Wednesday, February 6, 2013

செலவு இல்லாமல் புண்ணியம் கிடைக்குமா ?

செலவு இல்லாமல் புண்ணியம் கிடைக்குமா ?



புண்ணியத்தை சுலபமாகத் தேடிக் கொள்ள, பகவான் நாமாவை சொல்லிக் கொண்டிருந்தாலே போதும்; அடிக்கடி சொல்ல முடியாவிட்டாலும், ஒரு நாளைக்கு, ஒரு தடவை சொன்னாலும் போதும். வாழ்நாள் முழு வதும் சொல்ல முடியாவிட்டாலும், கடைசி காலத்தில் சொன்னா லும் போதும்... சகல பாவங்களும் அகன்று, புண்ணிய லோகம் கிடைக்கும். இதற்கு புராணத்தில், "அஜாமிளன் சரித்திரம்' என்று ஒன்று உள்ளது. வேத சாஸ்திரம் அறிந்தவர் அஜாமிளன். தினமும் காட்டுக்கு சென்று சமித்து, தர்ப்பை எல்லாம் எடுத்து வந்து, பூஜை, வழிபாடு எல்லாம் முறையாக செய்து வருபவர். இப்படி அடிக்கடி காட்டுக்குப் போகும்போது, ஒரு சமயம் அங்கிருந்த வேடப் பெண்ணைக் கண்டார். ஏதோ ஒரு மனமாற்றம்; அவளிடம் ஈடுபாடு கொண்டார்.
நாளடைவில் இந்த சிநேகம் வலுப்பெற்றது. இவரது ஆசார அனுஷ்டானம் குறைந்தது. கடைசியில் வீடு, மனைவி யாவற்றையும் விட்டு விட்டு, அந்த வேடப் பெண்ணுடனேயே தங்கி விட்டார். அது மட்டுமா? அவள் மூலமாக நாலைந்து பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டார். கடைசி பிள்ளைக்கு, "நாராயணன்' என்று பெயரிட்டார். காலம் ஓடியது. இவரது மரண காலம் வந்தது; படுத்து விட்டார். இவரை அழைத்துப் போக வந்து விட்டனர் எம தூதர்கள். அவர்களைக் கண்டதும், அஜாமிளன் நடுங்கிப் போய், பயத்தில் தன் பிள்ளையாகிய நாராயணனை, "நாராயணா!' என்று கூப்பிட்டு விட்டார். அவ்வளவுதான், தேவலோகத்தில் இருந்து இவரை அழைத்துப் போக அங்கே வந்து விட்டனர் விஷ்ணு தூதர்கள்.
இவர்களைப் பார்த்த எம தூதர்கள், "அடடா... நீங்கள் இங்கே வரலாமா? இவன் மகா பாவி. இவனை அழைத்துப் போக நாங்கள் வந்திருக்கிறோம்; நீங்கள் போய் விடுங்கள்...' என்றனர். அதற்கு, "இவனா பாவி? இவன் மகா புண்ணியசாலி. அதனால் தான் இவனை அழைத்துப் போக நாங்கள் வந்திருக்கிறோம். இவன் கடைசி காலத்தில், "நாராயணா!' என்று சொன்னதால், இவனுக்கு விஷ்ணுலோக பதவி கிடைக்கிறது...' என்றனர் விஷ்ணு தூதர்கள். இப்படி எம தூதர்களும், விஷ்ணு தூதர்களும் வாக்குவாதம் செய்து பார்த்துவிட்டு, சரி... இதை நம் தலைவரிடமே கேட்டு விடலாம் என்று போய் விட்டனர். நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்தார் அஜாமிளன்.
அப்போதுதான் அவருக்கு ஞானம் உண்டாயிற்று... "அடடா... நாம் இவ்வளவு காலம் எவ்வளவு பாவம் செய்துள்ளோம். இந்த நாராயண நாமமல்லவா நம்மைக் காப்பாற்றியது. அதன் பெருமையை இவ்வளவு நாளும் தெரிந்து கொள்ளாமலிருந்து விட்டோமே...' என்று, வருத்தப்பட்டார். வீடு, மனைவி, வேடச்சி, பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, பத்ரிகாச்ரமம் சென்று நாராயணனைக் குறித்து தவம் செய்து, முக்தி பெற்றார் என்பது சரித்திரம்.
பகவான் நாமாவை மறக்காமல் சொல்லுங்களேன்... செலவு எதுவுமில்லாமல், புண்ணியம் கிடைக்குமே

No comments:

Post a Comment