Monday, April 15, 2013

சித்ரா பவுர்ணமியின் மகத்துவம்

பூமியைச் சுற்றிவரும் சந்திரன் பவுர்ணமி அன்று முழு நிலவாகத் தோன்றி மிகப் பிரகாசமாகக் காட்சிதரும். இந்தப் பவுர்ணமி தினமானது மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன.

மாதம் தோறும் வரும் பௌர்ணமி நாளில் மலைக்கோவில்களுக்குச் சென்று மக்கள் கிரிவலம் வருகின்றனர்.எனினும், சித்திரைப் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல், கோவில்களிலும் புனிதத்தலங்களிலும் தம் குடும்பத்தாருடன் பொங்கல் வைத்தல் போன்றன சிறப்பனவையாகும். சித்திரைப் பவுர்ணமியானது, சித்திரகுப்தனாரின் திருமண நாளாகும்.

அவர் நமது பிறப்பு, இறப்பு கணக்குகளைப் பார்த்துவரும் எமதர்மனின் கணக்குப்பிள்ளை ஆவார்.பூமியில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியங்களைக் கணக்கெடுத்து அவைகளுக்குத் தகுந்தால் போல் நமக்குரிய சொர்க்க, நரகங்களை முடிவு செய்வதே சித்திர குப்தனின் கடமையாகும்.

எனவே அவரது திருமண நாளான சித்ரா பௌர்ணமியன்று பொங்கலிட்டும் கிரிவலம் வந்தும் இறைவனை வழிபடும்போது, சித்திர குப்தனை மனதில் நினைத்து'' நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்'' என வேண்டி வழிபட வேண்டும்.

மேலும் அன்றைய தினம் புனித நதிகளில் நீராடியும் நமது பாவங்களைப் போக்கிக்கொள்ளலாம். சித்ரா பவுர்ணமியில் சித்திரை நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் சேர்ந்து வருவதால், அன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது.

ஏனெனில் அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் அங்கே பிரசன்னமாகி யுள்ளபித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்களாம்.சித்ரா பவுர்ணமி அன்று பெரும்பாலான ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்வார்கள்.


முக்கனி வழிபாடு
மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரையில் வரும் பவுர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று காலையில் குளித்து முடித்து பூஜைஅறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து சிவனை எண்ணி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம்.
பழங்காலத்தில் சித்ரா பவுர்ணமி அன்று ஆற்றங்கரையில் உறல் தோண்டி அதற்கு திருவுறல் என்று பெயர் சூட்டி அங்கே இறைவனை வலம் வரச்செய்வார்கள். சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற முக்கனிகளை இறைவனுக்கு படைத்து பூஜிப்பார்கள்.
இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பது தான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும். வியர்வையையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர் நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே சித்ரா பவுர்ணமியின் விஞ்ஞானப்பூர்வ உண்மை.
அதிலும்,உறவினர், நண்பர்கள் புடைசூழ அமர்ந்து உரையாடி, பாடி, மகிழ்ந்து உண்பது எல்லோருக்கும் பிடித்த மான விஷயமாகும். அன்றைய தினம் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படும்.
புராணக் கதைகளின் படி, மனிதர்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன் அவதரித்தது சித்ரா பவுர்ணமி தினத்தன்றுதான். அவர் சிவன் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதாலும் சித்திரை மாதத்தில் பிறந்தாலும் சித்ரகுப்தன் என்று அழைக்கப் படுகிறார்.
 
அம்பிகை பூஜை

அம்பிகை வழிபாட்டிற்கு சித்திரா பவுணர்மி தினம் சிறப்பானதாக குறிப்பிடப்படுகிறது. அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். சித்ரா பவுர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.
சித்ரா பவுர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.
சித்திரை மாத பௌர்ணமியன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
இந்தப் பூஜை செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி என்றால் மிகவும் விசேஷம்.

No comments:

Post a Comment