தானா?
முன்பின் அறியாத ஒரு ஆணும், பெண்ணும் கணவன், மனைவியாக வாழ்க்கையில் இணைகிறார்கள். மனம் ஒத்து வாழ்க்கை நடத்துவது, பிள்ளைப்பேறு, அவர்களின் எதிர்காலம் இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ள வசதியாக இருப்பது ஜாதகம். இருவரின் ஜாதகமும் ஒரே மாதிரியாக இருந்து பொருந்தியிருந்தால் பெற்றோர்களும் கவலையில்லாமல் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். புதுமணத் தம்பதிகளும் மகிழ்ச்சியாக வாழ்வர். இதுவல்லாமல் தாங்களே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பவர்களும், பெற்றோர்கள் அனுமதியுடன் மனப்பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்து கெ õள்பவர்களும் உண்டு. இவை ஒரு காரணத்தினால் நிகழ்ந்து விடுகிற காரியம். ""தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு செய்கிறோம்'' என்று பெற்றோர்கள் ஒரு வித பயத்துடனேயே சொல்லிக் கொண்டிருப்பர். நிம்மதியாக திருமணம் நிகழ பெரியவர்கள் கூறுகிறபடி ஜாதகம் பார்த்து செய்வதே சிறந்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சுவாமியுடன் பூ உத்தரவு கேட்டு செய்யலாம். தாங்கள் கேட்பது மூன்றாவது நிலை, தெய்வம்
காப்பாற்றட்டும். இவ்வளவு சிரத்தையாகக் கேட்டிருப்பதைப் பார்த்தால் வேறு ஏதோ ஏற்பாடு நடப்பது போல தெரிகிறது. பெற்றோர்களிடம் கூறிவிடுங்களேன்

சுபநிகழ்ச்சிகளைத் தேய்பிறை நாட்களில் செய்யக்கூடாது என்று சொல்வதன் காரணம் என்ன?

சுபநிகழ்ச்சிகளைத் தேய்பிறை நாட்களில் செய்யக்கூடாது என்று சொல்வதன் காரணம் என்ன?
நட்சத்திரங்களுக்கு அதிபதி சந்திரன். நாள் நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்யும்பொழுது அவற்றின் தலைவனாகிய சந்திரன் வளர்பிறையாக அதாவது பலமுள்ளவனாக இருக்க வேண்டும். அதனால் தான் தேய்பிறையில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்கிறார்கள். தேய்பிறை நாட்களில் சப்தமி வரை சுபகாரியங்கள் செய்யலாம்

சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்தபின் சிறிது நேரம் அமர்ந்துவர வேண்டும்.

* சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்தபின் சிறிது நேரம் அமர்ந்துவர வேண்டும். விஷ்ணு கோயிலுக்கு சென்று தரிசித்தபின் நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
 சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க பூதகணங்களை நம்மோடு துணைக்கு அனுப்புகிறார் சிவன்.
அதனால் நாமும் சிறிதுநேரம் உட்கார்ந்து இறைவனிடத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு கிளம்புகிறோம். விஷ்ணு கோயிலில் தரிசித்துவிட்டு வரும்போது மகாலட்சுமி நம்மோடு வீட்டிற்கு வருகிறாள். அதனால் உட்காராமலும் வேறெங்கும் செல்லாமலும் வீட்டிற்கு நேராக
வரவேண்டும்.

கடவுளை பயபக்தியுடன் நாம் வழிபாடு செய்கிறோம். ஆனால், எந்த இடத்திலாவது பக்தனைக் கண்டு பகவான் பயந்ததாக வரலாறு உண்டா?


 கடவுளை பயபக்தியுடன் நாம் வழிபாடு செய்கிறோம். ஆனால், எந்த இடத்திலாவது பக்தனைக் கண்டு பகவான் பயந்ததாக வரலாறு உண்டா?  
தியாகராஜ சுவாமிகள் ஒருமுறை ராமபிரானிடம் சென்று, தனக்கு மோட்சம் தரும்படி
வேண்டினார். ஞான,கர்ம யோகம் இல்லாத உமக்கு மோட்சம் தரமுடியாது என்று மறுத்துவிட்டார் ராமச்சந்திர மூர்த்தி. எங்கு அப்ளிகேஷன் போட்டால் அவர் பணிவார் என்பதை தியாகராஜ சுவாமிகள் அறிந்திருந்தார். ஒருநாள் சீதாதேவி ராமனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ராமனின் வாய் சிவக்கவில்லை. "என் (மனைவி) மீது பிரியம் இருந்தால் தானே வாய் சிவக்கும்' என்று சொல்லி சிணுங்கினாள் சீதை. இதனால் அவர்களுக்குள் ஊடல் உண்டானது. ஊடலைத் தீர்க்க ராமனே முந்திக்கொண்டார். இதுதான் சமயமென அவரிடம் சீதை,"" என் மீது நிஜமான அன்பிருந்தால் என் குழந்தை தியாகராஜனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்,'' என்றாள் பிராட்டி. பார்த்தீங்களா! மோட்சத்தை தர மறுத்த ராமனிடம், பிராட்டியார் மூலம் சாதித்துக் கொண்டார் தியாகராஜ சுவாமிகள். பக்தனுக்கு பகவான் கட்டுப்பட்டதைப் பார்த்தீர்களா! சீதையை வழிபடுவதன் மூலம் நமது நியாயமான எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும்.