Wednesday, February 6, 2013

வயது முக்கியமல்ல; புண்ணியம் தான் முக்கியம்

சார்... நாளைக்கு எனக்கு 60 வயதாகிறது. சஷ்டியப்தபூர்த்தி சாந்தி நடக்கிறது. நீங்கள் அவசியம் வரவேண்டும்!'
'ஓ! அப்படியா! ரொம்ப சந்தோஷம். பகவான் தீர்க்காயுசை கொடுக்கட்டும்!'
இப்படி பேசிக் கொள்வதுண்டு. சரி... இந்த 60 வயது என்பது 0கடந்த காலம்; எதிர்காலம் எவ்வளவு என்று தெரியாது. வருடம் போக, போக ஆயுள் நாள் குறைகிறது; வயது கூடுகிறது.
'இந்த 60 வருஷ காலத்தில் என்ன செய்திருக்கிறாய்?' என்று கேட்டால், 'இரண்டு பிள்ளைகளை பெற்று, படிக்க வைத்து, நல்ல வேலையில் சேர்த்திருக்கிறேன். இரண்டு பெண்களுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறேன்!' என்று பெருமையாக சொல்வர்.
'அதுசரி... உங்களுக்காக என்ன செய்து கொண்டீர்கள்?' என்று கேட்டால், 'ஓ... இங்கே ஒரு வீடு கட்டியிருக்கேன். பாங்க்லே டிபாசிட் இருக்கு. வட்டி வருகிறது. சாப்பாட்டுக்கு கவலையே இல்லை!' என்கிறார்.
'நான் அதை கேட்கவில்லை சார்! அதெல்லாம் இந்த லோகத்து சுகத்துக்கானவை; பரலோக சுகத்துக்கு என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்' என்று கேட்டால், 'பூ! அதுவா... அது இனிமேல் தான்... ஏதாவது தான – தர்மம் செய்து, புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்!' என்கிறார்.
'இனிமேல் தான்' என்பது, எப்போது? இவர் நாள், நட்சத்திரம் பார்த்து தான தர்மம் செய்து, புண்ணியம் சம்பாதிக்கும் வரையில், 'அவன்' விட்டு வைப்பான் என்பது என்ன நிச்சயம்?
தன் குடும்பத்துக்கு செய்ததெல்லாம் தன் கடமையை செய்ததாகும். தனக்கு பரலோக சுகத்துக்காக ஏதாவது செய்து, புண்ணியம் சேர்த்திருந்தால், அது உதவும். இந்த புண்ணியத்தை தான் தேடி வைத்துக் கொள்ள வேண்டும். புண்ணியம் சம்பாதித்திராவிடினும் பரவாயில்லை; பாவத்தை செய்யக் கூடாது.
இந்த பாவத்தின் பலன்களை, செய்தவனே தான் அனுபவிக்க வேண்டும். புண்ணியத்தை கூட தானம் செய்யலாம். 'காவிரி ஸ்நான புண்ணியத்தை உனக்கு தானம் செய்கிறேன். கங்கா ஸ்நான நலனை உனக்கு தானம் செய்கிறேன். விரதம் அனுஷ்டித்த பலனை உனக்கு தானம் செய்கிறேன்!' என்று தானம் செய்யலாம்; ஆனால், பாவம் செய்த பலனை தானம் செய்ய முடியாது.
வாழும் காலத்திலேயே குடும்பத்தை காப்பாற்றுவதுடன், தன் பரலோக சுகத்துக்கும் ஏதாவது புண்ணிய காரியங்களை அவ்வப்போது செய்துவிட வேண்டும். அந்த சின்ன, சின்ன புண்ணியமே ஒரு மலை போலாகி, பரலோகத்தில், காப்பாற்றும். இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வயது முக்கியமல்ல; புண்ணியம் தான் முக்கியம்

No comments:

Post a Comment