Wednesday, February 6, 2013

ஏன்? கோவிலுக்குச் செல்வது

ஏன்? கோவிலுக்குச் செல்வது





"ஆலயம் தொழுவது சாலவும் நன்று!' என்று ஒரு வாக்கியம் உள்ளது. நாம் காலை எழுந்தது முதல், இரவு வரையில், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம். இவைகளோடு, கோவிலுக்கு போவது என்ற பழக்கத்தையும் வைத்துக் கொள்வது நல்லது.
பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதுகிறது. இரவு வந்ததும், கோவிலுக்குச் சென்று, பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் செய்யும் போது, மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் லயித்திருக்கும்; மனதுக்கும் அமைதி கிடைக்கும். அதே சந்தர்ப்பத்தில், பகவானிடம், "பகவானே... நான், பிறர் கையை எதிர்பாராமல், வாழ்நாளை போக்கி விட வேண்டும்!' என்று பிரார்த்தித்து கொள்ள சொல்லியிருக்கிறது. அதனால், தினமும் ஒரு முறையாவது, கோவிலுக்குச் சென்று வர வேண்டும்.
பிறருக்காக உழைக்கிறோம்; சம்பாதித்து போடுகிறோம்; குடும்பத்தை கவனிக்கிறோம். இதெல்லாம் ஒரு கடமை. அதேபோல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும், பரலோக சுகத்துக்கும் சுலபமான வழி, பகவானை வழிபடுவது தான்.
"பகவான் தான் எங்கும் இருக்கிறாரே... கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? வீட்டிலிருந்து கொண்டே அவரை நினைத்தால் போதாதா?' என்று வேதாந்தம் பேசுவதில், பிரயோஜனமில்லை.
பூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது. பசுவின் மடியில் பால் உள்ளது. பால் வேண்டுமானால், அதன் மடியிலிருந்து தான் பால் கறக்க முடியும்; அதன் கொம்பை திருகினால், பால் வருமா?
அதுபோல எங்கும் கடவுள் இருக்கிறார் என்றாலும், நாம் நாலு பக்கமும் சுற்றி, சுற்றிப் பார்த்தாலும், கடவுளைக் கண்டோம் என்று சொல்ல முடியாது. கோவிலுக்குப் போய், கடவுளை தரிசித்தால் தான், மன நிம்மதி கிடைக்கும்.
கோவிலுக்குள் உள்ள தெய்வம் வெறும் சிலையல்ல; அது மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, தெய்வ சாந்நித்யம் கொண்டது. கண்ணுக்கு தெரியாத கடவுளை, அந்த விக்ரகத்தில் ஆவாகனம் செய்து வைத்திருக்கின்றனர். அதற்கு காலா காலத்தில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தூப தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி என்று வரிசையாக உபசாரங்கள் உள்ளன.
இது, ஒவ்வொரு நாளும் ஆறு காலம், நான்கு காலம், மூன்று காலம் என்று நியமனம் செய்து, அதன்படி நடந்து வருகிறது. அதனால், ஏதாவது ஒரு கால பூஜையையாவது பார்த்து, தரிசனம் செய்து வருவது நல்லது.
இப்பவும், சில பெரியவர்கள், சாயந்திரம் அநுஷ்டானம் முடிந்ததும், "சந்திகாலம் ஆகிவிட்டது; கோவிலுக்குப் போய் சந்திகால தீபாராதனை பார்த்து விட்டு வந்து விடு கிறேன்...' என்று சொல்லிவிட்டு, கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு வருவர்.
ஒரு நாள் பொழுதை கழிக்கும் போது, கடைசியாக தெய்வ தரிசனத்தோடு முடித்தால், வாழ்நாளில் பெரும்பாலான புண்ணியத்தை அடையலாம்

No comments:

Post a Comment