Thursday, February 7, 2013

யாரெல்லாம் அம்மாவுக்கு நிகரானவர்கள்... - அதிவீரராமபாண்டியர்

நல்ல வழியில் சம்பாதித்த பொருளைக் கொண்டு தானும் உண்டு, குடும்பத்துக்கும் நல்லதை செய்பவர்கள் சொர்க்கலோக வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் ஆகின்றனர்.
* நாம் அடைந்த சுகங்களை அனுபவித்து, அடையாத சுகத்துக்கு ஆசைப்பட்டு, அவதிப்படாமல் இல்லற நெறியை எந்தக்காலத்திலும் பிறழாமல் வாழ்பவர்கள் முற்றும் துறந்த முனிவர்களைக் காட்டிலும் மேலானவர்கள்.
* தந்தையும் தாயும் கூறிய கட்டளையை ஏற்று நடப்பதே பிள்ளைகள் செய்யும் சிறந்த கடமையாகும்.
* கற்பில் மாணிக்கக் குன்றைப்போல விளங்கும் மனைவியை கொண்டவன், அருந்தவம் செய்ததன் பயனாக அவளை அடைந்திருக்கிறான். அப்படிப்பட்டவன் முயன்றால் முடியாத செயல் ஒன்றுமில்லை.
* கங்கை போன்ற நதிகளில் மூழ்கினால் மூழ்கியவர் பாவம் தீரும். ஆனால் கற்புடைய பெண்கள்
மூழ்கினால் நதியின் பாவம் தீரும்.
* மன்னவன், குரு, சகோதரன், மாமன் ஆகியோரது மனைவிமார்களும், தன் மனைவியைப் பெற்றவர்களும் நம்முடைய தாய்க்கு நிகரானவர்கள்.
* தான் செய்த தவத்தையும், தானமாகக் கொடுத்த பொருளையும் பெருமையாகப் புகழ்ந்து கொண்டால் அவற்றின் பெருமை குறையும்.
* இறைவனை வணங்க தலை இருக்கிறது. வாழ்த்த வாய் இருக்கிறது. மனம் மட்டும் அடங்காமல் திரியும் குரங்கு போன்றது. எனவே இறைவனை நினைக்க அடியார்களிடம் பழகிக் கொள்ள வேண்டும்.
* இறைவனை வழிபட்டால் உள்ளம் தூய்மை பெறும். உள்ளம் தூய்மையுடையவன் செல்வத்தையும், சிறப்பையும் பெறுகிறான். மனக்கவலையை தவிர்த்து, அறிவு நிரம்ப பெறுவதுடன், கல்வியில் சிறந்து நற்கதி அடைவான்.
* நாம் விரும்பியதை முன்பே பெற்றிருப்பதை அறியாமல் விரும்பியது கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்கள், பரமனின் அருளைப் பெற்றும் பெறாதவர் போல் அறியாமையில் வருந்துகின்றனர்.
* கடலில் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாறுபட்டு வருவதைப் போல், மனதிலும் ஆசைகளும், கவலைகளும் கோடிகோடியாக அடுத்தடுத்து வந்து வேதனை அளிக்கிறது.
* புகழ்,செல்வம்,பேரறிவுடன் திருப்பொலிவு, உண்மையான இன்பம், முக்தி ஆகியவற்றை பெற விரும்புகிறவர்கள் மனத்தை ஒரு வழிப்படுத்தி இறைவனைத் துதிக்க வேண்டும்.
* மறைவாக இருந்து பொம்மைகளை ஆட்டி நடிக்க வைப்பவனை போல், இறைவன் கண்களுக்கு புலப்படாமலும், காட்சியளிக்காமலும் இருந்து நம்மை ஆட்டுவிக்கிறான்.
* உண்மையான பக்தி உள்ளவர்கள் செய்யும் குற்றங்களை, கோபம் கொள்ளாமல் இறைவன் பொறுத்துக் கொள்வான்.
* உலகிலுள்ள இல்லற வாழ்க்கை, சொந்த பந்தம், அளவிட முடியாத செல்வம், நிறைந்துள்ள மற்ற வசதிகள் அனைத்தும் நீடித்து நிற்காது.
* வெண்மையான குடையின் கீழ் அமர்ந்து உலகத்தை ஆள்பவனுக்கு இறைவன் மீது பக்தி இல்லையென்றால், ஒருநாள் அவனுக்கும் அன்பு இல்லாத கூழும் கிடைப்பது அரிதாகிவிடும்.
* பொருளையும், குறைவற்ற அறிவையும், அருளையும், ஆனந்தத்தையும் அளித்து இருளுக்கு ஒளியை காட்டும் இறைவனை எண்ணினால் அனைத்து இன்னல்களும் நீங்கிவிடும்.
* பூமிக்குப் பாரமாய், அவல வாழ்க்கையில் ஆசை வைத்து உடலைச் சுமந்து திரியும் உயிர்கள் தங்களுக்கு தாங்க@ள நற்கதியைத் தேடிக் கொள்ள வேண்டும்.
* உயிரை ஓடவிட்ட உடலை, உறவினர்கள் இடுகாட்டில் எரிப்பதற்குள் இறைவனை எண்ணி மோட்சத்துக்கு வழி தேட வேண்டும்.
* நாக்குக்கு அழகு இறைவனின் நாமத்தைக் கூறுவது, பாடலுக்கு அழகு இறைவனைப்பாடுதல், கலைக்கு அழகு அறிவோடு இருத்தல், தலைக்கு அழகு இறைவனின் பாதத்தைத் தாங்குவதாகும்

No comments:

Post a Comment