Friday, May 24, 2013

சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிறப்பு

பஞ்ச பூதங்களினாலான இவ் பிரபஞ்சத்தில் இறைவன் பஞ்ச தலங்களின் வீற்றிருந்து படைத்தல், காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைப் புரிகின்றான் என சைவசமயம் கூறுகின்றது.
பூதம் என்றால் சக்தி அல்லது பொருள் என்பதாகும் பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அவற்றை இறைவனருளிக்கு இணையாக மதித்து நம் முன்னோர்கள் பஞ்ச பூததலங்களை அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
இறைவன் காஞ்சிபுரத்தில் - நிலமாகவும், திருவானைக்காவில் - நீராகவும், திருவண்ணாமலையில் - நெருப்பாகவும், திருக்காளஹஸ்தியில் - வாயுவாகவும், சிதம்பரத்தில் - ஆகாயமாகவும் தோற்றமளிக்கின்றார்.
ஆகாயத் தலமாக வழிபடும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இடையறாது ஆனந்தத்தாண்டவம் புரியும் நடராஜமூர்த்தம் மூல மூர்த்தியாகவும், உற்சவ மூர்த்தியாகவும் விளங்குகின்றது. இத் தோற்றமானது இறைவன் இயற்றும் பஞ்சகிருத்தியங்களைச் சுட்டி நிற்கின்றது. நடராசப் பெருமானின் வலது திருக்கையிலுள்ள "உடுக்கை" சிவனின் படைத்தல் தொழிலையும்; தூக்கிக் காட்டப்பட்ட "அபய கரம்", அஞ்சேல் என்ற அபயம் காட்டி காத்தல் தொழிலையும்; இடது கரத்திலே ஒளிரும் "அக்கினி" அழித்தல் தொழிலையும்; முயலகனை மிதித்து "ஊன்றிய திருவடி" மறைத்தல் தொழிலையும் "தூக்கிய இடது திருவடி" அருளலையும் குறிக்கின்றது.

விரிந்திருக்கும் சடைமுடி ஆட்டத்தின் வேகத்தை மட்டும் காட்டாமல், உலக இயக்கத்தில் ஈடுபட்டு உயிர்களின் விடுதலைமீது கொண்ட நாட்டத்தையும் புலப்படுத்துகிறது. அவன் இடுப்பில் உள்ள பாம்பு, காலம் என்னும் கட்டுப்படாத தத்துவத்தைச் சுழற்றுவது நானே என்னும் அவனுடைய மேலாண்மையையும் குறிக்கிறது. அவன் முகத்தில் காணப்படும் ஆனந்தம் இந்த ஐந்தொழிலையும் ஒரு விளையாட்டுப்போல எவ்வளவு எளிதாகச் செய்ய முடிகிறது என்று காட்டுகிறது. கீழே கிடக்கிற "முயலகன்" என்னும் அரக்கன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மங்களின்மீது சிவனுக்குள்ள ஆதிபத்தியத்தைப் புலப்படுகிறது
சிவபிரானுக்குரிய உருவத் திருமேனிகள் அறுபத்திநான்கு எனக் கூறப்படுகின்றன. இவற்றுள் இலிங்க வடிவம் அருவுருவத் திருமேனியாகும். ஏனையவை உருவத்திருமேனிகளாகும். ஓவ்வொரு உருவத்திருமேனியும் சமயதத்துவக் கருத்துக்களை மட்டுமன்றிக் கலையம்சங்களையும் பிரதிபலிக்கும். இவற்றுள்ளே நடராஜத்திருமேனியானது சைவசித்தாந்தத்தின் பிரதிபலிப்பாக விளங்குவதைக் காணலாம்.
சிதம்பரம் நடராசப் பெருமானை புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை செய்ததால் பெரும்பற்றப்புலியூர் என்றும்; புலியூர் என்றும்; “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம் என்றும் பெயர் பேற்றது. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறுவர்.
ஆகயத்தின் தோற்றத்தில் உருவம், அருவம், அருவுருவமாக இறைவன் அருள் பாலிப்பதால் இங்கே உருவம், அருவம், அருவுருவம் என்று மூன்று நிலைகளில் சிவப்பரம்பொருள் காட்சி கொடுப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு.
அதாவது ஆனந்தத் தாண்டவக் கோலத்தில், ஆனந்த நடராஜராகவும், சிவகாமி அம்மையாகவும் காட்சி தருவது "உருவநிலை" யை குறிக்கின்றது. சிவலிங்க ரூபத்தில் திருமூலராகவும், ஸ்ரீசக்ரமாக உமையபார்வதியும் காட்சி தருவது "அருவுருவ நிலை" யைக் குறிக்கின்றது. அடுத்து என்னவென்று புரியாத சிதம்பர சக்கரமாக "அருவமாக" தரிசனம் தருவது தான் "சிதம்பர ரகசியம்".
இந்தப் பிரபஞ்சத்தின் இதய பாகம் என வர்ணிக்கப்பெறும் சிதம்பரம் நகரின் மையத்தில் உள்ள நடராஜர் சந்நிதியில் நடராஜரின் ஊன்றிய காலுக்குக் கீழேதான் பிரபஞ்சம் தோன்றும்போது ஏற்பட்ட வெற்றிடம் உள்ளதாகவும், இந்த மையப் புள்ளியின் மீது நின்று தான் நடராஜர் இடைவிடாது நாட்டியமாடிக் கொண்டு, ஐந்தொழில்களையும் செய்து வருகின்றார் என்பதுவும் ஐதீகம்.
சிதம்பரம் நடராஜர் கோவில், சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் பரிபாலிக்கப்பெறுகின்றது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் வளாகம் சிதம்பரம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பாகும். சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தலம் தில்லை "திருசித்திரக்கூடம்" என்றும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே.
இந்தியாவில் அமைந்துள்ள சிவாலயங்கள் (நடராசர் ஆலயங்கள்) ஐந்து திருச்சபைகளின் பெயரால் அழைக்கப்பெற்று வந்துள்ளன.
1) சிதம்பரத்தில் நடராசர் ஆலையத்தை "கனகசபை" என்றும்;
2) திருவாலங்காடு சிவாலயத்தை "இரத்தினசபை" என்றும்;
3) மதுரையில் அமைந்துள்ள சிவாலயத்தை "வெள்ளிசபை" என்றும்;
4) திருநெல்வேலி சிவாலயத்தை "தாமிரசபை" என்றும்;
5) திருக்குற்றாலம் சிவாலயத்தை "சித்திரசபை" என்றும் அழைக்கப்பெறுகின்றன..

இவை மட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.
1. "சிற்சபை" - இது சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும். முதல் பராந்தக சோழன் இந்த சபைக்கு பொன்னால் ஆன கூரை வேய்ந்தாதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.

2. "கனகசபை" - இது பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. இந்தச் சபைக்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் ஆன கூரைறை வேய்ந்ததாக கூறுவர்.

3. "ராஜசபை" - இது ஒரு ஆயிரம் கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில் இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.

4. "தேவசபை" - இது பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் கூரை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.

5. "நிருத்தசபை" - இந்த சபை கொடிமரத்துக்கு தென்புறத்தில் உள்ளது. இங்குதான் கோபாவேஷம் கொண்டு நடனமாடிய காளியை அடக்க சிவனும் நடனமாடினார் என கூறப்படுகின்றது.

இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் சிவலிங்க வடிவில் இல்லாது நடராஜராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் நடராஜர் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் உடுக்கையை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரத்தி அறுநூறு பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் பொருத்தி வேய்ந்திருக்கின்றனர். நாம் தினம், 21 ஆயிரத்தி அறுநூறு தடவைகள் மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நாடி நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் அமைதுள்ளதாக வரலாறு கூறுகின்றது.
இவ் ஆலயத்திற்கு செல்ல 5 படிகள் அமைக்கப்பெற்றுள்ளன. "சிவாயநம" என்ற பஞ்சாட்சர மந்திரத்தின் அடிப்படையிலேயே அவை அமைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பெறுகின்றது. "சிவாயநம" என சிந்தித்து இருந்தால் இறைவனை அடையலாம் என்பதனை இந்த படிகள் குறித்து நிற்கின்றன.
அத்துடன் 64 கலைகள் அடிப்படையில் 64 சாத்து மரங்களையும், நான்கு வேதங்கள், பஞ்சபூதங்கள் அடிப்படையில் தூண்களையும் கொண்டதாக அமைந்துள்ள அற்புதத் தலமாக இக் கோயில் விளங்குகின்றது.
மனித உடம்பில் ஒன்பது வாசல்கள் இருப்பது போல்; இக் கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வாசல்கள் (வழிகள்) உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த கோபுரம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மன்னனால் கட்டப் பெற்றுள்ளது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன.
மேலும் கிழக்குக் கோபுரத்தின் வாசல் வழியாக மாணிக்கவாசகரும்; தெற்குக் கோபுரத்தின் வாசல் வழியாக திருஞானசம்பந்தரும், மேற்குக் கோபுரத்தின் வாசல் வழியாக திருநாவுக்கரசரும், வடக்கு கோபுரத்தின் வாசல் வழியாக சுந்தரரும் ஆலயத்திற்கு வருகை தந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம்.
இவ் ஆல்லயத்திலும் மற்ற கோவில்களைப் போலவே அறுபத்துமூவர், விநாயகர், முருகன் சந்நிதிகளும் அமைந்துள்ளன. பதஞ்சலி முனிவரும், வியாக்ய பாரதரும் வழிபட்ட சிவலிங்கம் - திருஆதிமூலநாதரும், உமையம்மையும் இவ் வாலயத்தில் எழுந்தருளி உள்ளனர். இங்கு பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ள விநாயகர் சங்கு ஊதுவதை போல காட்சியளிக்கிறார்.
கோவிலின் வளாகத்தில் "சிவகங்கை" எனும் பெயரில் பெரிய குளமும், சிற்சபைக்கு அருகில் "பரமாநந்த கூபம்" எனும் பெயரில் கேணியும் உள்ளன. 500 ஆம் ஆண்டளவில் இங்கு வந்த ஹிரண்ய சக்கரவர்த்தி இந்த சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியதால் தொழுநோய் குணமானதாகவும் வரலாறு கூறுகின்றது.

No comments:

Post a Comment